Dridam Review: ஆத்தி ஹீரோயின்னு பார்த்தா.. இந்த உதை உதைக்கிறா?.. செம ட்விஸ்ட்.. த்ரிதம் ஓடிடி விமர்சனம்!
சென்னை: அமேசான் பிரைம் வீடியோவில் அடுத்து வெளியாகி உள்ள தரமான மலையாள போலீஸ் த்ரில்லர் படம் தான் த்ரிதம் (Dridam). கடைசியாக பல்டி படத்தில் நடித்த ஷேன் நிகாம் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
மார்டின் ஜோசப் இயக்கத்தில் ஷேன் நிகாம், சானியா ஃபாத்திமா, ஷோபி திலகன், தினேஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மே மாதம் திரைக்கு வந்த இந்த திரைப்படம் கடந்த வாரம் ஓடிடியில் வெளியானது.

மலையாள திரையுலகில் தொடர்ந்து போலீஸ் கிரைம் த்ரில்லர் படங்களாக எடுத்து துவம்சம் செய்து வரும் நிலையில், ஒரு போலீஸ் ஸ்டேஷன் மொத்தமும் இப்படியா இருப்பாங்க என்கிற பீதியை கிளப்பும் வகையில் உருவாகியுள்ள த்ரிதம் படத்தோட விமர்சனத்தை இங்கே பார்க்கலாம் வாங்க..
த்ரிதம் கதை: கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள குழிநிலம் எனும் ஒரு சின்ன கிராமத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு புதிதாக எஸ்ஐ அதிகாரியாக பதவியேற்க படித்து டிரைனிங் எல்லாம் முடித்த நம்ம ஹீரோ விஜய் (ஷேன் நிகாம்) வருகிறார். அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் அவரை சக போலீஸ்காரர்கள் ரொம்பவே அன்புடன் வரவேற்கின்றனர். மேலும், இந்த ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் பெரிதாக குற்றச் சம்பவங்களே நடக்காது என்றும் கூறுகின்றனர்.
ஆனால், விஜய் வந்ததில் இருந்தே அதிர்ச்சிகரமாக சில கொலைகளும் ஒரு ஆனைமலை ஃபைனான்ஸ் கம்பெனியில் பெரிய கொள்ளை சம்பவமும் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதனை பார்த்து அப்செட்டாகும் விஜய் அந்த ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் இல்லாததால் அந்த பொறுப்பையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழலில் யார் கொலை பன்றாங்க, பல சவரன் நகைகள் இருந்த லாக்கரை திருடிச் சென்ற கும்பல் யார் என்பதை கண்டுபிடிக்க போராடும் கதை தான் இந்த த்ரிதம்.
ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் சண்டை: வித்யா எனும் கதாபாத்திரத்தில் நடிகை சானியா ஃபாத்திமா நடித்துள்ளார். ஸ்டேஷனுக்கு புதிதாக ஹீரோ பதவியேற்க வரும் போதே அவரை சைட் அடிக்கத் தொடங்குகிறார். காலையில் கராத்தே பயிற்சி செய்யும் போது வித்யாவை பார்த்து ஹீரோ ஜொள்ளு விடுகிறார். மற்ற காலவர்களுடன் இணைந்து சரக்கு அடிக்கும் போது கராத்தேவையும் சரக்கையும் மிக்ஸ் பண்ணக் கூடாது என மறைமுகமாக ஹீரோயினுக்கு தூது சொல்லும் இடமெல்லாம் அருமையாக இருந்தது.
ஆனால், கராத்தே பழகுன நம்ம வித்யா ஹீரோவை கிளைமேக்ஸில் ஒரே ஒரு எத்து விட்டு ஏர்ல வடிவேல் சொல்வது போல பறக்கவிடும் காட்சி தான் சரியான ட்விஸ்ட். பதிலுக்கு, ஷேன் நிகாம் அழகான பொண்ணு அடிக்கிறாளே என அடிங்க மேடம் என நிற்காமல் அவரைப் போட்டு பொளக்கும் சீனெல்லாம் செம பிளாஸ்ட். அந்த கிளைமேக்ஸுக்காகவே தமிழ் டப்பிங்கில் ஓடிடியில் உள்ள இந்த த்ரிதம் படத்தை தாராளமாக பார்க்கலாம். இருவரும் ஏன் அடித்துக் கொண்டனர். அங்கே உண்மையாகவே என்ன பிரச்னை என்பதை படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
பார்க்கலாமா? வேண்டாமா?: படத்தில் கேமரா ஒர்க் எல்லாம் வேறலெவலில் இருக்கும். அதே போல ஸ்டன்ட் காட்சிகளும், நிஜமாகவே அடித்து சொருகுவது போல இருக்கும். முழுப் படமாக பார்த்தால் பெரிதாக போர் அடிக்காது. ஆனால், ஆஹோ ஓஹோ என சொல்லும் அளவுக்கு இல்லை என்பது தான் நிதர்சனம். ஓடிடியில் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications