Thangalaan OTT: கோட்டே வந்துடுச்சு.. தங்கலான் ஏன் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை.. இதுதான் காரணமா?
சென்னை: இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் தங்கலான். இந்தப் படத்தில் விக்ரம், பார்வதி, மாளாவிகா மோகனன், பசுபதி, ஹரி, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் முதலில் ரிலீஸ் ஆனது. அதன் பின்னர் கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பின்னர் கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி இந்தியிலும் ரிலீஸ் ஆனது. படம் வசூலில் பிரமாண்டமான வெற்றிப் படமாக மாறியது. ஆனால் படம் இன்னும் ஓடிடி தளத்தில் இன்னும் வெளியாகவில்லை. ஏன் என்பதற்கு சில காரணங்கள் முன் வைக்கப்படுகின்றது. அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
தங்கலான் படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது. பொதுவாக ஒரு படம் ரிலீஸாகின்றது என்றால் அப்படம் ரிலீஸ் ஆன தேதியில் இருந்து குறைந்த பட்சம் நான்கு வாரங்களில் படம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யவே பெரும்பாலான ஓடிடி தளங்கள் விரும்புகின்றது. இதுதான் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஓடிடி தளத்திற்குமான முதல் ஒப்பந்தமாகவே உள்ளது. இதனால் ஒருபடம் தியேட்டரில் இந்த குறிப்பிட்ட நாட்களுக்குள் வசூல் குவிக்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகின்றது.

இப்படியான நிலையில், கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆன கோட் படம் இன்று அதாவது அக்டோபர் 3ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகி உள்ளது. ஆனால் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன தங்கலான் படம் இன்னும் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவில்லை. படத்தினை தியேட்டரில் ரிலீஸ் ஆனபோது மிஸ் செய்த ரசிகர்கள் ஓடிடியில் பார்க்க ஆவலாக காத்துக் கொண்டு உள்ளனர். ஆனால் படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்ற பேச்சு ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது.

வெற்றிமாறன்: குறிப்பாக அண்மையில் வெற்றி மாறன் மற்றும் பா. ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்கள் அளித்த பேட்டியில் கூட இது தொடர்பாக பேசி இருந்தனர். அப்போது வெற்றி மாறன் பேசுகையில் மிகவும் முக்கியமான விஷயத்தைக் கூறினார். ஓடிடி நிறுவனங்கள் அதிக அளவில் சினிமாத்துறையில் பணம் கொடுத்து படங்களை வாங்க தொடர்ந்து முன்வந்தது. இதனால் பலரும் ஓடிடி நிறுவனங்களை நம்பி படங்களை எடுக்கத் தொடங்கினர். ஆனால் தற்போது நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது.

படைப்புச் சுதந்திரம்: இப்போது ஓடிடி நிறுவனங்கள் இப்படித்தான் படம் எடுக்க வேண்டும் என்பது போன்ற விதிமுறைகளை விதிக்கின்றார்கள். குறிப்பாக , ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு இது பிடிக்காது, ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு அது பிடிக்காது. எனவே இதுபோன்ற காட்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல விதிகளை விதிக்கின்றார்கள். இதனால் ஒரு இயக்குநரின் படைப்புச் சுதந்திரம் என்பது ஓடிடி நிறுவனங்களின் கைகளில் சிக்கிக் கொண்டு நசுங்கி வருகின்றது என பேசினார்.

இதுதான் காரணமா?: வெற்றி மாறன் இதைக் கூறியதும் பா. ரஞ்சித்தும் ஒப்புக்கொண்டார். இதைவைத்துப் பார்க்கும்போது, தங்கலான் படத்தில் மாட்டுக்கறி சாப்பிடுவதைப்போல் படம் முழுவதும் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் ப்ரீ க்ளைமேக்ஸில் ஒரு எருமையை அடித்துச் சாப்பிடுவதைப்போல் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். மாட்டுக்கறி சாப்பிடுவது என்பது இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது என்பதால் தங்கலான் படத்தினை ஓடிடியில் ரிலீஸ் செய்ய நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் மறுப்பதாக ரசிகர்களில் ஒருதரப்பினர் பேசிக்கொள்கின்றார்கள். மற்றொரு தரப்பினர் படத்தில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களும் இந்துக்கள்தானே எனவும் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர். சீக்கிரமே இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்து படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவேண்டும் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு உள்ளனர்.



Click it and Unblock the Notifications











