Avatar 2 OTT Release - அவதார் 2 - ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?.. வெளியானது சூப்பர் அப்டேட்
சென்னை: Avatar 2 OTT Release (அவதார் 2 ஓடிடி ரிலீஸ்) அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படம் ஜூன் 7ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகவிருக்கிறது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ல் வெளிவந்து உலக அளவில் சினிமா ரசிகர்களை வியக்க வைத்த படம் 'அவதார்'. இப்படி ஒரு சயின்ஸ் - பிக்ஷன் படமா என படத்தைப் பார்த்து அப்போது வியக்காதவர்களே இல்லை. அந்த அளவுக்கு அவதார் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் அமைந்திருந்தன.

ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2: அவதார் படத்தின் இரண்டாம் பாகமான 'அவதார் - தி வே ஆப் வாட்டர்' படம் உலக அளவில் கடந்த வருடம் டிசம்பர் 16ஆம் தேதி வெளியானது. தமிழ் உள்ளிட்ட 160 மொழிகளில் படம் வெளியானது. முதல் பாகம் அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றிருந்த சூழலில் அவதார் 2 கலவையான விமர்சனங்களை பெற்றது.. மேலும் அவதார் 1 வேறு உலகத்தில் இருந்ததுபோன்று இருந்தது. ஆனால் அவதார் 2 சராசரி சினிமா என்ற வட்டத்திற்குள் சிக்கிக்கொண்டதாக ரசிகர்கள் பலர் கூறினர்.
அவதார் 2 திரைப்படத்தின் கதைக்களம்: முதல் பாகமான "அவதார்" படத்தின் சம்பவங்களுக்கு பிறகு, ஒரு தசாப்த காலக்கட்டத்தை கடந்து , சல்லி குடும்பம் (ஜேக், நெய்திரி மற்றும் அவர்களது குழந்தைகள்), அவர்களைப் பின்தொடரும் பிரச்னைகள், பாதுகாப்புடன் இருப்பதற்கு அவர்கள் செல்லும் தூரம், அவர்கள் உயிருடன் இருக்க போரிடும் போர்கள் மற்றும் அவர்கள் அடையும் துயரங்கள் அவர்களின் வெற்றி என இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது.
ஆஸ்கர் விருது வென்ற அவதார் 2: இந்தச் சூழலில் கடந்த 13ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் 95ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் அவதார் 2 படத்துக்கு சிறந்த விஷுவல் எஃபெகட் பிரிவில் விருது வழங்கப்பட்டது. ஜோ லிட்டேரி, ரிச்சர்ட் பனேகம், எரிக் செயிண்டன், டேனியல் பேரட் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர். படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும் ஆஸ்கர் விருது வென்றது படக்குழுவுக்கு உற்சாகத்தை கொடுத்தது.
ஓடிடி ரிலீஸ் எப்போது?: திரையரங்குகளில் வெளியான அவதார் 2 படம் எப்போது ஓடிடியில் ரிலீஸாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்நிலையில் அவதார் - தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் ஜூன் 7ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகவிருக்கிறது.

வசூலில் ஏமாற்றிய அவதார் 2: முன்னதாக, அவதார் படத்தின் முதல் பாகம் உலக அளவில் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து பிரமிக்க வைத்தது. இதனால் அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட அதிக அளவு வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் பாகத்தைவிட அவதார் தி வே ஆஃப் வாட்ட ர் படம் குறைந்த அளவே வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











