OTT Release: 'கூலி'க்கு போட்டியாக.. ஓடிடியில் இந்த வாரம் வெளியான படங்களின் லிஸ்ட்!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படமான கூலி நேற்று தியேட்டரில் வெளியாகி நல்ல வசூலை அள்ளி உள்ளது. பெரிய பட்ஜெட் படம் என்பதால், இந்த படத்தோடு எந்த படமும் வெளியாகாத நிலையில், ஓடிடி தளத்தில் பல படங்கள் வெளியாகி உள்ளன. அது எந்தெந்த படங்கள் என்று பார்க்கலாம்.
அஃகேனம்: நடிகர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் என பன்முகத் திறமையாளரான அருண் பாண்டியன் 'ஊமை விழிகள்' படத்தின் மூலம் பிரபலமானார். இவரது மகளான கீர்த்தி பாண்டியன் மற்றும் அசோக் பாண்டியன் இணைந்து நடித்திருக்கும் படம் 'அஃகேனம்'. கே.உதய் இயக்கி இருக்கும் இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன், அருண் பாண்டியனுடன் இணைந்து பிரவீன் ராஜா, ரமேஷ் திலக், ஆதித்யா மேனன், சீதா, ஆதித்யா ஷிவ்பிங்க், எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஜூலை 4ந் தேதி தியேட்டரில் வெளியான நிலையில், ஆஹா ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.

JSK ஜானகி v/s ஸ்டேட் ஆப் கேரளா: ஜானகி vs ஸ்டேட் ஆப் கேரளா படத்தை பிரவீன் நாராயணன் எழுதி இயக்கி உள்ளார். இப்படத்தில், சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் நீதிமன்றத்தில் வாதங்களுடன் கூடிய திரில்லர் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நாயகிக்கு நீதி கேட்டு போராடி பெற்றுக்கொடுக்கு வழக்கறிஞராக சுரேஷ் கோபியும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான ஜானகி வேடத்தில் அனுபமா பரமேஸ்வரனும் நடித்துள்ளனர். மேலும், மாதவ் சுரேஷ், திவ்யா பிள்ளை, பைஜு சந்தோஷ், கோட்டயம் ரமேஷ், ஸ்ருதி ராமச்சந்திரன் ஆகியோர் நடித்த இப்படம் கடந்த மாதம் வெளியான நிலையில், தற்போது இப்படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் இன்று முதல் பார்க்கலாம்.
யாதும் அறியான்: அறிமுக இயக்குனர் எம். கோபி இயக்கத்தில் அப்பு குட்டி, தம்பி ராமையா, தினேஷ், பிரனா, ஆனந்த் பாண்டி மற்றும் ஷியாமளா ஆகியோர் நடித்துள்ள யாதும் அறியான் படம் கடந்த மாதம் 18ந் தேதி திரையரங்கில் வெளியானது. தமிழ் சினிமாவில் ஒரு புதுமையான உளவியல் திரில்லர் திரைப்படமான இப்படத்திற்கு தார்ம பிரகாஷ் இசையமைத்துள்ளார். கலவையான விமர்சனத்தை பெற்ற இத்திரைப்படம் இப்படத்தை சிம்பிளி சவுத் மற்றும் ஆஹா தமிழ் ஆகிய ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
குட் டே: அரவிந்தன் இயக்கத்தில் பிரித்திவிராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், மைனா நந்தினி, பக்ஸ், வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'குட் டே'. இப்படம் கடந்த மாதம் ஜூன் 27ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படம் சன் நெக்ஸ்ட் தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.
அந்தேரா: அந்தேரா ஒரு சுவாரசியமான வெப் தொடராகும். இதில், இரகசியங்கள், துரோகம் மற்றும் அழுத்தத்தின் கீழ் மனித ஆன்மாவை ஆராய்வதற்கான ஒரு இருண்ட, சுவாரஸ்யமான கதையாகும். இதில், பிரியா பாபட், கரண்வீர் மல்ஹோத்ரா, பிரஜக்தா கோலி மற்றும் சுர்வீன் சாவ்லா ஆகியோர் நடித்துள்ளனர். ஒவ்வொரு எபிசோடும் புதிய மர்மங்கள், சிக்கல்கள், பதட்டமான சுவாரசியமான கதையை கொண்டதாக உள்ளது. இந்த வெப் தொடர் நேற்று அமேசான் பிரைம் வீடியோவில் இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











