Abraham Ozler Review: ஜெயராம் + மம்முட்டி.. கூடவே நிறைய த்ரில்.. மலையாளத்தின் "ராட்சசன்" இந்த ஆபிரகாம் ஓஸ்லர்!
சென்னை: "ஆபிரஹாம் ஓஸ்லர்" (Abraham Ozler). "மிதுன் மனுவேல் தாமஸ்" இயக்கத்தில், "தேனி ஈஸ்வர்" அசத்தல் ஒளிப்பதிவில், "ஜெயராம்" (Jayaram), "மம்முட்டி" (Mammootty) "அனஸ்வரா ராஜன்" உட்பட பலர் நடிப்பில் மலையாளத்தில் ஜனவரி மாதம் வெளியான த்ரில்லர் திரைப்படம். தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடியில் (ozler ott) காணக்கிடைக்கிறது.
மலையாளத்தில் இது த்ரில்லர் மூவிகளுக்கான காலம். ஓடிடியில் குடும்பத்தோடு ஒன்றச் செய்துவிடும் ஜானர் என்பது இதற்கு காரணம். அதன் லேட்டஸ்ட் வரவுதான் ஓஸ்லர்.

அழகான குடும்பத்தோடு காலம் கழிக்கும் ஜெயராமின் வாழ்க்கையில் திடுக்கிடும் திருப்பம் ஏற்படுவதாக படம் ஆரம்பித்து, பிறகு வேறு பக்கம் பயணிக்கிறது. ஆரம்ப காட்சியின் முடிச்சு, க்ளைமேக்சில் அவிழ்க்கப்படுகிறது. அதுவரை அந்த கதையை பார்ப்பவர்கள் மறக்கும் அளவுக்கு அடுத்த கதைக்குள் இரண்டாவது லேயரை பயணிக்க வைத்துள்ளார் இயக்குநர்.
விபத்து அல்லது அரிவாள் வெட்டு என ஏன் குறிப்பிட்ட இளைஞர்கள் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். அவர்கள் குத்துயிரும் குலை உயிருமாக ஏன் குறிப்பிட்ட மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள். அங்கு வைத்து குறிப்பிட்ட பேர்ட்டர்னில் கொலை செய்யப்படுகிறார்கள் என்பதை யாருமே யோசிக்காத கோணத்தில் கொண்டு செல்கிறது திரைக்கதை.
காட்சிக்கு காட்சி யூகிக்க முடியாத திருப்பங்களும், புது முகங்களின் வருகையுமாக இருப்பதாகட்டும், சம்பவங்களின் பதற்றத்தை பார்வையாளர்களுக்கு கடத்துவதாகட்டும், இது இன்னொரு "ராட்சசன்" என்று புகழ வைக்கிறது.
மலையாள த்ரில்லர் படங்கள் ஆரம்பத்தில் மெதுவாகவும் பிறகு வேகமாகவும் நகரக்கூடியவை. ஓஸ்லர் இதில் விதிவிலக்கு. ஆரம்பத்தில் இருந்தே ஐந்தாவது கியரில் படம் பயணிக்கிறது. ஆனால் கடைசி அரை மணி நேரம் சற்று மெல்ல நகரும். அதுவும் நல்லதற்குதான் என்பதை கிளைமேக்ஸ் உணர்த்தும்.
போகிற போக்கில் 2வது பார்ட்டுக்கு அடிபோட்டிருப்பது புரிகிறது. பார்ட் 2 வர அனைத்து தகுதியும் உள்ள படம்தான் இது.
படத்தை ஆரம்பம் முதல் இறுதிவரை தாங்கி பிடிப்பது ஜெயராம்தான். ஆழ்வார்க்கடியானாகவும், கவுண்டமணியுடனும் காமெடி பாத்திரங்களில் பார்த்து பழகிய தமிழ் ரசிகர்களுக்கு ஜெயராம் என்ற நடிப்பு ராட்சசனின் மற்றொரு முகம் ஓஸ்லரில் தெரியும். அவரது கதாப்பாத்திர பெயரையே படத்தின் டைட்டிலாக வைத்திருப்பது அவரது நடிப்புக்கு செய்த சரியான மரியாதை.
ஜெயராம்-மம்முட்டி சேர்ந்து வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு கண்டிப்பாக கூஸ்பம்ப்தான். ஆபாசம் இல்லாவிட்டாலும், ரத்தம் சிதறுவதால் குழந்தைகளோடு பார்க்க முடியாது, ஆனால் மற்ற குடும்ப உறுப்பினர்களோடு பார்க்கலாம். ஹேப்பி வீக் என்ட்!


Click it and Unblock the Notifications











