எண்டே மோனே.. ஓடிடியில் வெளியானது ஆவேசம்.. டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடிக்கு விற்பனையா?
திருவனந்தபுரம்: இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் ஃபாசில் நடித்துள்ள ஆவேசம் திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது.
பிருத்திவிராஜ் நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் திரைப்படம் இன்னமும் ஓடிடியில் வெளியாகவில்லை. 150 கோடி ரூபாய் வசூலை ஈட்டி 40 நாட்களுக்கு மேல் நூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அந்த படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

மலையாள படங்கள் எல்லாம் ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில், ஆடு ஜீவிதம் இன்னமும் வெளியாகவில்லை. ஆனால், ஆவேசம் திரைப்படம் ஷார்ப்பாக 4 வாரங்களில் ஓடிடியில் வெளியாகி விட்டது.
அமேசான் பிரைமில் ஆவேசம்: ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் ஃபாசில், ஹிப்ஸ்டர், மிதுன் ஜெய்சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஆவேசம் திரைப்படம் மே 9-ஆம் தேதி இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆவேசம் பட்ஜெட்: மலையாள திரைப்படங்கள் பொதுவாகவே குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய வசூல் வேட்டையை இந்த ஆண்டு நடத்தி வருகின்றன. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் அதிகபட்சமாக 240 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. பிரேமலு திரைப்படமும் 16 கோடியில் எடுக்கப்பட்டு 120 கோடி வரை வசூல் செய்தது. இந்நிலையில், ஆவேசம் திரைப்படம் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 150 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது.
ஓடிடி விற்பனை படுஜோர்: 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஆவேசம் திரைப்படம் அதிகபட்சமாக 35 கோடி ரூபாய்க்கு அமேசான் பிரைம் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆவேசம் படத்தை பார்க்காமலே அதன் ரீல்ஸ் டிரெண்டான நிலையில், இன்று அந்த படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் அலப்பறையை அதிகப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு பெரிய படங்கள்: பகத் ஃபாசில் நடிப்பில் அடுத்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி புஷ்பா 2 திரைப்படம் வெளியாகிறது. அல்லு அர்ஜுன் நடித்துள்ள அந்த படத்தில் வில்லனாக முதல் பாகத்தில் வந்ததை போலவே இந்த பாகத்திலும் பகத் ஃபாசில் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படத்திலும் பகத் ஃபாசில் நடித்துள்ளார். அக்டோபர் மாதம் அந்த படம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











