Kanguva OTT: இவ்வளவு சீக்கிரமா?.. ஓடிடியில் சாதனை படைக்குமா கங்குவா? எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: நடிகர் சூர்யாவின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் 14ம் தேதி வெளியானது கங்குவா படம். மிகப்பெரிய பொருட்செலவுடன் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இந்தப் படத்திற்காக சூர்யா, இயக்குநர் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் மிகப்பெரிய மெனக்கெடலை கொடுத்திருந்தனர்.
மற்ற விஷயங்களில் படம் ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் கதைக்களத்தில் இருந்த சொதப்பல் படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. சர்வதேச அளவில் படம் சிறப்பான வசூலை பெற்றிருந்தாலும் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் தயாரிப்பாளருக்கு கைக்கொடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது

கங்குவா படம்: நடிகர் சூர்யா அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்று இணைந்து வருகிறார். அவரது சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் அவருக்கு மிகச்சிறப்பான வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றுக் கொடுத்தன. இருந்த போதிலும் அதையடுத்து வெளியான எதற்கும் துணிந்தவன் படம் சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. இதனிடையே, இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கடந்த நவம்பர் 14ம் தேதி ரிலீசான கங்குவா படமும் அவருக்கு சொதப்பலாகவே அமைந்துள்ளது. இயக்குநர் சிவா கூட்டணியில் வெளியான இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
சொதப்பிய கங்குவா: மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியான இந்தப் படம் பாகுபலி படங்களை மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழில் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டும் முதல் படம் என்ற பெருமையும் இந்தப் படத்திற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படம் ரசிகர்களை கவரவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்றது. சர்வதேச அளவில் 14,000 திரையரங்குகளில் இந்தப் படம் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியான நிலையில், படத்தின் கதைக்களம் அதிகமான விமர்சனங்களுக்கு உள்ளானது. படத்தில் கதையே இல்லை என்றே விமர்சனங்களை பெற்றது.

கங்குவா ஓடிடி அப்டேட்: இதனிடையே இந்தப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. படம் டிசம்பர் 8ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திரையில் இந்தப்படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியானது. இதனால் அடுத்தடுத்த படத்தின் டீடெயிலிங்கை பார்க்க முடியாமல் போனதாகவும் ரசிகர்கள் குறை கொட்டிக் கொண்டனர். இந்நிலையில் கங்குவா படத்தை ஓடிடியில் பார்க்கவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பிரம்மாண்ட காட்சிகள்: கதைக்களத்தில் இந்தப் படம் சொதப்பினாலும் அடுத்தடுத்த காட்சிகளின் பிரம்மாண்டங்கள் பேசப்பட்டன. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் சூர்யா சிறப்பாகவே செயல்பட்டிருந்தார். இந்தப்படத்தின் முதலை ஃபைட் காட்சிக்காக 40 நாட்கள் படக்குழுவினர் மெனக்கெட்டதாகவும் 4 நாட்கள் தண்ணீரிலேயே இந்த காட்சிக்காக சூர்யா பைட் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தக் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். படம் ஓடிடியில் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications











