போடு வெடிய.. ஓடிடியில் வெளியானது அஜித்தின் குட் பேட் அக்லி.. சாதனை படைக்குமா?
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இதற்கு முன்னதாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இப்படத்தின் மீது உச்சபட்ச எதிர்பார்ப்பு இருந்தது. இதில் அஜித்துடன் திரிஷா, பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். படத்துக்கு ஏகே ரசிகர்களிடையே அதீத வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க கமிட்டானபோது கண்டிப்பாக அப்படம் கோலிவுட்டில் ஒரு பெஞ்ச் மார்க்காக இருக்கும் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. மாறாக படம் படுதோல்வியை சந்தித்தது. அந்தத் தோல்விக்கு காரணம் அஜித்துக்கு மாஸ் சீன்கள் இல்லாதது என அவரது ரசிகர்கள் சொன்னாலும்; விடாமுயற்சி படத்தின் கதையில் அஜித்தின் தலையீடு அதிகம் இருந்ததுதான் முக்கியமான காரணம் என்று திரைத்துறையினர் சொல்கிறார்கள்.
குட் பேட் அக்லி: அப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க கமிட்டானார். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க; முதலில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் உள்ளே வந்தார். அஜித்தின் தீவிரமான ரசிகர் ஆதிக் என்பதால் இப்படத்தின் மீது திரைத்துறையில் பலருக்கும் ஆர்வம் இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த ஆர்வத்தோடு படம் பார்க்க சென்றார்கள்.

ஏகே ரசிகர்களுக்கு கொண்டாட்டமான படம்: அஜித் ரசிகர்களை பொறுத்தவரை குட் பேட் அக்லி திரைப்படத்தை கொண்டாடினார்கள். விடாமுயற்சியில் அஜித்துக்கான மொமண்ட்ஸ் எதுவுமே இல்லாமல் இருந்ததால் அவர்கள் அப்செட்டில் இருந்தார். அந்த அப்செட்டுக்கு மருந்திடும் வகையில் இப்படத்தில் அஜித்துக்காக ஏகப்பட்ட மாஸ் சீன்களை வைத்திருந்தார் இயக்குநர். இதன் காரணமாகவே குட் பேட் அக்லி அஜித் ரசிகர்களில் பெரும்பாலானோருக்கு கனெக்ட் ஆகிவிட்டது. தியேட்டர்களில் அவர்கள் கொண்டாடி தீர்த்தார்கள்.
விமர்சனத்தை சந்தித்த படம்: அதேசமயம் பொதுவான ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை. அவர்கள் ஏகப்பட்ட குறையை சொன்னார்கள். அதிலும் வில்லனுக்கு ஒத்த ரூபா தாரேன் பாடல், தொட்டு தொட்டு பேசும் சுல்தானா, புன்னகை அரசி டயலாக், வாலி இசையை பயன்படுத்தியது என லிஸ்ட் நீண்டு கொண்டே சென்றது. அதுமட்டுமின்றி ரெட்ரோ பாடல்களை தேவைப்பட்டால் பயன்படுத்தலாம்; ஆதிக்கோ அந்தப் பாடல்களை பயன்படுத்த வேண்டுமென்பதற்கான தேவையை உருவாக்கிக்கொண்டார். இதனால் அவையெல்லாம் கொஞ்சம் ஓவர் டோஸாகிவிட்டது ஓபனாக அடித்தார்கள்.
ஃபேன் பாய் சம்பவமா?: முக்கியமாக இந்தப் படம் வெளியாவதற்கு முன்னர் யார் பேசினாலும், இது கண்டிப்பாக ஆதிக்கின் ஃபேன் பாய் படமாக இருக்கும் என்றுதான் சொன்னார்கள். படத்தை பார்த்த பிறகோ, இதுதான் ஃபேன் பாய் சம்பவமா என்று நொந்துகொண்டார்கள். அஜித்தை புகழ வேண்டுமென்றால் தனியாக செய்துகொள்ளலாமே எதற்காக இத்தனை கோடி ரூபாயில் படத்தை எடுத்து மற்றவர்களை நோகடிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே இருக்கிறார்கள் ஒருதரப்பினர்.
ஓடிடி ரிலீஸ்: இப்படி நெகட்டிவ் விமர்சனங்கள் படத்தை சுற்றினாலும் வசூல் ரீதியாக குட் பேட் அக்லி சக்கைப்போடு போட்டு உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் படம் வெளியாகியிருக்கிறது. தியேட்டர்களில் வெளியானபோது வசூல் ரீதியாக படம் சாதனை செய்தது போல் ஓடிடியில் வியூஸ் சாதனை படைக்குமா இல்லை நெகட்டிவ் விமர்சனங்களால் தடுமாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கிடையே தமன்னா நடித்த ஒடேலா 2 திரைப்படமும் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை வெளியாவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











