இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா சுழல் 2?.. புஷ்கர் - காயத்ரி பார்த்த வேலை.. ஒரு சின்ன அலசல்!
சென்னை: விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் - காயத்ரி எழுதி தயாரித்த சுழல் 2 வெப்சீரிஸை பிரம்மா மற்றும் சர்ஜுன் இணைந்து இயக்கியுள்ளனர். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் இந்த வெப்சீரிஸில் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், லால், சரவணன், கெளரி கிஷன், மோனிஷா பிளெஸி, மஞ்சிமா மோகன், கயல் சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எவ்வளவு பொருட்செலவு போட்டு வெப்சீரிஸ் எடுத்தாலும் 8 எபிசோடுகளை ஓட்ட வேண்டுமே என்பதற்காக தேவையில்லாமல் தலையை சுத்தி மூக்கைத் தொடும் அளவுக்கு கதையை நீட்டி முழக்கி சொல்கின்றனர் என்கிற குற்றச்சாட்டு இந்த வெப்சீரிஸ் மீதும் வைக்கப்பட்டு வருகிறது.

அமேசான் பிரைமில் வெளியான நிலையில், சோஷியல் மீடியாவில் இன்னமும் அந்த வெப்சீரிஸ் டிரெண்டாகவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், 2019ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படத்தின் காப்பி என்றும் சிலர் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர். உண்மையாகவே அந்த ஹாலிவுட் படத்தின் காப்பி தான் சுழல் 2 வெப்சீரிஸா? அல்லது எந்தளவுக்கு ஒற்றுமை உள்ளது? மற்றும் மாற்றம் உள்ளது? என்பது குறித்து சில ஸ்பாய்லர்களுடன் இங்கே அலச உள்ளோம்.
Knives Out கதை: ரியான் ஜான்சன் இயக்கத்தில் 2019ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான Knives Out படத்தில் கோடீஸ்வர தாத்தா இறந்து கிடக்க அது தற்கொலை அல்ல கொலை என்பதை விசாரிக்க சொல்லி போலீஸாருக்கு ஒரு கடிதம் வருகிறது. ஜேம்ஸ் பாண்ட் நடிகரான டேனியல் கிரெய்க் அந்த குடும்பத்தில் இருக்கும் 8 பேரிடம் கொலை செய்தது யார் என்பதை விசாரித்து கண்டு பிடிப்பது தான் கதை. கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் எவான்ஸ், அனா டி ஆர்மஸ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் அந்த படத்தில் நடித்துள்ளனர்.

ஹாலிவுட் பட காப்பியா?: நைவ்ஸ் அவுட் படத்தை போலவே வயதான வழக்கறிஞர் லால் உயிரிழந்துக் கிடக்கிறார். அவர் கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்துக் கொண்டாரா? என்கிற விசாரணையை கதிர் சரவணன் உடன் இணைந்து விசாரிக்கிறார். கெளரி கிஷன் கொலை நடந்த இடத்தில் பூட்டிய அலமாரிக்குள் துப்பாக்கியுடன் வெளிவர அவர் தான் கொலை செய்தாரா? என்கிற கேள்வியும் அவர் இருந்த இடம் வெளியே லாக் ஆகியிருப்பதால் இன்னொருவர் உதவி செய்திருக்க வேண்டும் என விசாரணை நீள்கிறது. 7 பெண்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் சென்று நான் தான் செல்லப்பாவை கொன்றேன் என ஆஜராகின்றனர். இதில், யார் கொலையாளி என்பதை கதிர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை தாண்டி இவர்கள் ஏன் சரண்டர் ஆனார்கள் என்கிற விசாரணையாக சுழல் 2 செல்கிறது. நைவ்ஸ் அவுட் படத்தின் இன்ஸ்பிரேஷன் உள்ளதே தவிர அப்பட்டமான காப்பி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வலிப்பு பிரச்சனை: நைவ்ஸ் அவுட் படத்தில் ஹீரோயின் அனா டி ஆர்மஸ் அந்த வயதான தாத்தாவை பார்த்துக் கொள்ளும் நர்ஸாக நடித்திருப்பார். அவருக்கு பொய் சொன்னால் வாந்தி வரும் பிரச்சனை இருக்கும். அதே போன்ற விஷயத்தை சுழல் 2 வெப்சீரிஸில் புஷ்கர் - காயத்ரி கொஞ்சம் வேறு மாதிரி மேக்கப் செய்து வைத்துள்ளனர். மோனிஷா பிளெஸிக்கு திடீரென வலிப்பு வரும் காட்சி அப்பட்டமாக அங்கே இருந்து சுடப்பட்டது தான் என நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
டாக்டர்: நெல்சன் இயக்கத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இருந்தும் கதையை நைசாக சுட்டு உள்ளே சொருகி விட்டார்கள் புஷ்கர் - காயத்ரி என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











