Dragon OTT: விடாமுயற்சியை வசூலில் ஓரங்கட்டிய டிராகன்.. எந்த ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டை பொறுத்தவரை விடாமுயற்சி படத்தை விட வசூலில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் தான் வெற்றிப்படமாக மாறியுள்ளது. தியேட்டரில் வெளியாகி ஒரு மாதம் நிறைவடைவதற்குள் ஓடிடியில் அஜித் குமார் நடித்த விடாமுயற்சி மார்ச் 3ம் தேதி வெளியானது. இந்நிலையில், டிராகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
அமேசான் பிரைம் எல்லாம் ஓடிடி ரசிகர்களை கடந்த ஒரு வருடமாக பெரிதாக எந்தவொரு நல்ல படங்களையும் கொடுக்காமல் கதற விட்ட நிலையில், பலரும் அமேசான் பிரைமுக்கு பெரிய கும்பிடாக போட்டுவிட்டனர். ஆனால், இந்தப்பக்கம் நெட்பிளிக்ஸ் நிறுவனம் போட்டிப் போட்டுக் கொண்டு பெரிய படங்களாக வாங்கி வெளியிட்டு வருகிறது.

விடாமுயற்சி படத்தைத் தொடர்ந்து இந்த மாதமே பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன.
பிரைட் ஃபியூச்சர்: தமிழ் சினிமாவை விட்டே விஜய் விலக முடிவு செய்த நிலையில், பாக்ஸ் ஆபீஸை நிரப்ப புதிதாக யாருமே இல்லையா என்றும் ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் வேலையை பெரியளவில் சிவகார்த்திகேயன் மட்டுமே செய்து வருகிறார் என்று கூறப்பட்ட நிலையில், தனுஷின் ஜெராக்ஸ் மாதிரி இண்டஸ்ட்ரிக்கு புதிதாக வந்துள்ள பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தைத் தொடர்ந்து டிராகன் என அடுத்த பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்து தனக்கு பிரைட் ஃபியூச்சர் கோலிவுட்டில் கண்டிப்பாக உள்ளது என்பதை நிரூபித்துள்ளார்.
விடாமுயற்சியை விட அதிகம்: தமிழ்நாட்டில் விடாமுயற்சி திரைப்படத்தை விட பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் திரைப்படம் தான் தயாரிப்பாளருக்கு லாபகரமான படமாக மாறியது என்றும் அதிக வசூலை டிராகன் படம் அள்ளியிருப்பதாகவும் கூறப்பட்டு வருகின்றன. அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், இவானா என 3 ஹீரோயின்கள் படத்தில் வந்து இளைஞர்களை கவர்ந்த நிலையில், பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், கெளதம் மேனன் என 3 இயக்குநர்கள் நடிகர்களாக மிரட்டியுள்ளனர்.
டிராகன் ஓடிடி ரிலீஸ் தேதி: ஏஜிஎஸ் தயாரிப்பில் கடந்த மாதம் 21ம் தேதி வெளியான பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் வரும் மார்ச் 21ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன. கூடிய சீக்கிரமே நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்ஐகே எப்போது?: பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படம் 100 கோடி வசூலை ஈட்டிய நிலையில், விக்னேஷ் சிவன் கொஞ்சம் வேகமாக படத்தை ரிலீஸ் செய்யுங்க என பிரதீப் ரங்கநாதன் ரசிகர்கள் ஹாட்ரிக் ஹிட்டடிக்க வைக்க வெறித்தனமாக காத்திருக்கின்றனர். பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, சீமான் நடிப்பில் உருவாகியுள்ள லைவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தின் கதையும் வித்தியாசமாகத்தான் இருக்கும் என்றும் பிரதீப் ரங்கநாதனுக்கு அது அடுத்த மெகா பிளாக்பஸ்டரை கொடுக்கும் என்கின்றனர். எல்ஐகே படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











