அகிலின் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் படம்... ஆஹா ஓடிடியில் வெளியீடு
ஐதராபாத் : நடிகர் அகில் அக்கினேனி, பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள படம் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்.
இந்தப் படம் ரொமாண்டிக் படமாக வெளியாகி ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகளில் சிறப்பாக ஓடியும் வருகிறது.
இந்நிலையில் இந்தப் படம் ஆஹா ஓடிடி தளத்தில் வரும் 19ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அகில் அக்கினேனி
நடிகர் அகில் அக்கினேனி கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு படவுலகில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருடைய தந்தை நாகர்ஜூனா மற்றும் சகோதரர் நாக சைத்தன்யா உள்ளிட்டவர்களும் சிறந்த ஹீரோக்களாக உள்ள நிலையில் இவரும் தன்னை தெலுங்குப் படவுலகில் நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

வித்தியாசமான கதைக்களம்
தான் எப்போதுமே வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதையே விரும்புவதாகவும் சேலஞ்சிங்கான கதைகளை தேர்ந்தெடுப்பது ரிஸ்க் என்றாலும் அத்தகைய கதைகளுக்கு ரசிகர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றும் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்
கடந்த 2015ல் அகில் படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் தொடர்ந்து ஹலோ, மிஸ்டர் மஞ்சு உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் படம் மிகச்சிறந்த வெற்றியை கொடுத்துள்ளது.

பூஜா ஹெக்டே ஜோடி
இதில் இவருக்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே. படத்தில் இவர்களுக்கு இடையிலான ரொமான்ஸ் பெரிதும் பேசப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பொம்மரிலு பாஸ்கர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் காதலை தாண்டி அதிகமான விஷயங்கள் இருந்ததாலேயே இந்தப் படத்தை தான் ஒப்புக் கொண்டதாக அகில் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்தில் ரிலீஸ்
கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டாக ரிலீசுக்காக காத்திருந்த இந்தப் படம் கடந்த அக்டோபர் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. சிறப்பான வெற்றியையும் பெற்றுள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் வெற்றியை நாகர்ஜூனா உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் படக்குழுவினர் கொண்டாடினர்.

ஆஹா ஓடிடியில் ரிலீஸ்
இந்நிலையில் இந்தப் படம் வரும் 19ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் புதிய ட்ரெயிலர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அகில் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு சிறப்பான வரவேற்பு உள்ள நிலையில் ஓடிடி தளத்திலும் இந்தப் படம் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications