Criminal Justice S4 Review: குற்றவாளி ஒருவர்.. தண்டனை கிடைத்தது இன்னொருவருக்கு.. வேறலெவல் வெப்சீரிஸ்!
மும்பை: ஜியோ ஹாட்ஸ்டாரில் பங்கஜ் திரிபாதி நடிப்பில் கடந்த 6 வாரங்களாக ஒளிபரப்பாகி வந்த கிரிமினல் ஜஸ்டிஸ் 4வது சீசன் ஒரு வழியாக 7வது எபிசோடுடன் இன்று நிறைவடைந்துவிட்டது. ரோஷினியை கொன்றது யார் என்பதையும், யாருக்கு தண்டனை கிடைத்தது என்பதையும் காட்டிவிட்டனர். எமோஷனல் கனெக்ட் உடன் நிறைவடைந்த கிளைமேக்ஸ் காட்சி ரசிகர்களை நிச்சயம் கண்ணீர் சிந்த வைத்து விடும்.
விசாரணை மற்றும் த்ரில்லர் வெப்சீரிஸ்கள் மற்றும் படங்களை ஓடிடி ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்த்து வருகின்றனர். அவர்களை சரியாக டார்கெட் செய்து உருவாக்கப்பட்ட வெப்சீரிஸ் தான் இந்த கிரிமினல் ஜஸ்டிஸ் எ ஃபேமிலி மேட்டர்.

பங்கஜ் திரிபாதி, சுர்வீன் சாவ்லா, முகமது ஜீசன், ஆஷா நேகி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மே 29ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த வெப்சீரிஸ் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு எபிசோடு என பரபரப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல், இந்த வியாழக்கிழமையுடன் எண்டு கார்டு போட்டு முடித்து விட்டனர்.
கிரிமினல் ஜஸ்டிஸ் சீசன் 4 கதை: ராஜ் நாக்பால் தனது மனைவி அஞ்சு நாக்பாலை பிரிந்து வாழ்கிறார். மகள் இராவை பார்த்துக் கொள்ள வந்த நர்ஸ் ரோஷினியை காதலித்து வரும் நிலையில், இராவின் பிறந்தநாள் பார்ட்டிக்குப் பிறகு பிரச்னை நடக்கிறது. அதற்கு அடுத்த நாள் ரோஷினி நாக்பால் மடியில் ரத்த வெள்ளத்தில் இறந்துக் கிடக்க, ராஜ் நாக்பாலை போலீசார் கைது செய்கின்றனர். ராஜ் நாக்பாலை காப்பாற்ற பிரபல வழக்கறிஞரான மாதவ் மிஸ்ரா (பங்கஜ் திரிபாதி) வருகிறார். அந்த வழக்கில் அஞ்சுவும் குற்றவாளி என போலீசார் குற்றம் சுமத்த தனது கிளைண்ட் ஆன ராஜ் நாக்பாலை மாதவ் மிஸ்ரா காப்பாற்றினாரா? இல்லையா? உண்மையான குற்றவாளி யார் என்கிற கிளைமேக்ஸ் உடன் கடைசி எபிசோடு நிறைவடைந்துள்ளது.

வெப்சீரிஸ் வொர்த்தா? இல்லையா?: ராஜ் நாக்பால், அஞ்சு நாக்பால், அவர்களது மகள் இரா, ராஜ் நாக்பாலின் அம்மா மற்றும் ரோஷினியின் முன்னாள் காதலன் என பலர் மீது சந்தேகங்கள் கிளம்பும் அளவுக்கு செம சிறப்பாக திரைக்கதையை வடிவமைத்து அட்டகாசமாக இயக்கியுள்ளனர். கடைசி வரை யார் தான் குற்றவாளி என ரசிகர்கள் கெஸ் பண்ண முடியாத வகையிலும், உண்மையான குற்றவாளி வெளிப்படுவது போல காட்டிவிட்டு, கிளைமேக்ஸில் வைத்த ட்விஸ்ட் மற்றும் அதற்கு சொல்லப்படும் காரணங்கள் என அனைத்துமே அல்டிமேட். கண்டிப்பாக ஓடிடியில் பார்க்க வொர்த்தான வெப்சீரிஸ் தான்.
குற்றவாளி வேறு, தண்டிக்கப்படுபவர் வேறு: நீதிமன்றத்தில் ராஜ் நாக்பால் சார்பில் மாதவ் மிஸ்ராவும் அஞ்சு நாக்பால் சார்பில் மீதா வசிஷ்த்தும், பப்ளிக் பிராசிக்யூட்டராக ஸ்வேதா பாஸு பிரசாத்தும் ஒவ்வொரு எபிசோடிலும் வழக்கை ரொம்பவே சுவாரஸ்யமாக கொண்டு சென்று ரசிகர்களின் மண்டையை பிய்த்துக்கொள்ள செய்தனர். கடைசியில், யாரு ஜெயித்தார்? உண்மையான குற்றவாளிக்கு தண்டனை கிடைக்காமல், இன்னொருவருக்கு தண்டனை ஏன் கிடைத்தது? என்கிற கேள்விகளுக்கும் சரியாக நேரம் ஒதுக்கி ஒரு சீன் கூட ஃபில்லர்ஸ் ஆக இல்லாமல், நச்சென இந்த கடைசி எபிசோடை செதுக்கி ரசிகர்களின் பல்ஸை எகிற விட்டுள்ளனர். நேரம் கிடைத்தால், மொத்தமாகவோ இல்லை கடைசி எபிசோடு மட்டும் தான் மிஸ்ஸிங் என்றால் உடனடியாகவோ பார்த்து விடுங்கள்.


Click it and Unblock the Notifications











