தியேட்டரை அதிர வைத்த கருடன் ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா?.. வெளியான லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை: சூரி கோலிவுட்டில் இப்போது முக்கியமான நடிகராக உருவெடுத்துவிட்டார். குறிப்பாக காமெடியன் என்ற இடத்திலிருந்து கதை நாயகன் என்ற இடத்துக்கு நகர்ந்திருக்கிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம் மெகா ஹிட்டாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. சூழல் இப்படி இருக்க கருடன் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகவிருக்கிறது என்பது குறித்த தகவல் ஒன்று கசிந்திருக்கிறது.
வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடியில் நடித்து அதன் மூலம் வெளிச்சம் பெற்றவர் சூரி. அந்தப் படத்துக்கு முன்னதாக அவர் சினிமாவில் பார்க்காத வேலைகளே இல்லை. செட் அசிஸ்டெண்ட்டாக, ஆர்ட் அசிஸ்டெண்ட்டாக தனக்கு கிடைத்த வேலைகளை இழுத்துப்போட்டு செய்தார். காதல், தீபாவளி உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்கள் ஏற்று தலை காட்டினார். ஆனாலும் அவருக்கான காலம் உடனடியாக வரவில்லை. கிட்டத்தட்ட 7 வருடங்கள் சொந்த ஊருக்குக்கூட போகாமல் வெறித்தனமாக உழைத்தார்.

சூரி பெற்ற வெற்றி: பிறகுதான் வெண்ணிலா கபடி குழு படம் அவருக்கான அடையாளத்தை கொடுக்க தொடர்ந்து காமெடி நடிகராக வளர தொடங்கினார். விஜய், அஜித், ரஜினி, சூர்யா என டாப் ஸ்டார்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தார். வெகுளித்தனமான முகம், சிரிக்க வைக்கும் பாடி லாங்குவேஜ் என காமெடியில் சரவெடி கொளுத்தினார். அதேசமயம் அவரது காமெடி அப்படி ஒன்றும் சிரிப்பை வரவைக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மயங்கி விழுந்த இடம்: ஆனாலும் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு வரிசையாக நடித்து தள்ளினார். அதன் காரணமாக நன்றாக சம்பாதிக்கவும் செய்தார். சினிமாவில் வெல்ல வேண்டும் என்று போராடியபோது ஆடிஷனில் கலந்துகொண்ட இடத்தில் பசியின் காரணமாக மயங்கி விழுந்தார் சூரி. தான் சம்பாதித்த பிறகு அதே இடத்தை வாங்கி; இப்போது தனது அலுவலகமாக மாற்றியிருக்கிறார். இதனைப் பார்த்த பலரும் வெற்றி என்றால் இதுதான் வெறித்தனமான வெற்றி என்று சூரிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
கதையின் நாயகன்: சூழல் இப்படி இருக்க வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து கதையின் நாயகனாக மாறினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. சூரியும் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை அள்ளினார். அதனையடுத்து ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் கதை நாயகனாக நடித்தார். கடைசியாக அவர் கதையின் நாயகனாக கருடன் படத்தில் நடித்தார். படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
ஓடிடியில் கருடன்: இந்நிலையில் கருடன் திரைப்படம் ஓடிடியில் எப்போது ரிலீஸாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி ஜூலை முதல் வாரத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் கருடன் ஸ்ட்ரீமாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. தியேட்டரை அதிரவைத்த கருடன் ஓடிடியையும் கலக்க காத்திருப்பதாக சூரியின் ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











