This Week OTT Release - இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ் தெரியுமா?
சென்னை: இந்தியாவில் ஓடிடியின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. திரையரங்குகளில் சென்று படங்கள் பார்ப்பதை ஒருகாலத்தில் மக்கள் எப்படி விரும்பினார்களோ அதே அளவுக்கு தற்போது ஓடிடியில் படங்கள், வெப் சீரிஸ்கள் பார்ப்பதற்கும் அவர்கள் மத்தியில் விருப்பம் அதிகரித்திருக்கிறார். இந்தச் சூழலில் இவ்வாரத்தில் என்னென்ன படங்கள் எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பதை பார்க்கலாம்.
ஒருகாலத்தில் சினிமா என்றாலே திரையரங்குக்கு சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணமும், நிலையும்தான் மக்களிடம் இருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று வந்து ஒட்டுமொத்த உலகத்தையும் வீட்டுக்குள்ளேயே சிறை பிடித்து வைத்த சமயத்தில் ஓடிடியின் தாக்கம் அபரிமிதமான வளர்ச்சி அடைந்தது. உலக நாடுகளில் அதிகம் இருந்த அந்தத் தாக்கம் இந்தியாவிலும் அந்தக் காலகட்டத்தில் அபரிமிதமான வளர்ச்சியை கண்டது. இதன் காரணமாக நெட்ஃப்ளிக்ஸ், அமேசான், ஹாட் ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டன.

காரணம் என்ன?: ஓடிடியின் தாக்கம் அதிகரித்ததற்கு கொரோனா காலம் ஒரு காரணம்தான் என்றாலும் இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது திரையரங்குகளுக்கு சென்று குடும்பத்தோடு ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்றால் பார்க்கிங், இடைவேளை துரித உணவுகள், பயண செலவு, திரைப்படத்துக்கான டிக்கெட் செலவும் குறைந்தபட்சம் 1000 ரூபாயாவது வேண்டும் என்கிற நிலைதான் இருக்கிறது. ஆனால் ஓடிடியில் அதே ஆயிரம் ரூபாய்க்கு சந்தா கட்டிவிட்டால் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாவது மேற்கூறிய செலவுகளை கட்டுப்படுத்தி படங்களோ, வெப் சீரிஸ்களோ காணலாம்.
நேரடி ஓடிடி ரிலீஸ்: தமிழை பொறுத்தவரை நேரடியாக ஓடிடியில் முதன்முதலாக நேரடியாக படத்தை இறக்கிய ஹீரோக்கள் என்றால் அது சூர்யாவும், விக்ரமும்தான். சூர்யா நடித்த ஜெய் பீம், சூரரைப் போற்று ஆகிய படங்களும், விக்ரம் நடித்த மகான் படமும் நேரடியாக ஓடிடியில் ரிலீஸானது. அந்தப் படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதனையடுத்து இயக்குநர்களும் ஓடிடிக்காக வெப் சீரிஸ்கள் இயக்குவதையும் வாடிக்கையாக கொண்டிருக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
கட்டுப்பாடுகள்: இப்படியே விட்டால் தியேட்டர்களின் நிலை அதோகதிதான் என்று அஞ்சிய திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஒரு படம் தியேட்டரில் ரிலீஸான குறிப்பிட்ட காலத்துக்கு பிறகுதான் ஓடிடியில் ரிலீஸ் ஆக வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தது. அந்தக் கட்டுப்பாடு படியே இப்போது ஓடிடியில் படங்கள் வெளியாகின்றன. இந்நிலையில் இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் படங்கள் என்னவென்று இதில் பார்க்கலாம்.
இந்த வார ரிலீஸ்: அதன்படி, மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பனி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது. அதேபோல் ரைஃபில் க்ளப் படமும் நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமாக ஆரம்பித்திருக்கிறது. தமிழை பொறுத்தவரை Family Padam,சூதுகவ்வும் 2, ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் ஆகிய படங்கள் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. மேலும் அபிஷேக் பச்சன் நடித்த ஐ வாண்ட் டூ டாக் என்ற ஹிந்தி படம் அமேசானில் ஸ்ட்ரீமாகிறது. வெப் சீரிஸை பொறுத்தவரை பாதால் லோக் சீசன் 2, chidiya udd ஆகிய வெப் சீரிஸ்கள் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகின்றன.
இவை தவிர்த்து பவர் ஆஃப் பாஞ்ச், அன் மாஸ்க்டு ஆகிய வெப் சீரிஸ்கள் ஹாட் ஸ்டாரிலும், தி ரோஷன்ஸ் என்கிற ஆவணப் படம் நெட்ஃப்ளிக்ஸிலும் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











