மஞ்சுமெல் பாய்ஸ் பார்த்த வேலை.. ஓடிடியில் கொண்டாடப்படும் ‘பைரி’ படம்.. சையது மஜீத் பேட்டி!
சென்னை: இந்த ஆண்டு தமிழில் ஒரு படம் கூட சரியாக வெளியாகவில்லை என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட சிலர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், உண்மை என்னவென்றால் ப்ளூ ஸ்டார், ஜே பேபி, பைரி என பல நல்ல படங்கள் தமிழில் இந்த ஆண்டு வெளியாகி உள்ளன.
ஆனால், ஸ்டார் வேல்யூ இல்லாத நிலையில், மக்கள் கூட்டம் அந்த படங்களை பார்க்க தியேட்டருக்கு செல்லவில்லை என்பது தான் நிதர்சனம் எனக் கூறுகின்றனர். அடுத்தடுத்த வாரங்களில் புதுப் படங்கள் வரிசைக் கட்டி ரிலீஸ் ஆன நிலையில், தமிழ் படங்கள் பெரிதளவில் வசூல் ஈட்டவில்லை எனக் கூறுகின்றனர்.

அறிமுக இயக்குநர் ஜான் கிளாடி இயக்கத்தில் புறா பந்தயத்தை செம டீட்டெய்லுடன் கொடுத்து படத்தை பார்த்த ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுத்த பைரி திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தவில்லை என்றாலும் ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில், பலரது பாராட்டுக்களை பெற்று வருவதாக அந்த படத்தில் ஹீரோவாக நடித்த சையது மஜீத் பேட்டியளித்துள்ளார்.
விமர்சகர்களின் பாராட்டு மழை: இந்த ஆண்டு வெளியான பல தமிழ் படங்களை விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் கழுவி ஊற்றி வரும் நிலையில், சில படங்களுக்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் அந்த படத்திற்காக படக்குழு போட்ட உழைப்பை பாராட்டியும் விமர்சனங்கள் வெளியாகின. அதில், பைரி திரைப்படத்துக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் விமர்சகர்கள் மற்றும் படத்தை பார்த்த ரசிகர்களிடம் இருந்து கிடைத்தன.
சையது மஜித் பேட்டி: பைரி படத்தில் ராஜலிங்கம் கதாபாத்திரத்தில் நடித்த கதையின் நாயகன் சையது மஜித் ஒன் இந்தியா தமிழ் பிலிமிபீட்டுக்கு பிரத்யேகமாக அளித்த பேட்டியில் படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்தும், படத்தின் வசூல் எதனால் பாதிக்கப்பட்டது என்பது குறித்தும் விரிவாக பேசியுள்ளார்.
சிவகார்த்திகேயன் பாராட்டு: பைரி படத்தை பார்த்து விட்டு மக்கள் கூட்டம் பெரிதளவில் வரவில்லையே என்றும் சினிமா பிரபலங்கள் கூட யாரும் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லையே என எனர்ஜியே இல்லாமல் இருந்த எங்க டீமுக்கு சிவகார்த்திகேயன் வீட்டுக்கு அழைத்து சுமார் 2.30 மணி நேரம் பாராட்டியது எனக்கும் எங்க டீமுக்கும் ரொம்பவே எனர்ஜியை கொடுத்தது என பேசியுள்ளார்.
மஞ்சுமெல் பாய்ஸ் அலை: பைரி படத்தை பார்த்தவர்கள் எல்லாமே வட்டார வழக்கு முதல் கதை மாந்தர்கள், நடிப்பு, மேக்கிங் என அனைத்தையும் பாராட்டி வருகின்றனர். ஆனால், எங்க படம் பெரிதாக ஓடாமல் போக காரணமே மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் அலை தான். எங்க படத்தை பற்றி மவுத் டாக் இருந்ததை விட அந்த படத்துக்கு அதிகம் இருந்தது தான் எங்கள் படம் வசூல் ரீதியாக வெற்றியடைய முடியாமல் போனதற்கு காரணம் எனக் கூறியுள்ளார்.
ஓடிடியில் நல்ல வரவேற்பு: தமிழ் சினிமா ரசிகர்களின் மைண்ட் செட் தற்போது பெரிய நடிகர்கள் படங்கள் வந்தால் தியேட்டருக்குச் சென்று பார்க்கலாம் என்றும் ஓடிடியில் சிறிய படங்கள் வந்தால் பார்த்து விட்டு பாராட்டலாம் என்கிற நிலைக்கு மாறி விட்டது. அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான பைரி படத்தை பார்த்த பலரும் தற்போது இந்த படத்தை தியேட்டரில் பார்க்க மிஸ் பண்ணிட்டோமே என ஃபீல் பண்ணி வருகின்றனர். 2ம் பாகத்தை நிச்சயம் தியேட்டரில் பார்ப்போம் என சொல்வது சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது என சையது மஜித் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











