Call Me Bae Review: கள்ளத்தொடர்பு.. ஓவர் நைட்டில் நடுத்தெருவுக்கு வரும் கோடீஸ்வரி.. புது வெப்சீரிஸ்!
மும்பை: அமேசான் பிரைம் ஓடிடியில் அனன்யா பாண்டே லீடு ரோலில் நடித்துள்ள 'Call Me Bae' வெப்சீரிஸ் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியிருக்கிறது. பெரும் கோடீஸ்வரரை திருமணம் செய்துக் கொண்டு ராணி போல வாழ்ந்து வரும் பெண்ணுக்கு ஜிம் டிரெய்னர் மீது ஏற்படும் மோகம் காரணமாக அவரது வாழ்க்கை அடுத்த நொடியே நடுத்தெருவுக்கு வருகிறது.
டெல்லியில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு போய் கொஞ்சம் காலம் இரு, பிரச்சனைகளை சரி செய்கிறோம் என அம்மா சொல்லியும் கேட்காமல், மும்பைக்கு அண்ணனின் உதவியை நாடி வரும் பேவுக்கு அண்ணனும் உதவவில்லை.

மும்பையில் அண்ணன் மட்டுமின்றி அவளது கணவனும் அங்கே தான் பிசினஸ் செய்கிறார்கள். மீண்டும் கணவரிடம் மன்னிப்புக் கேட்டு பார்த்தாலும் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட அந்த பணக்கார கோடீஸ்வர பிசினஸ்மேன் கழட்டி விட அவன் அணிவித்த திருமண மோதிரத்தை கழட்டி கொடுத்து விட்டு மும்பையில் தனியாக வாழ்ந்து காட்டுகிறேன் என களமிறங்கும் பே வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் என்ன? சாதித்துக் காட்டினாரா? என்பது தான் இந்த 'கால் மீ பே' வெப்சீரிஸின் கதை.
அனன்யா பாண்டே அசத்தல்: இயக்குநர் காலின் டி குன்ஹா இயக்கத்தில் அனன்யா பாண்டே, விஹான் சமத், வருண் சூட், விர் தாஸ், குர்ஃபதஸ் பிர்சடா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த வெப்சீரிஸில் ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு பாலிவுட் பிரபலங்கள் கேமியோவாகவும் வந்து செல்கின்றனர். விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து லைகர் படத்தில் நடித்த அனன்யா பாண்டேவுக்கு நடிக்கவே தெரியவில்லை என பலரும் கடுமையாக விமர்சித்த நிலையில், இந்த கதாபாத்திரத்தில் எப்படி நடித்துக் காட்டுகிறேன் பாருங்கள் என பணக்கார பெண் நடுரோட்டுக்கு வந்தாலும் தனக்கு இருக்கும் அறிவால் பிழைத்துக் கொள்வார் என்கிற பே கதாபாத்திரத்தில் அழகாகவும், கிளாமராகவும், அசத்தலாகவும் நடித்து ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

