Vaazhai OTT: மக்கள் கொண்டாடிய வாழை.. ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
சென்னை: கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை படம் மிகவும் கவனத்தைப் பெற்றதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் புரோமோசனில், இந்தப் படம் தனது சிறு வயதில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் எனக் கூறியிருந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ். மேலும் படம் பார்த்த இயக்குநர்கள் தொடங்கி பொது மக்கள் வரை பலருமே படத்தைப் பாராட்டினர். பலரது பாராட்டைப் பெற்ற வாழை படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது.
படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற படமாக மாறியுள்ளது. படத்திற்கு பல காட்சிகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக இருந்தது. விஜய்யின் கோட் படம் ரிலீஸ் ஆன பின்னர் கூட, மல்டி ஃப்ளக்ஸ் தியேட்டர்களில் வாழை படத்தினைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். படத்தில் நடித்த அனைவரும் ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றனர். பல ரசிகர்கள் படம் தங்களது மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்தனர்.

மேலும் மாரி செல்வராஜ் பல இடங்களில் பேசுகையில், இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள வேம்பு கதபாத்திரம், எனது சிறு வயதில் வாழைத் தார் சுமக்கும் வேலைக்குச் சென்று விபத்தில் இறந்து போன எனது அக்காவின் கதாபாத்திரம் என குறிப்பிட்டிருந்தார். இது மட்டும் இல்லாமல், எனது வாழ்வின் மிகப்பெரிய கண்ணீர்தான் இந்தப் படம் எனவும் படம் தொடங்குவதற்கு முன்னர் மாரி செல்வராஜ் குறிப்பிட்டிருந்தார்.
பாலா: வாழை படத்தினைப் பார்த்த இயக்குநர் பாலா, மாரி செல்வராஜைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். மேலும் கலங்கிய கண்களுடன் மாரி செல்வராஜின் கரங்களை வெகு நேரம் பற்றிக் கொண்டு, அதன் பின்னர் மாரி செல்வராஜிடம் ஒரே ஒரு வார்த்தை மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அதேபோல், நடிகர் தங்கதுரை படத்தை பார்த்ததும் வெளியே வந்து மாரி செல்வராஜை ஓடி வந்து கட்டிப்பிடித்து அழுதார்.

க்ளைமேக்ஸ்: படம் முழுவதும் நகைச்சுவை காட்சிகளாலும் உண்மைக்கு நெருக்கமான காட்சிகளாலும் ரசிகர்களை தனது கட்டுக்குள் வைத்திருந்த மாரி செல்வராஜ், படத்தின் க்ளைமேக்ஸ் முடிந்து, படத்தின் இறுதி டைட்டில் கார்ட் முடியும் வரை அனைவரையும் இருக்கையிலேயே அமரவைத்திருந்தார். நீண்ட வருடத்திற்குப் பின்னர் இப்படியான ஒரு படம் தமிழ் சினிமாவில் வெளியாகியுள்ளது என பலரும் பாராட்டினர்.

வசூல்: இது மட்டும் இல்லாமல், க்ளைமேக்ஸில் இடம் பெற்றிருந்த பாடலை மாரி செல்வராஜே எழுதியிருந்தார். அந்தப்பாடல் ரசிகர்களை மேலும் அழவைத்தது. தியேட்டரில் படக்குழு எதிர்பார்த்த அளவை விடவும், அதிகப்படியான வரவேற்பும் வசூலும் கிடைத்ததால் படக்குழு மகிழ்ச்சி அடைந்தது. மேலும் இந்தப் படத்தினை தனது பெற்றோர்களுக்கு இப்போது வரை காண்பிக்கவில்லை என மாரி செல்வராஜ் கூறினார்.

ஓடிடி ரிலீஸ் தேதி: இந்நிலையில் படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகின்றது என படக்குழு தெரிவித்துள்ளது. இது வாழை படத்தினை திரையரங்கில் பார்க்க முடியாமல் போன ரசிகர்களுக்கும் படத்தினை ஓடிடி தளத்தில் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்துக் கொண்டு, படத்தின் ஓடிடி ரிலீஸ்க்காக காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கும் இந்தத் தகவல் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. மேலும் படம், தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, பெங்காளி, மராத்தி மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.


Click it and Unblock the Notifications











