The Elephant Whisperersக்கு விமானத்தில் பாராட்டு.. நெகிழ்ந்துபோன பொம்மன், பெள்ளி
மும்பை: ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மனுக்கும், பெள்ளிக்கும் இண்டிகோ விமானத்தில் பயணித்தவர்களும், விமானியும் கைத்தட்டி பாராட்டு தெரிவித்து வரவேற்பு கொடுத்தனர்.
முதுமலை புலிகள் காப்பகத்தில் இருக்கும்தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன் மற்றும் பெள்ளி என இரண்டு யானை பராமரிப்பாளர்கள் இருக்கின்றனர். அவர்கள் ரகு என்ற யானையையும் அம்மு என்ற யானையையும் குட்டியிலிருந்து பராமரித்தார்கள். அது தொடர்பாக ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதை வென்றது.

கார்த்திகியின் The Elephant Whisperers
தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மனும், பெள்ளியும் ரகு என்ற யானை குட்டியை தங்களது சொந்த பிள்ளை போல வளர்த்துவந்தனர். அதேபோல் அம்மு என்ற யானை குட்டியையும் வளர்த்தனர். அந்த இரண்டு யானை குட்டிகளை பொறுத்தவரை தங்களது தாய்,தந்தை பெள்ளியும், பொம்மனும்தான். அப்படித்தான் அவர்களது பேச்சை ரகுவும், அம்முவும் கேட்டு நடந்தனர். இதனை புகைப்பட கலைஞரும், ஆவணப்பட இயக்குநருமான கார்த்திகி ஆவண குறும்படமாக இயக்கினார்.

நெட்ஃப்ளிஸில் வெளியாகி ஆஸ்கர் வென்ற The Elephant Whisperers
இந்த ஆவண குறும்படம் கடந்த வருடம் டிசம்பர் 8ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸானது. இதனைப் பார்த்த ரசிகர்கள் மிகச்சிறந்த ஆவண படங்களில் இதுவும் ஒன்று என புகழாரம் சூட்டி சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெறும் என கணித்தனர். அதன்படி The elephant whisperersக்கு சிறந்த ஆவண குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருது கிடைத்தது. அதனை படத்தின் இயக்குநர் கார்த்திகி பெற்றுக்கொண்டார்.

மும்பையில் நடந்த பாராட்டு விழா
இந்நிலையில் The Elephant Whisperers படம் ஆஸ்கர் விருது வென்றதையொட்டி படக்குழுவினருக்கு மும்பையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் ஆவண குறும்படத்தின் இயக்குநர் கார்த்திகி, அப்படத்தின் தயாரிப்பாளர் கலந்துகொண்டனர். குறிப்பாக ஆவண குறும்படத்தில் நடித்த பொம்மனும், பெள்ளியும் அந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்டனர். அவ்விழாவில் அவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இண்டிகோ விமானத்தில் கிடைத்த வரவேற்பு
பாராட்டு விழாவை முடித்துவிட்டு இருவரும் நேற்று மாலை மும்பையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் கோவைக்கு திரும்பினர். பொம்மனும், பெள்ளியும் இண்டிகோ விமானத்தில் பயணிப்பது விமானிக்கு தெரியவர உடனே அவர் காக்பிட்டிலிருந்து வெளியே வந்து, "ஆஸ்கர் விருது வென்ற ஆவண குறும்படத்தின் கலைஞர்கள் பொம்மனும், பெள்ளியும் நம்முடன் பயணிக்கிறார்கள். இது நமக்கு பெருமையான தருணம். இவர்கள் உண்மையான மனிதர்கள். அவர்களை நாம் கைதட்டி உற்சாகமாக வரவேற்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

கைத்தட்டி பாராட்டிய பயணிகள்
அதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் எழுந்து கைத்தட்டி பாராட்டு தெரிவித்து வரவேற்பு கொடுத்தனர். இதனைப் பார்த்த பொம்மன் மற்றும் பெள்ளி தங்களது இரு கரங்களையும் கூப்பி அவர்களுக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்து அவர்கள் கொடுத்த வரவேற்பை ஏற்றுக்கொண்டனர். இந்தக் காட்சி மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











