தலைவெட்டியான் பாளையம் விமர்சனம்.. பஞ்சாயத்துக்கு பஞ்சர்?.. பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்
நடிகர்கள்: சேத்தன், தேவதர்ஷினி, அபிஷேக்
இசை: எம்.எஸ்.கிருஷ்ணா
இயக்கம்: நாகா
ரேட்டிங்: 2.5./5
சென்னை: ஹிந்தியில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான வெப் சீரிஸ் பஞ்சாயத். இதுவரை மூன்று சீசன்கள் வெளியாகி ஹிட்டடித்திருக்கின்றன. அதனை தமிழில் தலைவெட்டியான் பாளையம் என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள். பெரும் எதிர்பார்ப்போடு இன்று அமேசான் ப்ரைமில் வெளியானது. நாகா இயக்கத்தில் சேத்தன், தேவதர்ஷினி, அபிஷேக் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். பஞ்சாயத் தமிழ் ரீமேக் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
ஓடிடியின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்த பிறகு வெப் சீரிஸ்களும் அதிகளவிலும் வர ஆரம்பித்திருக்கின்றன. அந்தவகையில் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான வெப் சீரிஸ் பஞ்சாயத். எம்பிஏ படித்து நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டம் இளைஞர்; ஊராட்சி செயலாளராக உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு பணிக்கு செல்வதும்; அங்கு அவர் சந்திக்கும் சிக்கல்களும்தான் சீரிஸின் மையக்கரு. இதுவரை மூன்று சீசன்கள் வெளியாகி ரசிகர்களிடையே அமோக ஆதரவை பெற்றிருக்கிறது.

தலைவெட்டியான் பாளையம்: சூழல் இப்படி இருக்க பஞ்சாயத் வெப் சீரிஸ் தலைவெட்டியான் பாளையம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படவிருப்பதாக அறிவிப்பு வெளியானதிலிருந்து அந்த வெப் சீரிஸ் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களின் காத்திருப்புக்கு முடிவாக இன்று அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் தலைவெட்டியான் பாளையம் வெளியானது. நாகா இயக்க சேத்தன், தேவதர்ஷினி, அபிசேக் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
எப்படி இருக்கு தலைவெட்டியான் பாளையம்?: பஞ்சாயத் வெப் சீரிஸின் ரீமேக் என்பதால் இயக்குநருக்கு பெரிய வேலைகள் எதுவும் இல்லை. அதேசமயம் அந்தக் கதை உத்தரப் பிரதேச நிலப்பரப்பில் நடப்பது போன்றும்; இது தமிழ்நாட்டில் நடப்பது போன்றும் இருப்பதால் சில விஷயங்களை மாற்ற செய்திருக்கிறார் இயக்குநர். அந்த மாற்றத்துக்கு பஞ்சாயத் இயக்குநரும் ஒப்புதல் அளித்திருக்கிறார். அந்த மாற்றங்கள் கொஞ்சம் எடுபடவே செய்திருக்கின்றன.
இயக்குநருக்கு பாராட்டு: கதையை தமிழ்நாட்டுக்குள் கொண்டுவந்திருப்பதால் இங்கிருக்கும் பஞ்சாயத்து அலுவலகங்கள் எப்படி இருக்கும் என்பதை கண் முன்னே கொண்டுவந்திருக்கிறார்கள். குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் காண்பிக்கப்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்தையும், தமிழ்நாட்டில் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தையும் பார்க்கும்போது எவ்வளவு தூரம் நாம் முன்னணியில் இருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. அதனை லாவகமாக காண்பித்திருப்பது பெரிய ப்ளஸ்ஸாக இருக்கிறது. மேலும் இங்கு இருக்கும் அடிப்படை வசதிகளையும் சீரிஸின் ஆரம்பத்திலேயே இயக்குநர் காட்டியிருப்பதையும் பாராட்டலாம். அதேபோல் அறிவியல் வாத்தியாருடன் நடைபெறும் வசனங்கள் நன்றாகவே ரசிக்க வைக்கின்றன. கேமராமேன் நன்றாகவே உழைத்திருக்கிறார்.
