Criminal Justice S4: ரோஷினியை கொன்றது யாரு?.. 7வது எபிசோடில் எதிர்பாராத ட்விஸ்ட்.. ஓடிடி சம்பவம்!
மும்பை: Criminal Justice: A Family Matter வெப்சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டாரில் வாரம் ஒரு எபிசோடாக வெளியாகி வருகிறது. வியாழக்கிழமையான இன்று அதன் 7வது எபிசோடு வெளியாகி ரசிகர்களை விரைந்து பார்க்கச் செய்துள்ளது. இன்னும் ஒரு எபிசோடுடன் ரோஷினியை கொன்ற உண்மையான குற்றவாளி யார் என்பதை சொல்லிவிடுவார்களா அல்லது 10 எபிசோடு வரை நீளுமா என்றெல்லாம் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
ஓடிடி ரசிகர்களுக்கு த்ரில்லர் மற்றும் கிரைம் டிராமா வெப்சீரிஸ்கள் மற்றும் படங்கள் ரொம்பவே ஆவலை தூண்டி வருகின்றன. தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ள பங்கஜ் திரிபாதி நடித்துள்ள இந்தி வெப்சீரிஸான கிரிமினல் ஜஸ்டீஸ் 4 சீசன்களாக ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

4வது சீசனில், டாக்டர் ராஜ் நாக்பால் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், ஸ்பெஷல் சைல்டான மகளை பார்த்துக் கொள்ள வந்த நர்ஸ் ரோஷினியை காதலித்து வந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட, ராஜ் நாக்பால் மற்றும் அவரது முன்னாள் மனைவி இருவரும் அந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், யார் குற்றவாளி என்பதை விசாரிப்பது தான் கதையாக உள்ளது. ராஜ் நாக்பால் வழக்கறிஞராக கதையின் நாயகன் பங்கஜ் திரிபாதி இந்த எபிசோடிலும் ரசிகர்களை தனது காமெடி டைமிங் மற்றும் முக பாவனைகளால் சிரிக்க வைக்க தவறவில்லை.
7வது எபிசோடு ரிலீஸ்: கடந்த வாரம் 6 எபிசோடுகள் வரை கிரிமினல் ஜஸ்டீஸ் வெப்சீரிஸ் இதுவரை எப்படி எல்லாம் பயணித்தது என்ன கதை என்பது குறித்து பார்த்திருந்தோம். இந்நிலையில், பரபரப்பை கூட்டும் 7வது எபிசோடு இன்று வெள்யாகி ஓடிடி ரசிகர்களை ஓடி வந்து இந்த எபிசோடை பார்க்க செய்துள்ளது. ரோஷினியின் முன்னாள் காதலன் சாட்சிக் கூண்டில் ஏறி நிற்க, வழக்கறிஞர் மிஸ்ராவின் மனைவி மற்றும் அவரது தம்பி இருவரும் புதிய ஆதாரத்தை கண்டுபிடித்து விட்டதாக கோர்ட்டுக்கு விரைந்து வருகின்றனர். அதுவரை எப்படியாவது சமாளிக்க வேண்டுமே என மிஸ்ரா ரோஷினிக்கும் அந்த நபருக்கும் இடையே நடைபெற்ற காதல் கதையை கேட்க, கோர்ட் நேரத்தை வீணடிப்பதாக பப்ளிக் பிராசிக்யூட்டர் எகிறுகிறார்.
எல்லாமே வீணாப்போச்சு: டாக்டர் நாக்பால் பார்ட்டி முடிந்த இரவு ரூமுக்குள் ரோஷினியை அழைத்துச் சென்று அடித்த கதையை அவரது முன்னாள் காதலன் சொல்ல, அனைத்தும் பொய்யென நாக்பால் கத்த ஆரம்பித்து விட்டார். பணக்காரத் திமிர் காட்டி என்னோட காதலியை இவன் தான் கீப்பாக வைத்துக் கொண்டான் என அசிங்க அசிங்கமாக திட்ட சாட்சியாக வந்த நபருக்கு 2 நாட்கள் நீதிமன்ற அவமதிப்பு தண்டனையை கொடுத்து உள்ளே தள்ளிவிட்டார் நீதிபதி.
மகள் மீது சந்தேகம்: நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணை குறித்து சோஷியல் மீடியா மூலம் அறிந்துக் கொள்ளும் மகள் இரா பாட்டி கோயிலுக்குச் சென்ற கேப்பில் அம்மா, அப்பாவை பார்க்க கோர்ட்டுக்கே வந்துவிடுகிறார். கடைசியில், அவர் மீதான சந்தேகத்தை எழுப்பும் விதமாக மிஸ்ராவின் கேள்விகள் மருத்துவரிடம் நீள கடைசியாக இரா பக்கமே மிஸ்ராவின் மொத்த பார்வையும் சாய்கிறது. அதற்கு ஏற்ப ஒரு பக்காவான க்ளூவும் கடைசியில், கிடைக்க கடைசி எபிசோடு அதை நோக்கி நகரும் என தெரிகிறது. இரா தான் கொலை செய்திருப்பாரா? அல்லது இராவுக்காக அவரது அம்மா கொன்றிருப்பாரா? அல்லது ராஜ் கொன்று விட்டு டிராமா ஆடுகிறாரா என ரசிகர்கள் இன்னும் ஒரு வாரம் மண்டையை போட்டு பிய்த்துக் கொள்ளத்தான் வேண்டும்.


Click it and Unblock the Notifications











