அடிமேல் அடிவாங்கும் நெட்பிளிக்ஸ்.. சர்வர் டவுன் முதல் ஜேம்ஸ் கேமரூனின் ஆஸ்கர் பஞ்சாயத்து வரை!
லாஸ் ஏஞ்சல்ஸ்: உலக அளவில் மிகவும் பிரபலமான ஓடிடி தளங்களில் ஒன்றான நெட்பிளிக்ஸ், நேற்று புதன்கிழமை (நவம்பர் 26) மாலை திடீரென செயலிழந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அதன் பிரமாண்டமான தொடரான 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5' வெளியான நேரத்தில் இந்தச் செயலிழப்பு ஏற்பட்டது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
'டவுன்டிடெக்டர்' தளத்தின் தகவலின்படி, நெட்ப்ளிக்ஸ் சேவை தடைபட்டபோது 10,000-க்கும் மேற்பட்ட பயனாளர்கள் சிக்கல்களை எதிர்கொண்டதாக அறியப்படுகிறது. புகார் அளித்தவர்களில் 51% பேர் வீடியோ ஸ்ட்ரீமிங் தொடர்பான சிக்கல்களையும், 41% பேர் சர்வர் இணைப்புப் பிரச்சினைகளையும் குறிப்பிட்டனர். இந்தச் சிக்கல் அமெரிக்க நேரப்படி மாலை 5 மணிக்குத் தொடங்கியது.

இந்தச் செயலிழப்புக்கான சரியான காரணம் குறித்து நெட்பிளிக்ஸ் இன்னும் அதிகாரப்பூர்வமாக விளக்கமளிக்கவில்லை. இருப்பினும், 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5' வெளியானதால், ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் தளத்திற்குள் நுழைய முயன்றதால் ஏற்பட்ட சர்வர் நெரிசலே காரணம் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கிண்டலாகப் பதிவிட்டு வருகின்றனர்.
"இவ்வளவு நேரம் காத்திருந்து ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரைப் பார்க்க வந்தா நெட்ப்ளிக்ஸ் செயலிழந்து போச்சு," என ஒரு பயனர் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டிருந்தார். மற்றொருவர், "ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீரிஸில் அதிகமாக பேர் வந்ததாலே நெட்பிளிக்ஸ் முடங்கிப் போச்சு" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, ஜூலை 2022-ல், 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 4-இன்' இறுதி இரண்டு எபிசோட்கள் வெளியானபோதும் நெட்பிளிக்ஸ் தளத்தில் ஒரு சிறிய செயலிழப்பு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் டைட்டானிக், அவதார் படங்களின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தனது பங்கிற்கு நெட்பிளிக்ஸிற்கு நெருக்கடி கொடுத்துள்ளார். ஏற்கனவே எலான் மஸ்க் உள்ளிட்ட பலரும் நெட்பிளிக்ஸ் எதிர்ப்பு பிரசாரத்தை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

2019 ஆம் ஆண்டு முதல் 10 ஆஸ்கர் விருதுப் பரிந்துரைகளைப் பெற்றிருந்தாலும், நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு இன்னும் ஆஸ்கர் கனவு எட்டாத ஒன்றாகவே உள்ளது. 300 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட இந்த ஸ்ட்ரீமிங் நிறுவனம் முயற்சி செய்யாமல் இல்லை.
குறிப்பாக "ரோமா", "தி பவர் ஆஃப் தி டாக்" போன்ற படங்களின் மூலம் ஆஸ்கருக்கு மிக நெருக்கமாக வந்தது. நெட்பிளிக்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை, ஒரு ஆஸ்கர் விருது அதன் வணிக உத்தியையும், சினிமாக்கள் மற்றும் திரையரங்குகளுக்கு அது ஏற்படுத்தியிருக்கும் நெருக்கடியையும் சட்டபூர்வமாக்கும் என்று கருதுகிறது.
ஆனால், ஜேம்ஸ் கேமரூனைப் பொறுத்தவரை, இந்த ஆஸ்கர் வெற்றி இன்மை தொடர வேண்டும். மேத்யூ பெல்லோனியின் "தி டவுன் வித் மேத்யூ பெல்லோனி" போட்காஸ்ட்டில் கேமரூன் அளித்த பேட்டியில், வார்னர் பிரதர்ஸை நெட்பிளிக்ஸ் கையகப்படுத்த முயற்சிப்பது குறித்துக் கேட்கப்பட்டபோது, அவர் தனது கருத்துக்களைத் தயக்கமின்றி வெளியிட்டார்.
"பாராமாவுண்ட் சிறந்த தேர்வாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்று கேமரூன் கூறினார். "நெட்பிளிக்ஸ் ஒரு பேரழிவாக இருக்கும். டெட் (நெட்ஃபிக்ஸ் CEO டெட் சாரண்டோஸ்) மன்னிப்பு கேட்க வேண்டும். சாரண்டோஸ் ஏற்கனவே திரையரங்க படங்கள் இறந்துவிட்டதாகப் பகிரங்கமாகக் கூறியுள்ளார். 'திரையரங்கு இறந்துவிட்டது' என்பது அவரது வார்த்தைகள்."
சாரண்டோஸ் "வார்னர் பிரதர்ஸ்ஸை வாங்கினால் திரையரங்குகளில் வெளியிடுவதாக இப்போது உறுதியளிக்கிறார்" என்று பெல்லோனி கூறியபோது, கேமரூன் பதிலளித்தார்: "இது ஒரு ஏமாற்று வேலை. 'நாங்கள் திரைப்படத்தை ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு வெளியிடுவோம். ஆஸ்கர் பரிசீலனைக்குத் தகுதி பெறுவோம்.' இது அடிப்படையிலேயே மோசமானது என்று நான் நினைக்கிறேன்.
ஒரு திரைப்படம் திரையரங்கிற்காகவே உருவாக்கப்பட வேண்டும். திரையரங்குகளுக்கு ஆஸ்கர் விருதுகள் முக்கியத்துவம் இல்லை என்றால், எனக்கும் அவை முக்கியமல்ல. அவை ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன என்று நான் நினைக்கிறேன், இது திகிலூட்டுகிறது."
நெட்பிளிக்ஸ் திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுகளுக்குத் தகுதி பெற அனுமதிக்கப்பட வேண்டுமா என்று கேட்டபோது, நெட்பிளிக்ஸ் தங்கள் வெளியீட்டு உத்தியை மாற்றாதவரை அனுமதிக்கப்படக் கூடாது என்று கேமரூன் கூறினார். "
டிசம்பர் இறுதியில் தியேட்டரில் பிரமாண்டமாக ஜேம்ஸ் கேமரூனின் அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











