Billionaire's Bunker Review: கோடீஸ்வரர்களையே கோமாளி ஆக்கிட்டாங்களே.. நெட்பிளிக்ஸில் இப்படியொரு வெப்சீரிஸா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: நெட்பிளிக்ஸின் பிரபலமான தொடரான "மனி ஹெய்ஸ்ட்"டை உருவாக்கிய அலெக்ஸ் பினா மற்றும் எஸ்தர் மார்டினெஸ் லோபாடோ, தங்கள் புதிய படைப்பான "பில்லியனர்ஸ் பன்கர்" மூலம் மீண்டும் ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளனர். சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான Billionaire's Bunker வெப்சீரிஸ் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.
இந்தத் தொடரின் முதல் எபிசோடின் இறுதியில் ஒரு எதிர்பாராத திருப்பம் நிகழ்கிறது. இது பார்வையாளர்களைத் தாங்கள் பார்த்த அனைத்தையும் கேள்வி கேட்கத் தூண்டுகிறது. இருப்பினும், இந்தத் திருப்பத்திற்குப் பிறகு, இந்த கதைக்களம் எவ்வளவு தூரம் நிலைத்து நிற்கும் என்ற கேள்வி எழுகிறது.

பொதுவாகவே ஹாலிவுட் படங்கள் என்றால் உலக அழிவுகளை மையப்படுத்தி பிரமாண்டமாக உருவாக்கப்படும். 2012 படத்தை எல்லாம் 2025ல் பார்த்தால் சிரிப்பு தான் வரும். அந்த மனநிலையை கேப்சர் செய்யும் விதமாக இப்படியொரு வெப்சீரிஸை உருவாக்கியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். இதை பார்க்கலாமா? வேண்டாமா? ஓடிடி ரசிகர்களுக்கு வொர்த்தானதா? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை இங்கே பார்கக்லாம்.
பில்லியனர்ஸ் பங்கர் கதை: முதல் காட்சியில், ஒரு பிறந்தநாள் விழாவில் மேக்ஸ் (பாவு சைமன்) என்ற சிறுவன் படம் வரைந்துகொண்டிருக்கும்போது, தன் வாழ்நாள் முழுவதும் நேசிக்கப்போகும் அனே (மோனிகா மாரா) என்ற சிறுமியைப் பார்க்கிறான்.
இவர்கள் டீனேஜ் வயதில் காதலர்களாக மாறுகிறார்கள். ஆனால், 19 வயதில் நடந்த ஒரு கார் விபத்தால் இவர்களின் காதல் சோகமாக முடிவடைகிறது. மேக்ஸ் போதையில் காரை ஓட்டிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்து காரணமாக தனது காதலியை இழந்து விடுகிறான்.
வாகன விபத்தில் மனித உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றத்திற்காக மேக்ஸ் சிறைக்குச் செல்கிறான். அங்கே அவனுக்கு சக கைதிகள் மூலமாக பிரச்னைகள் வர பலரும் அவனை போட்டு புரட்டி எடுத்தனர். ஆரம்பத்தில், அவன் தனது குடும்பத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி சக கைதிகளைத் பணம் கொடுத்து சரி கட்டினான். ஆனால், அப்போதும் ஒரு சிலர் அவனை சும்மா விடவில்லை. இங்கே பிழைக்க வேண்டுமென்றால் சண்டை செய்வது ஒரே வழி என அவன் சண்டை செய்யத் தொடங்குகிறான். அதன் பின்னர், சிறை வாழ்க்கை அவனுக்கு செட் ஆகிறது.
மூன்று ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு, அவன் திடீரென விடுவிக்கப்பட்டு, அவனது தந்தை ராஃபாவால் (கார்லோஸ் சாண்டோஸ்) வரவேற்கப்படுகிறான். அப்போது உலக நிலைமை பாதுகாப்பற்றதாக உள்ளது, அணுசக்தி போர் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆனால், மேக்ஸ் குடும்பமும் ஸ்பெயினில் உள்ள மற்ற பணக்கார குடும்பங்களும் கிமேரா அண்டர்கிரவுண்ட் பார்க் என்ற ஆடம்பரமான நிலத்தடி பதுங்கு குழி ஒன்றை வாங்கியுள்ளனர். இதை மினெர்வா (மிரென் இபர்குரென்) என்ற மர்மப் பெண் நடத்துகிறார்.
ஆரம்பத்தில் தயங்கினாலும், அனேவின் குடும்பமும் அங்கு இருப்பதைக் கேட்டதும் மேக்ஸ் அங்கு செல்ல ஒப்புக்கொள்கிறான். பதுங்கு குழியில், அனைத்து குடியிருப்பாளர்களும் நீல நிற ஜம்ப்சூட்களை அணிந்துள்ளனர். மேலும் அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. வெளியுலக செய்திகள் வீடியோ திரைகளில் காட்டப்படுகின்றன.
