Cheran's Journey Review: ஆட்டோகிராஃப் பார்த்துருப்பீங்க இது சேரனின் ஜர்னி.. வெப்சீரிஸ் விமர்சனம்!
சென்னை: இயக்குநர் சேரன் இப்போ ஓடிடி பக்கமும் வந்து விட்டார். 1997ம் ஆண்டு பாரதி கண்ணம்மா படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான சேரன் தொடர்ந்து பொற்காலம், வெற்றிக் கொடிகட்டு, பாண்டவர் பூமி என பல நல்ல படங்களை கொடுத்தார். அதன் பின்னர் சொல்ல மறந்த கதை படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார்.
சொல்ல மறந்த கதை படத்தைத் தொடர்ந்து ஹீரோவாகவும் இயக்குநராகவும் பயணமான சேரன் ஆட்டோகிராஃப், தவமாய் தவமிருந்து, மாயக் கண்ணாடி, பொக்கிஷம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி நடித்தார். மற்ற ஹீரோக்களை வைத்தும் சில படங்களை இயக்கி உள்ளார். இந்நிலையில், தற்போது சோனி லைவ் ஓடிடியில் வெளியாகி உள்ள ஜர்னி வெப்சீரிஸை இயக்கி உள்ளார் சேரன்.

ஜர்னி வெப்சீரிஸ் கதை: பெரிய கார் கம்பெனியின் ஓனரான சரத்குமார் புதிதாக பேட்டரி கார் ஒன்றை அறிமுகப்படுத்தப் போகிறேன் என்றும் அதற்கு திறமை மற்றும் நம்பிக்கை வாய்ந்த ஒரு நபரை பணியமர்த்த போகிறேன் என்றும் கூறுகிறார். பல கட்ட தேர்வுகளுக்குப் பிறகு 5 பேர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த 5ல் ஒருவரை தேர்வு செய்வது சிரமமாக உள்ளது என தனது நண்பர் ஜெயபிரகாஷிடம் சொல்கிறார். அந்த 5 பேரின் கதைகள் ஒவ்வொன்றாக விரிகிறது. அவர்களுக்குள் இருக்கும் போராட்டம், பிரச்சனைகள், எப்படியாவது அந்த வேலையை அடைந்தே தீர வேண்டிய நிலை என நீள்கிறது. இறுதியில் யாருக்கு அந்த வேலை கிடைக்கிறது என்பது தான் கதை. மாதம் 4 லட்சம் ரூபாய் வேலை என்றால் போட்டி இல்லாமலா இருக்கும்.

திரைக்கதை எப்படி இருக்கு?: அமீர் சுல்தான் கதாபாத்திரத்தில் கலையரசன் நடித்துள்ளார். காலேஜ் டாப்பராக இருந்தாலும் அவரது மதம் அவருக்கு பெரிய தடையாக மாறுகிறது. அமீர் என்கிற பெயருக்கு எல்லாம் வேலை இல்லை என பல இடங்களில் அவரை ஒரு தீவிரவாதியை போல பார்ப்பது, போதைப் பொருள் விற்பவராக போலீஸார் சித்தரித்து இண்டர்வியூவை அட்டென்ட் பண்ண விடாமல் செய்வது என பல சிக்கல்கள் இருக்கிறது. அப்பாவின் பணம் தேவையில்லை என்றும் சொந்தமாக சம்பாதிக்க போகிறேன் என முடிவு செய்யும் லதாவாக திவ்ய பாரதி நடித்துள்ளார். அரசியல் பிரச்சனைகள் வேண்டாம் என ஒதுங்கி நிற்கும் ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் பிறந்த நபராக ஆரி அர்ஜுனன் பிரணவ் கதாபாத்திரத்தில் மினிஸ்டர் சிபாரிசுடன் பங்கேற்கிறார். ராகவ் கதாபாத்திரத்தில் பிரசன்னாவும் நிதேஷ் கதாபாத்திரத்தில் காஷ்யப் பார்பையாவும் அந்த வேலைக்கு போட்டிப் போடுகின்றனர். ஒவ்வொரு எபிசோடிலும் அவர்களது பேக்கிரவுண்ட், அவர்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை கண்டு பிடிக்கும் சிஐடியாக ஜெயபிரகாஷ் செய்யும் வேலைகள் என வெப்சீரிஸ் நகர்கிறது.
பார்க்கலாமா? வேண்டாமா?: இந்த பொங்கலுக்கு தியேட்டரில் பல படங்கள் வெளியாகி உள்ளன. அதே போல ஓடிடியில் சோனி லைவ்வில் வெளியாகி உள்ள இந்த ஜர்னி வெப்சீரிஸை தாராளமாக ஒருமுறை பார்க்கலாம். இன்னும் சில இடங்களில் சுவாரஸ்யத்தை கூட்டி சேரன் செதுக்கியிருந்தால் இந்த ஜர்னியும் ஒரு ஆட்டோகிராஃபாக மாறியிருக்கும்.


Click it and Unblock the Notifications











