காணாமல் போன ஹார்ட் டிஸ்க் கிடைச்சாச்சு.. லால் சலாம் விரைவில் ஓடிடியில்.. ஐஸ்வர்யா பேட்டி!
சென்னை: லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் திரைப்படம் பிப்ரவரி மாதம் தியேட்டரில் வெளியானது. அதில், ரஜினிகாந்த், விஷ்ணுவிஷால், விக்ராந்த் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் தோல்விப்படமாக அமைந்தது கடும் விமர்சனத்திற்குள்ளானது.
70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் வெறும் 16 கோடியை மட்டுமே வசூலித்தது. இதற்கு ஹார்ட் டிஸ்க் தொலைந்தது தான் காரணம் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், தற்போது, தொலைந்துபோன காட்சிகள் சிலவற்றை மீட்டுள்ளதாகவும் விரைவில் படம் ஓடிடியில் வெளியாகும் என்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3 திரைப்படத்தை இயக்கினார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு எந்த படத்தையும் இயக்காமல் இருந்த ஐஸ்வர்யா, தனுஷை பிரிந்த பின், பயணி என்ற ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்டார். அதைதொடர்ந்து, லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்த லால் சலாம் படத்தை இயக்கினார். இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். ரஜினிகாந்த் இப்படத்தில் மொய்தீன் பாய் என்கிற சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த படம் படு தோல்வி திரைப்படமாக அமைந்தது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: இதுகுறித்து பேசிய இயக்குநர் ஐஸ்வர்யா, அதில், லால் சலாம் படப்பிடிப்பில் 21 நாள்கள் எடுத்த காட்சிகள் காணாமல் போய்விட்டது. ஆயிரக்கணக்கான பேர் சூழ, 10 கேமராக்கள் வைத்துத் கிரிக்கெட் போட்டியை படப்பிடிப்பு செய்திருந்தோம். அவையனைத்தும் காணாமல் போய்விட்டது. மீண்டும் படப்பிடிப்பு நடத்தி அந்த காட்சிகளை எடுக்கலாம் என்று சொன்னார்கள். ஆனால், அது கடினமானது என்பதால் இருக்கும் காட்சிகளை வைத்தே எடிட் செய்து படத்தை வெளியிட்டோம்.
கடும் விமர்சனம்: அந்த ஹார்ட் டிஸ்க் தொலையாமல் இருந்திருந்தால் நாங்கள் சொல்ல வந்ததை இன்னும் தெளிவாகக் கூறியிருப்போம் என்றார். மேலும், தனது தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டதாகவும். ஒரு இயக்குநராக இது தனக்கு பெரிய அனுபவமாக இருந்ததாகவும் அந்த பேட்டியில் பேசி இருந்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியான ரஜினி ரசிகர், ஜெயிலர் என்ற மாஸ் ஹிட்கொடுத்த ரஜினியை இந்த படத்தில் நடிக்கவைத்துவிட்டு, இப்படி பொறுப்பு இல்லாமல் ஹார்ட் டிஸ்க் தொலைந்துவிட்டது என்று சொல்லுவது சரியா என கடுமையாக விமர்சித்தனர்.
விரைவில் ஓடிடியில்: இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்துள்ள பேட்டியில், தொலைந்து போன ஹார்ட் டிஸ்கில் இருந்து சில காட்சிகளை மீட்டுள்ளோம். இந்த காட்சிகளை உள்ளடக்கிய டைரக்டர்ஸ் கட் ஒன்று ஓடிடியில் வெளியாகும் என்றும், திரையரங்கில் வெளியானதை விட ஓடிடியில் வெளியாகும் பிரதி முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். அது நான் எடுக்க நினைத்த படமாக இருக்கும் என்று ஐஸ்வர்யா கூறியுள்ளார். ஏற்கனவே லால் சலாம் ஓடிடி ரிலீஸ் குறித்து பல போலி செய்திகள் பரவிய நிலையில், லால் சலாம் திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











