Oscars 2024: ஆஸ்கர் 2024 விருது விழா.. இந்தியாவில் எந்த நேரத்தில் எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
சென்னை: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் தான் ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது விழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. சினிமா உலகின் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஆனால், இது பெரும்பாலும் அமெரிக்க படங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அயல்மொழித் திரைப்படங்கள் பிரிவில் மற்ற நாடுகளில் இருந்து அனுப்பப்படும் படங்களில் ஒரே ஒரு படத்தை தேர்வு செய்து விருது கொடுக்கிறது.
இந்தியா சார்பில் அனுப்பப்படும் படங்களை தாண்டி தனியாகவும் ஆஸ்கருக்கு படங்களை போட்டிக்கு அனுப்பலாம். அப்படி அனுப்பப்பட்டுத் தான் ஆர்ஆர்ஆர் திரைப்படம் சிறந்த இசை மற்றும் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதுகளை அள்ளின.

இந்த ஆண்டு இந்திய படங்கள் பெரிதாக போட்டியிடவில்லை என்றாலும், ஆஸ்கர் விருது விழாவை இந்திய ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் ஒவ்வொரு வருடமும் கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் எந்த நேரத்தில், எந்த ஓடிடியில் ஆஸ்கர் விருது விழாவை கண்டு ரசிக்கலாம் என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..
96வது ஆஸ்கர் விருது விழா: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள 96வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்கா நாள் மற்றும் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மார்ச் 10ம் தேதி நடைபெறும். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் நடக்க உள்ள நிகழ்ச்சியில் 4வது முறையாக பிரபல தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்க உள்ளார்.
இந்தியாவில் எப்போது பார்க்கலாம்: ஆஸ்கர் விருது விழா உலகம் முழுவதும் லைவ் டெலிகாஸ்ட் செய்யப்படுகிறது. அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடக்கும் இந்த மிகப்பெரிய விருது விழா இந்தியாவில் வரும் திங்கட்கிழமை மார்ச் 11ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாலை 4 மணியளவிலேயே ரெட் கார்ப்பெட் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடங்கி விடும் விருது வழங்கும் நிகழ்ச்சி காலை 5.30 மணிக்குத் தான் தொடங்குகிறது.
எந்த ஓடிடி தளத்தில்?: ஏபிசி தொலைக்காட்சியில் வழக்கமாக ஆஸ்கர் விருது விழா லைவ் செய்யப்படும். அதை தாண்டி இந்தியாவில் ரசிகர்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஆஸ்கர் விருது விழாவை லைவ் ஸ்ட்ரீமிங்காக கண்டு ரசிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓபன்ஹெய்மர் vs பார்பி: பாக்ஸ் ஆபிஸில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் படத்தை மார்கட் ராபி நடித்த பார்பி படம் வீழ்த்தினாலும், ஆஸ்கரில் அதிக பிரிவுகளில் நாமினேட் ஆகி ஓபன்ஹெய்மர் தான் மாஸ் காட்டுகிறது. அதிகபட்சமாக 13 பிரிவுகளில் நாமினேட் ஆகி உள்ளது ஓபன்ஹெய்மர். சிறந்த இயக்குநர் பிரிவில் கிறிஸ்டோபர் நோலன் போட்டியிடும் நிலையில், அவருக்கு விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8 பிரிவுகளில் பார்பி திரைப்படம் நாமினேட் ஆகி உள்ளது.
டாப் படங்கள்: ஓபன்ஹெய்மர், பார்பி படங்களை தொடர்ந்து கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன், புவர் திங்ஸ், அமெரிக்கன் சைக்கோ, அனாடமி ஆஃப் ஃபால், மேஸ்ட்ரோ உள்ளிட்ட பல படங்கள் ஆஸ்கர் போட்டியில் உள்ளன. இந்த படங்கள் சிறந்த படத்துக்கான போட்டியிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











