தனுஷின் அடுத்த படமும் ஒடிடி ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர்!
மும்பை: ஜகமே தந்திரம் படத்தை தொடர்ந்து அடுத்த படத்தையும் ஒடிடியில் வெளியிடுகிறார் நடிகர் தனுஷ்.
இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் பாலிவுட்டில் தனுஷ் நடித்துள்ள அட்ரங்கி ரே திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அக்ஷய் குமார், சாரா அலி கான் உள்ளிட்ட நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

வெற்றி கூட்டணி
கோலிவுட்டில் கொடி கட்டி பறக்கும் நடிகர் தனுஷ் முதன் முதலாக இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளியான ராஞ்சனா (அம்பிகாபதி) படத்தில் நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலம் அடைந்தார். அந்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். மீண்டும் அதே வெற்றிக் கூட்டணியில் அட்ரங்கி ரே படம் உருவாகி உள்ளது.

ஒடிடி ஸ்டார்
நடிகர் சூர்யாவை தொடர்ந்து முன்னணி நடிகரான தனுஷ் தொடர்ந்து ஒடிடி தளங்களிலேயே திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெறும் நிலையில் ஜகமே தந்திரம் படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தையும் தனுஷ் ஒடிடியில் வெளியிடுவது ஏன் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அக்ஷய் குமார் இருந்தும்
பாலிவுட்டின் முன்னணி ஹீரோவான நடிகர் அக்ஷய் குமார், சாரா அலி கான் மற்றும் தனுஷ் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்தும் இந்த படம் ஏன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடி ஒடிடி ரிலீசாக வெளியாகிறது என்கிற கேள்வி இயல்பாகவே எழத்தான் செய்கிறது. பெல்பாட்டம், சூர்யவன்ஷி உள்ளிட்ட படங்களை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யும் அக்ஷய் குமாரின் இந்த படம் ஒடிடி வெளியீடாக அடுத்த மாதம் வெளியாக போகிறது.
எப்போ ரிலீஸ்
ராஞ்சனா படத்தை தொடர்ந்து அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷரா ஹாசனுடன் இணைந்து தனுஷ் நடித்த ஷமிதாப் திரைப்படம் சரியாக போகவில்லை. இந்நிலையில், நாளை அட்ரங்கி ரே திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் அறிவிப்பை இயக்குநர் ஆனந்த் எல் ராய் மற்றும் தனுஷ் வெளியிட்டுள்ளனர். வரும் டிசம்பர் 24ம் தேதி கிறிஸ்துமஸ் ரிலீசாக இந்த படம் ரிலீசாகிறது.

மாறனும் ஒடிடியா?
நடிகர் தனுஷின் இந்தி படம் மட்டுமின்றி தமிழில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மாறன், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் நானே வருவேன் உள்ளிட்ட படங்களும் ஒடிடி ரிலீசாக வெளியாகப் போவதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திருச்சிற்றம்பலம் தியேட்டரில் வெளியாகும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications











