OTT: இனிமே நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன?.. 100 வருஷம் தூங்கும் ஹீரோ.. பிரம்மாண்ட வெப்சீரிஸ்!
சென்னை: உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு சூப்பர் ஹீரோ யாரையும் காப்பாற்றாமல் ஓடி ஒளிந்து ஒரு பனி மலையில் உறைந்து போய் 100 ஆண்டுகள் தூங்கி எழுந்து வந்தால் அவனால் யாருக்கு என்ன லாபம் என்கிற கதையுடன் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள அவதார் தி லாஸ் ஏர்பெண்டர் வெப்சீரிஸ் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியாகி உலகளவில் டிரெண்டாகி வருகிறது.
ஆல்பர்ட் கிம் இந்த வெப்சீரிஸை உருவாக்கி இருக்கிறார். இதில், ஆங் எனும் அவதார் கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் கார்டன் காமியர். கடாரா கதாபாத்திரத்தில் கியாவென்டியோ டர்பெல் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் டல்லஸ் ஜேம்ஸ் லியூ நடித்துள்ளார். மேலும், பல பிரபல நடிகர்கள் நடித்துள்ள இந்த வெப்சீரிஸ் பெரும் பொருட்செலவில் இதற்கு முன் பார்த்த அவதார் தி லாஸ்ட் ஏர்பெண்டர் படத்துடன் பிரம்மிப்பை கூட்டும் விஷுவல்ஸ் மற்றும் கதையுடன் உருவாகி இருக்கிறது.

அவதார் தி லாஸ்ட் ஏர்பெண்டர் கதை: நீர், நிலம், காற்று, நெருப்பு உள்ளிட்ட சக்திகளுடன் ஒவ்வொரு தேசத்து மக்களும் வாழ்ந்து வருகின்றனர். நெருப்பு சக்தியை கொண்ட மக்கள் மொத்த உலகத்தையும் ஆள நினைக்கின்றனர். அதற்கு தடையாக காற்று தேசத்தில் புதிதாக தோன்ற உள்ள அவதார் வருவான் என்பதால், 100 ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டுமொத்த காற்று தேசத்தில் உள்ள மத குருமார்களையும் குழந்தைகள் உள்பட அனைவரையும் நெருப்பு தேசத்து அரசன் கொல்கிறான். ஆனால், அவர்கள் வருவதற்கு முன்னதாக தனது பெரிய பறக்கும் பைசனில் வெளியே சுற்ற கிளம்பும் ஹீரோ அவதார் புயலில் சிக்கி மாட்டிக் கொள்கிறார். அவர் எப்போது எழுந்து வந்து உலகை காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த வெப்சீரிஸின் கதை.

100 ஆண்டுகளாக தூங்கிவிடும் ஹீரோ: கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் கழித்து நீர் சக்தி கொண்ட வாட்டர் பெண்டர் விளையாட்டாக நீர் சக்தியை பயிற்சி பண்ணும் போது பனியில் உறைந்துக் கிடக்கும் அவதார் உயிர்த்தெழுகிறார். 100 வருஷத்துக்கு முன்னாடி எப்படி சிறுவனாக இருந்தாரோ அதே போல சிறுவனாகவே இருக்கிறார். அவர் உயிர்த்தெழுந்த சிக்னல் கிடைத்ததும் நெருப்பு தேசத்து ராஜாவின் மகன் அதை அறிந்து கொண்டு அவனை வேட்டையாட வருகிறார். நீர் தேசத்தை சேர்ந்த அரசனின் வாரிசுகள் அவதாருக்கு அடைக்கலம் அழைக்கின்றனர். உலகத்தை இவர் தான் காப்பாற்ற போகிறார் என நினைத்து அவருடன் பயணிக்கின்றனர்.

எப்படி இருக்கு வெப்சீரிஸ்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும்படியான ஆபாசம் இல்லாத வெப்சீரிஸாக தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மிகவும் பிரம்மாண்ட பொருட்செலவில் இந்த அவதார் தி லாஸ்ட் ஏர்பெண்டர் வெப்சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சுட்டி டிவியில் அனிமேஷன் தொடராகவும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நைட் ஷியாமலன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான இதே டைட்டிலான படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அந்த அனிமேஷன் தொடர் மற்றும் படத்தை விட தற்போது நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள அவதார் கதை ரீதியாகவும் காட்சி ரீதியாகவும் பல புதுமைகளுடன் உருவாகி பிரம்மிக்க வைக்கிறது. ஒவ்வொரு சீனும் சாகச காட்சிகள் நிறைந்து பக்காவான சிஜியுடன் கண்களுக்கு விருந்து வைக்கிறது. சமீப காலமாக ஹாலிவுட்டில் வெளியாகும் சூப்பர் ஹீரோ படங்களே சொதப்பி வரும் நிலையில், அவதார் பிரியர்களுக்கு மட்டுமின்றி அனைவரையும் இந்த வெப்சீரிஸ் கவரும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications











