விஜய்யின் அறிவிப்பால் சந்தோஷத்தில் ஓடிடி நிறுவனங்கள்?.. அஜித்தும் இல்லைன்னா தியேட்டர்களின் நிலை?
சென்னை: இப்பவே புதிய படங்கள் வெளியானாலும் படத்தை பார்க்க ரசிகர்கள் தியேட்டர் பக்கமே செல்வதில்லை. பொறுமையாக 4 வாரத்தில் ஓடிடியிலும் 2 அல்லது 3 வாரத்தில் திருட்டுத்தனமாக ஹெச்டி பிரின்ட் வந்து விடுகிறது என வீட்டிலேயே அதுவும் ஸ்மார்ட் போனிலேயே படங்களை பார்க்கத் தொடங்கி விட்டனர் ரசிகர்கள்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் படங்கள் தான் தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைத்து தியேட்டர் உரிமையாளர்களை வாழ வைத்து வருகின்றன. இந்த ஆண்டு பொங்கலுக்கு சிவகார்த்திகேயன், தனுஷ் நடித்த படங்களுக்கே தியேட்டரில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை.

தியேட்டர் ஹீரோக்கள்: கொரானாவுக்கு பிறகு தியேட்டருக்கு செல்ல அஞ்சிய மக்களை மாஸ்டர் மூலம் விஜய் தியேட்டருக்கு கொண்டு வந்தார். தமிழ் சினிமாவில் தியேட்டர் ஹீரோக்கள் என 4 ஹீரோக்களை மட்டுமே ரசிகர்கள் இப்போது வைத்திருக்கின்றனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் மற்றும் அஜித் படங்கள் வெளியானால் நல்லா இருக்கோ இல்லையோ ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம் என ரசிகர்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். இந்த 4 பேரை தாண்டி மற்ற எந்த நடிகர் படங்களாக இருந்தாலும் வரலாற்று படமாகவோ, பிரம்மாண்ட படமாகவோ, சூப்பர் ஹிட் அடித்தால் தான் தியேட்டர் பக்கம் மக்கள் செல்ல யோசிக்கின்றனர்.
சூர்யா முதல் சிவகார்த்திகேயன் வரை: சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் முதல் சமீபத்தில் வெளியான தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயனின் ஏலியன் படமான அயலான் படங்கள் வரை மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படை எடுத்துச் செல்லவில்லை. கோலிவுட்டின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரங்களாக இவர்கள் இருந்தாலும், இன்னமும் ரசிகர்களை தியேட்டரை நோக்கி இழுக்கும் அளவுக்கு சக்தி இவர்களிடம் இல்லை. தேஜா சஜ்ஜா எனும் சாதாரண தெலுங்கு ஹீரோ ஹனுமான் படத்தின் மூலம் 300 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஈட்டியிருக்கிறார். பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராம் சரண், ஜூனியர் என்டிஆர் என தெலுங்கில் ஏகப்பட்ட பாக்ஸ் ஆபிஸ் ஹீரோக்கள் உள்ளனர். ஆனால், தமிழில் அது ரொம்பவே குறைவாக உள்ளது.
ஓடிடி நிறுவனங்கள் உற்சாகம்: அஜித் ஏற்கனவே 2 வருஷத்துக்கு ஒரு படம் என்கிற ரீதியில் தான் நடித்து வருகிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன் தான் தற்போது கோலிவுட்டை காப்பாற்ற இந்த வயதிலும் ஓவர் டைம் பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு பிறகு விஜய், அஜித்தும் சினிமாவில் இருந்து விலகி விட்டால் ஓடிடியில் தமிழ் படங்கள் ஒரு வார ரிலீஸுக்கு பிறகும் பல படங்கள் நேரடியாக ஓடிடி ரிலீஸாகவே வந்து விடும் சூழல் இருப்பதாகவும் கணித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு தெரிந்து விடும்: சூர்யாவின் கங்குவா, சிவகார்த்திகேயனின் எஸ்கே 21, கவினின் ஸ்டார், தனுஷின் அடுத்தடுத்த படங்கள் மூலம் இந்த ஆண்டு கோலிவுட்டின் எதிர்காலம் தெளிவாக தெரிந்து விடும் என்கின்றனர். விஜய், அஜித் இல்லை என்றாலும், தியேட்டருக்கு ரசிகர்களை அழைத்து வர வேண்டும் என்றால் ராஜமெளலி, பிரசாந்த் நீல் போல இங்கே இயக்குநர்கள் பெரிய அளவில் உருவானால் தான் உண்டு என்றும் கூறுகின்றனர். லோகேஷ் கனகராஜ் மட்டுமே எத்தனை படங்களை இயக்க முடியும். திறமையான இயக்குநர்கள் நல்ல கதையுடன் வந்து ஹீரோக்களை செதுக்கினால் தான் பான் இந்தியா அளவில் படங்கள் வந்தால் தான் தியேட்டர் பாக்ஸ் ஆபிஸ் ஸ்ட்ராங்காகும் என்றும் இல்லையென்றால் மற்ற மாநிலங்கள் முன்னேறி சென்று விடும்.


Click it and Unblock the Notifications











