Heart Beat S2 Climax: ரீனாவை ரதி, விஜய் இணைந்து காப்பாற்றினார்களா? இல்லையா?.. கடைசியில் சோகம்!
சென்னை: ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ஹார்ட் பீட் வெப்சீரிஸின் 2வது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்து அடுத்த சீசன் ஆரம்பிக்கும் என்றும் அறிவித்து ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். ஹார்ட் பீட் வெப்சீரிஸ் அவ்வளவு தான் 100வது எபிசோடுடன் முடிந்துவிடும் இனிமேல் ரதி, ரீனா, அர்ஜுன், விஜய் எல்லாம் பார்க்க முடியாது என நினைத்த ரசிகர்களுக்கு, அப்படியெல்லாம் உங்களை ஏங்க விட மாட்டோம் என அடுத்த பார்ட்டுக்கான சரியான ட்விஸ்ட் உடன் நிறைவு செய்துள்ளனர்.
ரதி தான் தனது அம்மா என்றும் விஜய் தான் தனது அப்பா என்றும் தெரிந்துக் கொண்ட ரீனாவுக்கு திடீரென எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட அப்பாவும் அம்மாவும் சேர்ந்து மகளை காப்பாற்றினார்களா? இல்லையா? என்பது தான் கிளைமேக்ஸ்.

வழக்கு ஒன்றில் வசமாக சிக்கியுள்ள விஜய் தனது மகளின் உயிரை காப்பாற்ற ரிஸ்க் எடுக்க அவரை கைது செய்ய போலீஸ் வரும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களின் பிபியை எகிற வைத்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை.

போலீஸாரிடம் கெஞ்சல்: கடைசி 4 எபிசோடுகள் இன்று ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியானது. ரதியை பிரிந்த விஜய் இளம் வயதில் தற்கொலைக்கு முயற்சி செய்யும் ஃபிளாஷ் பேக் காட்சிகள் மற்றும் விஜய்யை அறுவை சிகிச்சை செய்ய விடாமல் சட்டம் மூலமாக தடுக்கும் சூழ்ச்சிகள் நடக்க, போலீஸாரிடமே முறையிட்டு, தனது மகளை காப்பாற்ற இருக்கும் 5 சதவீத வாய்ப்பை பயன்படுத்த உதவுங்கள் என கெஞ்ச, அவருக்கு அனுமதி கிடைத்ததா? இல்லையா? என்பதெல்லாம் ரசிகர்களை கண் கலங்க வைத்து விடுகிறது.
உயிர் பிழைத்தாரா ரீனா?: டாக்டர் ரதி தனது மகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என போராடி ஆபரேஷன் தியேட்டரில் சிகிச்சை செய்ய தனது மகளை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதை ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள். மேலும், இந்த சீசனுடன் முடியாமல் அடுத்த சீசனுக்கு தொடர்ச்சியை வைத்த இடத்தில் ஒரு சோகமான முடிவையும் வைத்து ரசிகர்களை கண்கலங்க வைத்து விட்டனர். ஹார்ட் பீட் சீசன் 2 ஹேப்பி எண்டிங்காக முடியாமல், இப்படி ஆகிடுச்சே என ரசிகர்கள் வருத்தப்பட்டாலும், அடுத்த சீசன் அடுத்த ஆண்டு என அறிவித்துள்ள நிலையில், ரசிகர்கள் அடுத்து என்ன ஆகும் என்பதை காண காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











