Damsel Review: டிராகனோடு போராடும் இளவரசி.. குகைக்குள் இருக்கும் ரகசியம்! இப்படி ஒரு ஃபிளாஷ்பேக்கா?
சென்னை: டாம்சல் (Damsel) திரைப்படத்தில் கதாநாயகி இளவரசி எலிடோனியாவின் நாடு கடும் உணவு பஞ்சத்தால் வாடிக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் இளவரசியின் தந்தை மற்றும் அவருடைய சித்தி இந்த சூழ்நிலையில் மக்களை எப்படி காப்பாற்றலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது பக்கத்து நாட்டு இளவரசருக்கு எலோடியாவை பெண் கேட்டு வருகின்றனர்.
அதோடு தங்கள் இளவரசனுக்கு எலிடோனியாவை திருமணம் செய்து வைத்தால் பஞ்சத்தால் வாடி இருக்கும் நாட்டிற்கு நிறைய தங்கமும் தானியமும் தருகிறோம் என்று சொன்னதால் எலிடோனியாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். திருமணமானதும் மிகவும் சந்தோஷமாக தன்னுடைய கணவரோடு எலிடோனியா நாட்டை விட்டு கிளம்பி போகிறார்.

ஆனால் திருமணத்திற்கு பிறகு அவருடைய கணவரோடு சேர்ந்து மலை உச்சியில் இருக்கும் ஒரு குகையில் தங்களுடைய வழக்குப்படி பூஜை நடக்கிறது என்று சொல்லி அந்த மலையில் இருக்கும் குகைக்குள் கதாநாயகி எலிடோனியாவை கணவர் தூக்கிப் போடுகிறார். அங்கு ஒரு டிராகன் இருக்கிறது. அந்த டிராகனிடமிருந்து எலிடோனியா எப்படி தப்பித்து வெளியே வந்தாள்? அதற்குப் பிறகு தன்னுடைய குடும்பத்தையும் நாட்டு மக்களையும் அவள் எப்படி காப்பாற்றினாள்?
எதற்காக எலிடோனியாவை அந்த குகைக்குள் தூக்கி போட்டார்கள் என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தான் இந்த திரை படத்தின் கதை. அதே நேரத்தில் இந்த திரைப்படத்தின் கதை பெரிய அளவில் லாஜிக் இல்லாமல் இருக்கிறது. இளவரசியுடைய கேரக்டரை "மில்லி பாபி பிரவுன்" அழகாக செய்து இருக்கிறார். தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை சரியாக செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் இந்த திரைப்படத்தில் ரே வின்ஸ்டோன், ஆங்கெலா பேஸ்ஸெட் போன்ற பெரிய நடிகர்கள் இருந்தும் அவர்களை இந்த திரைப்படத்தில் அதிகமாக பயன்படுத்தவில்லை. அதே நேரத்தில் டேவிட் பிளம்மிங் பின்னணி இசை சில நேரங்களில் இந்த திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு பதட்டத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அடுத்த சில இடங்களில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை தெரியப்படுத்தும் விதத்திலேயே இருக்கிறது.
அதே நேரத்தில் டிராகனுக்கு இந்த திரைப்படத்தில்தான் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. முரட்டுத்தனமா இருந்த டிராகனுக்குள் இருக்கும் அம்மா பாசமும் அந்த ஃப்ளாஷ் பேக்கில் வெளிப்படுகிறது. அதுபோல அந்த குகையில் இருக்கும் வெளிச்சம் தரும் புழுக்கள், உள்ளே இருக்கும் நீர் தேக்கங்கள், அதுபோல குகைக்கும் ஏற்கனவே சிக்கி மரணம் அடைந்தவர்கள் எழுதிய குறிப்புகள் என சில காட்சிகள் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று யோசிக்க வைக்கிறது.
அதே நேரத்தில் கதாநாயகி குகையில் இருந்து வெளியே வந்த பிறகு அதே குகைக்குள் தன்னுடைய சகோதரியும் மாட்டிக்கொள்ள தன்னுடைய சகோதரியையும் காப்பாற்ற போராடுகிறார். அதுபோல அந்த டிராகனும் மனிதனைப் போலவே பேசுவது தான் பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது. ஆரம்பத்தில் இது டிராகனா அல்லது ஏதேனும் அமானுஷ்யமா என்று திகைப்பை ஏற்படுத்தி இருந்தாலும் பிறகு சில இடங்களில் இவ்வளவுதானா என்று அலுப்பு தட்ட வைத்து இருந்தது. அதே நேரத்தில் இந்த கதையை இன்னும் அழுத்தமாகவும் முழுமையாகவும் எழுதி இருந்தால் ரசிகர்களுக்கு சுவாரசியத்தை கொடுத்திருக்கும்.


Click it and Unblock the Notifications