அனேவின் தந்தை கில்லெர்மோவையும் (ஜோவாகின் ஃபர்ரியல்), சகோதரி ஆசியாவையும் (அலிசியா ஃபால்கோ) மேக்ஸ் சந்திக்கிறான். மகளை பறிகொடுத்த அப்பா மற்றும் தங்கையிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறான். கில்லெர்மோ சமரசம் செய்ய விரும்புவது போல் தோன்றினாலும், ஆசியா மறுக்கிறாள்.
கில்லெர்மோ தனது புதிய மனைவி மிமியின் (அகஸ்டினா பிசியோ) தனிமையில் இருக்கும்போது, மேக்ஸுடன் நீண்ட காலம் coexistence செய்ய வேண்டியிருப்பதால் எவ்வளவு கோபமாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார். (அனே இறந்த சில மாதங்களுக்குப் பிறகு அவளுடைய தாய் இறந்துவிடுகிறார்).
கோடீஸ்வரர்கள் கோமாளியான தருணம்: வெளியுலகில் நிலைமை தீவிரமடையவே, பதுங்கு குழி சிதைவடையத் தொடங்குகிறது. அனைத்து குடியிருப்பாளர்களும் வளாகத்தின் பாதுகாப்பான இடமான "டோம்" பகுதிக்கு ஓடுகிறார்கள். பெரிய ஸ்க்ரீன்களில் உலகம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படுவதைப் பார்க்கிறார்கள். டிவி ஸ்க்ரீன்களும் கிராஷ் ஆக அந்த இடத்திலும் அணு ஆயுத தாக்குதல் நிகழ்ந்துவிட்டதாக உணர்கின்றனர்.
மினெர்வா இரண்டு ஊழியர்களை வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளும் செயற்கைக்கோள் டிஷ்களை மீண்டும் இணைக்க அனுப்புகிறார். அப்போது கோடீஸ்வரர்கள் மரண பீதி அடையும்படியான சம்பவம் நடைபெறுகிறது. அதன் பின்னர், வெளியுலக தொடர்பு கட் ஆகிறது. ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், இது எல்லாமே அந்த பங்கர்ஸ் நடத்தும் டீமின் மெகா செட் அப் என்பது முதல் எபிசோடிலேயே அம்பலமாக உள்ளே இருப்பவர்களை பைத்தியமாக்கி பணம் சம்பாதிக்கும் இவர்களது நோக்கம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது தான் இந்த வெப்சீரிஸின் கதை.
இந்த பணக்கார குடும்பங்களை பதுங்கு குழிக்குள் செல்ல தூண்டியதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய்? மினெர்வா அணுசக்தி போரின் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி இந்த குடும்பங்களை நிலத்தடிக்கு இழுத்தாரா?
குடும்பங்கள் நிலத்தடிக்கு மேலே இருந்தபோது பார்த்த செய்திகள் அனைத்தும் போலியானதாக இருக்க முடியாது. ஆனால், அவர்கள் அனைவரும் கீழே மாட்டிக்கொண்ட பிறகு, அவர் விஷயங்களை உண்மையில் இருப்பதை விட மோசமாக காட்ட முடியும்.
பார்க்கலாமா? வேண்டாமா?: 2012 திரைப்படத்தில் பணக்காரர்கள் நோவா கப்பல் போன்ற சொகுசு கப்பல்களில் உயிர் தப்பித்ததை படமாக்கியிருப்பார்கள். அதே கான்செப்ட்டை மாற்றி யோசித்து பணக்காரர்களை பக்காவாக ஸ்கெட்ச் போட்டு ஏமாற்ற முடியும் என்பதையும் அவர்களிடம் இருந்து பல ஆயிரம் கோடி பணத்தை ஆட்டையை போட முடியும் என காட்டியதில் ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக் இருந்தாலும் ஐடியா சூப்பராகவே உள்ளது.
ஹீரோ தனது சிறை வாழ்க்கையை இங்கே எப்படி பயன்படுத்துகிறார், இந்த இடத்தின் உண்மையை அறிந்து கொண்டு மற்றவர்களையும் வெளியேற்ற உதவினாரா? இல்லையா என்பதை தெரிந்து கொள்ள இந்த வெப்சீரிஸை தாராளமாக பார்க்கலாம். தமிழ் டப்பிங்கில் கிடைக்கிறது. 18 பிளஸ் காட்சிகளும் உள்ளன.


Click it and Unblock the Notifications