இதானா சார் உங்க டக்கு.. ஓடிடியில் வெளியானது ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன்.. ரசிகர்கள் நக்கல்
சென்னை: ப்ளூ சட்டை மாறன் பிரபல திரை விமர்சகர்களில் ஒருவராக திகழ்ந்துவருகிறார். அவர் ஒரு படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுப்பது குறிஞ்சி பூ பூப்பது போன்றது. பல படங்களுக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்து சகட்டுமேனிக்கு விளாசுவதால் அவர் மீதே விமர்சனம் எழுந்தது உண்டு. சூழல் இப்படி இருக்க அவர் ஆண்டி இந்தியன் என்ற படத்தை இயக்கினார். அந்தப் படமானது 2021ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. தற்போது அப்படம் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.
உலகமே இப்போது ஸ்மார்ட் ஃபோனுக்குள் அடங்கியிருக்கிறது. அதன் காரணமாக பலர் யூடியூப் சேனல்களை ஆரம்பித்து பல விஷயங்களை செய்துவருகின்றனர். அதில் ஒன்றுதான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவது. 90களில் தொலைக்காட்சியில் வந்த சினிமா விமர்சனங்களைவிடவும் தற்போது யூடியூப் சேனல் மூலம் வரும் விமர்சனங்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.அதன் காரணமாக பலரும் திரை விமர்சகர்களாக மாறியிருக்கின்றனர்.

ப்ளூ சட்டை மாறன்: அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ப்ளூ சட்டை மாறன். மற்ற யூடியூப் திரை விமர்சகர்களைவிடவும் இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது அதிகம். அதற்கு காரணம் தனக்கு பிடிக்கவில்லை என்றால் யாருடைய படமாக இருந்தாலும் கிண்டல் செய்து அந்த படத்தை ஒருவழியாக்கிவிடுவார். அதனால் ஆரம்பத்தில் அவருக்கு ரசிகர்கள் இருந்தனர். இருப்பினும் ஒருகட்டத்துக்கு மேல் அவர் மேல் விமர்சனமும் வைக்கப்பட்டது.
எல்லை மீறல்: அதற்கு காரணம் அவர் தனி நபர் தாக்குதலை தொடர்ந்து நடத்திவருவதுதான் என்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. வலிமை படத்துக்கு கொடுத்த விமர்சனத்தில் அஜித்தை உருவ கேலி செய்திருந்த அவர், விக்ரம் படத்தின் விமர்சனத்தில் ஜாஃபரையும் உருவ கேலி செய்திருந்தார். அதற்கு கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனாலும் அவர் அவ்வப்போது உருவகேலி செய்துவருவது குறிப்பிடத்தக்கது.
தொடர் ட்ரோல்: மேலும் இவ்வாறு அவர் விமர்சிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒரு திரைப்படம் எடுப்பது அவ்வளவு கடினம் என்று பலர் கூறினர். இருப்பினும் ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்வதை நிறுத்தவில்லை.குறிப்பாக சமீப காலங்களில் ரஜினிகாந்த், விஜய் என முன்னணி நடிகர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வறுத்தெடுத்து வருகிறார்.
ஆண்டி இந்தியன்: இதற்கிடையே அவர் ஆண்டி இந்தியன் என்ற படத்தை இயக்கினார். பாரதிராஜா உள்ளிட்டோருக்கு சிறப்பு காட்சியையும் போட்டு காண்பித்தார். ரிலீஸானதும் படத்தை பார்த்த ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றினர். இப்படி படம் எடுக்கும் ஒருவர்தான் மற்ற படங்களை விமர்சிக்கிறாரா என ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர். மேலும் இந்தப் படம் தொடர்பான ஒரு வழக்கும் நீதிமன்றத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. சில காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவிட்டார் நீதிபதி. அதன்படி படம் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது.
ஓடிடியில் ரிலீஸ்: தியேட்டரில் வெளியாகி சரியான மொக்கை வாங்கிய ஆண்டி இந்தியன் திரைப்படம் எந்த ஓடிடி தளத்திலும் வெளியாகாமல் இருந்தது. இதனால் ப்ளூ சட்டை மாறனை கடுமையாக கிண்டல் செய்தனர் ரசிகர்கள். அதாவது, எத்தனை படங்களை இவர் வைத்து செய்திருப்பார். அதனால்தான் இவரது படத்துக்கே இந்த நிலைமை. ஆண்டி இந்தியனை வெளியிட்டால் போண்டி ஆக வேண்டியதுதான் என நினைத்தே ஓடிடி தளங்கள் இந்தப் படத்தை கண்டுகொள்ளவில்லை என்றும் கமெண்ட்ஸ் செய்தனர்.
இந்நிலையில் ஆண்டி இந்தியன் திரைப்படம் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது. அதுதொடர்பான அறிவிப்பை ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் கண் போன பிறகு சூரிய நமஸ்காரமா ப்ளூ சட்டை. படம் ரிலீஸானபோதே தேறவில்லை. இப்போது இரண்டு வருடங்கள் கழித்து ஓடிடியில் வந்து என்ன பயன். இதானா சார் உங்க டக்கு என்று கிண்டல் செய்துவருகிறார்.


Click it and Unblock the Notifications











