Good Wife Review: குட் வைஃப் விமர்சனம்.. நல்ல மனைவியாக பிரியாமணி வென்றாரா? இல்லையா?
சென்னை: பிரியாமணி, ஆரி, சம்பத் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள குட் வைஃப் வெப் சீரிஸ் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. நடிகை மற்றும் இயக்குநர் ரேவதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸின் முதல் சீசன் நேற்று அதாவது ஜூலை 4ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் சீசனில் 6 எபிசோடுகள் இடம் பெற்றுள்ளது. குட் வைஃப் வெப் சீரிஸ் ஏற்கனவே ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழில் உருவாக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வெப் சீரிஸ் எப்படி உள்ளது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
அரசு தரப்பு வழக்கறிஞராக உள்ள பிரியாமணியின் சம்பத், வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவுகிறது. அந்த பெண்ணுடன் அவர் நெருக்கமாக இருக்க காரணம், அவர் போதைப்பொருள் கடத்தும் கும்பலுக்கு துணை போகிறார், அதற்கான லஞ்சம் தான் அந்த பெண் என குற்றம் சுமத்தப்படுகிறது. இதனால் தனது பொறுப்பை ராஜினாமா செய்யும் சம்பத், நீதிமன்றக் காவலில் அடைக்கப்படுகிறார். குழந்தைகளை பராமரிக்க பிரியாமணி தனது முன்னாள் காதலர் ஆரி வேலை பார்க்கும் வழக்கறிஞர்கள் குழுவில் வேலைக்கு சேர்கிறார். சிறப்பாக பணியாற்றினால் தான் வேலை நிரந்தரம் என்ற நிலை. வழக்கறிஞர்கள் குழு ஏற்கனவே, கருத்தரிப்பு மருத்துவமனையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நியாயம் பெற்றுத் தர போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

சம்பத்தை திட்டமிட்டு அரசியல் காரணங்களுக்காக சிக்கவைத்தவர்கள், சம்பத்தை ஜாமீனில் வெளியே கொண்டு வந்த வழக்கறிஞரை தங்கள் வசம் இழுத்து விடுகிறார்கள். இதனால் சம்பத்திற்கு ஆதரவாக பிரியாமணியின் முன்னாள் காதலர் ஆரி ஆஜராகிறார். சம்பத் சிக்க வைக்கப்பட்ட சூழ்ச்சியில் இருந்து வெளியே வந்தாரா இல்லையா? முன்னாள் காதலி, பிரியமணி சம்பத்தை விவாகரத்து செய்து விட்டு வந்தால் திருமணம் செய்து கொள்ளவும் தயாராக இருக்கும் ஆரி என பிரியாமணியை சுற்றி நடக்கும் பல நெருக்கடிகளை மையமாக கொண்டு நகர்கிறது கதை.
திரைக்கதை: வெப் சீரிஸ் என்று வந்துவிட்டாலே எல்லாவற்றையும் நீட்டி முழக்கி சொன்னால் போதும் என்கிற திரைக்கதை குட் வைஃப் சீரீஸையும் விட்டு வைக்கவில்லை. அதே நேரத்தில் சம்பத்தை சிக்க வைத்தது யார்? அவர் எவ்வளவு பெரிய வில்லன் என்று காட்டாததால், அவரது கைது, ராஜினாமா பெரிய அளவில் ஒட்டவில்லை. அதே நேரத்தில் நீதிமன்றங்களில், வழக்கறிஞர்களின் வாதங்கள், அவர்கள் பயன்படுத்தும் டெக்னிக்கலான வார்த்தைகள் என பல காட்சிகள் இருப்பது ரசிக்கும் படியாக இருப்பது மட்டுமல்லாமல், நீதிமன்ற நடவடிக்கைகளை ஓரளவுக்கு உண்மைக்கு நெருக்கமாக காட்ட முயற்சித்துள்ளார்கள் என்பதை பார்க்க முடிகிறது.

பிரியாமணிதான் பிளஸ்: பிரியாமணியின் நடிப்பு, அவரது காஸ்ட்யூம், முக பாவனைகள் வரை பலதும் பாராட்டுக்குரியது. பொறுப்பான தாயாகவும், நெருக்கடியான மனைவியாகவும், நிதர்சனத்தை புரிந்து கொண்டு, குழந்தைகளுக்காக முடிவெடுக்கும் அவரது துணிச்சல், வேலையைத் தக்க வைத்துக் கொள்ள அவர் எடுக்கும் முயற்சிகள் என இவ்வளவு மூட்ஸ்விங்ஸைக் கொண்டுள்ள கதாபாத்திரமாக சிறப்பாக நடித்துள்ளார். ஆரி சீனியர் வக்கீலாக காட்டப்பட்டாலும், ஈர்க்கும் படியான கதாபாத்திரமாக இல்லை. நிதானமாக திரைக்கதை நகர்வதால் அடுத்து இதுதான் என்பதை யூகிக்க முடிகிறது.
எப்படி இருக்கு?: திரைக்கதைக்கு ஏற்ற பின்னணி இசை, நேர்த்தியான ஒளிப்பதிவு ஆகியவை இந்த வெப் சீரிஸ்க்கு பிளஸ். ரேவதியின் இயக்கமும், சமகால அரசியலை கிண்டல் செய்யக்கூடிய வசனங்களும் அருமை. இரண்டாவது சீசனுக்காக ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும் என வைக்கப்பட்ட காட்சிகளுக்கு நியாயம் சேர்க்கும் காட்சிகள், முந்தைய எபிசோடுகளில் இல்லாதது ஏமாற்றமே. பல நல்ல மனைவிகளின் வாழ்க்கை அந்தரத்தில் தொங்குவது போல, அங்கொன்றும் இங்கொன்றுமாக தொங்கும் திரைக்கதையால் இந்த குட் வைஃப் குட் சீசன் ஒன்றில் ஸ்கோர் செய்வதை மிஸ் செய்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