கண்டுக்காத கணவர்: அகஸ்தியா சவுத்ரி எனும் கோடீஸ்வர கணவராக விஹான் சமாத் நடித்துள்ளார். அனன்யா பாண்டேவின் பெற்றோர் நடத்தி வந்த பிசினஸ் கடனில் மூழ்கவிருந்த சமயத்தில் அனன்யாவை கட்டி வைத்து தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால், அங்கே தனது மனைவிக்கு உலகில் உள்ள அத்தனை விலையுயர்ந்த பொருட்களையும் வாங்கிக் கொடுத்து பார்த்துக் கொண்டாலும், மனைவியை நெருங்காமல் குழந்தைக்கு பிளான் பண்ணாமல் வெறும் பிசினஸ் மேனாக வெளிநாடுகளுக்கு சுற்றித் திரிந்து வருகிறார் அகஸ்தியா சவுத்ரி.
ஜிம் டிரெய்னருடன் கள்ளத்தொடர்பு: கணவருடன் கட்டிலை ஷேர் செய்ய முடியாத விரக்தியில் பிறந்தநாள் அன்று கூட இருவருக்கும் சண்டை நடக்கிறது. அதன் பின்னர், சீனாவில் இருந்து வரும் தொழிலதிபர்களிடம் தனது ஹோட்டல் அறைகளை அகஸ்தியா காட்டி வரும் போது, ஒரு அறையில் ஜிம் டிரெய்னருடன் பே உடலுறவு கொள்வதை பார்த்து விட உடனடியாக அவரை விட்டு பிரிவதாக முடிவெடுத்து அவரை வீட்டை விட்டுத் துரத்துகிறார். அனன்யா பாண்டேவுக்கு ஆதரவு கொடுத்தால் நம்முடைய செல்வாக்கான வாழ்க்கை போய் விடும் என அவரது பெற்றோர்களும், சகோதரரும் அவரை சேர்க்கவில்லை. வெளிநாட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்க ஏற்பாடு செய்த நிலையில், அதை வேண்டாம் என தூக்கிப் போட்டு விட்டு மும்பையிலேயே ஒரு செய்திச் சேனலில் வேலைக்கு சேர்கிறார்.

ஏகப்பட்ட ஸ்பூஃப்: பாலிவுட்டில் பிரபலங்களுக்கு மத்தியில் நடக்கும் விஷயங்கள், அவர்களை பற்றிய காசிப்களை வைத்தே இந்த கதையை இயக்குநர் காலின் டி குன்ஹா உருவாக்கியுள்ளார். கியாரா அத்வானியின் திருமணத்தை ஸ்பூஃப் செய்து விட்டதாக ஒரு சர்ச்சை ஓடுகிறது. கிரிக்கெட் வீரருக்கும் ஊர்வசி ரவுத்தேலாவுக்கும் இடையேயான பிரச்சனை போன்ற பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களுக்கு இலவச 5ஜி சிம் கார்டுகளை கொடுக்கும் நபர் ஒரு ஹீரோயினை ஏமாற்றி கர்ப்பமாக்கி விட்டார் என்கிற செய்தி பேவுக்கு கிடைக்க அதை எப்படி இவர் வெளியே கொண்டு வந்து பிரபலமானாரா? அல்லது பெரிய பிரச்சனையில் சிக்கினாரா? என்பது தான் கிளைமேக்ஸ்.

பார்க்கலாமா? வேண்டாமா?: இப்படியெல்லாம் பணக்காரர்கள் வாழ்க்கை இருக்குமா? என்கிற வியப்புடன் ஆரம்பிக்கும் காட்சிகளும், சாமானியர்களின் வாழ்க்கையை ஒரு பணக்கார பெண் எதிர்கொண்டால் எப்படி இருக்கும் என்பதை சோகத்துடன் சொல்லாமல் செம ஜாலியாகவும் கலர்ஃபுல்லாகவும் பெண்களால் தங்களுக்கான முடிவை தாங்களே எடுக்க முடியும். தங்களின் வாழ்க்கையை தாங்களே தேர்வு செய்துக் கொள்ள முடியும். ஆண்கள் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பு வைத்துக் கொண்டால் அது பெரிய பிரச்சனையை ஏற்படுத்துவதில்லை. ஆனால், பெண்களுக்கு கிடைக்கும் கெட்டப்பெயர் என ஏகப்பட்ட விஷயங்களை நய்யாண்டியுடனே இந்த வெப்சீரிஸ் கையாண்டுள்ளது. இப்படித்தான் கதை போகும் என்று தெரிந்தாலும், அனன்யா பாண்டேவின் க்யூட்டான நடிப்பு தொடர்ந்து வெப்சீரிஸை கடைசி வரை பார்க்க வைக்கிறது. சில அடல்ட் காட்சிகள் உள்ளன. இளைஞர்களையும் குறிப்பாக பெண்களை இந்த வெப்சீரிஸ் கவரும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.


Click it and Unblock the Notifications