நடிகர்கள்: அதேபோல் சேத்தன், தேவதர்ஷினி, அபிஷேக் உள்ளிட்டோரும் தங்களுக்கு கொடுத்திருக்கும் கதாபாத்திரத்தை உணர்ந்தே நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் கொஞ்சம் பாராட்டு கொடுக்கலாம். சேத்தன் நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை சமீபத்தில் அடைந்திருக்கிறார். அதை இதிலும் வெகு இயல்பாக காண்பித்திருக்கிறார் என்பது சிறப்பு.
இயக்குநருக்கு குட்டு: அதேசமயம் பஞ்சாயத் சீரிஸில் தலைவராக வந்தவருக்கும், சேத்தனுக்கும் இடையே மலையளவு வித்தியாசம் இருக்கிறது. அதற்கு சேத்தனை குறை சொல்ல முடியாது. இயக்குநர் இன்னும் கொஞ்சம் எதார்த்தத்தை கதையில் ஓடவிட்டிருக்கலாம். ஏனெனில் ஹிந்தி பஞ்சாயத் சீரிஸின் அடிநாதமே அந்த நிலப்பரப்பின் எதார்த்தமும், கதாபாத்திரங்களின் எதார்த்த நடிப்பும்தான். இதில் பல சீன்களை இயக்குநர் கூடுதலாகவும் சேர்த்திருக்கிறார். முக்கியமாக திருமண சீன் முடிந்து; பூப்புனித நீராட்டு விழா சீனை ஏன் வைத்தார் என்றே தெரியவில்லை.
தப்பித்திருக்க வேண்டிய சீன்: அதேபோல் மானிட்டர் திருடுபோகும் சீன் என்பது கோபத்தில் ஆரம்பித்து சந்தேகத்தில் பயணித்து எமோஷனில் முடியும். ஆனால் இங்கோ எமோஷன் என்பது சுத்தமாக எடுபடவே இல்லை. அதிலும் சோலி போட்டு பார்ப்பதெல்லாம் ரொம்ப ரொம்ப டூ மச் இயக்குநரே. அந்த சீனில் காமெடிக்கு ட்ரை செய்திருக்கிறார்கள். ஒருவேளை காமெடி ஒர்க் அவுட் ஆகியிருந்தால்கூட அந்த அருமையான சீன் தலைவெட்டியான் பாளையத்தில் தப்பித்திருக்கும்.

எதார்த்தமா கிலோ என்ன விலை?: முக்கியமாக ஹிந்தி பஞ்சாயத் ஹீரோ தனக்கு இந்த ஊரில் யாருமே இல்லை; அதனால்தான் குடித்தேன் என்று கூறும் இடத்தில் ஆடியன்ஸுக்கு பரிதாபம் ஏற்படும். ஹீரோவின் தனிமை நம்மையும் தொற்றிக்கொள்ளும். ஆனால் இங்கு அதெல்லாம் துளிக்கூட இல்லை. அதற்கு முக்கிய காரணம் இதில் சிலரை தேவையில்லாமல் இயக்குநர் சேர்த்திருப்பதுதான். (மது வாங்க அழைத்து செல்லும் ஆட்டோக்காரர், மது வாங்கிவிட்டு வரும்போது ஆட்டோவில் ஏறும் இருவர்). அதேபோல் ஹிந்தி பஞ்சாயத்தில் ஹீரோவுடன் வரும் துணை கதாபாத்திரங்கள் எல்லாம் எதார்த்தத்தின் உச்சமாக நடித்திருந்தார்கள். ஆனால் இதில் நடித்திருப்பவர்களோ எதார்த்தத்தை எட்டிக்கூட பார்க்கவில்லை.
உறுத்தலான இசை: மேலும் பேய் மர சீனில் எல்லாம் எதற்காக அந்த தலைவெட்டி சிலை என்று புரியவில்லை. அந்த இடத்தில் சாமி சிலை இருந்தால் அங்கு எப்படி பேய் இருக்கும். ஏன் சாமி பேயை ஓட்டாதா?.. இல்லை சாமியை மக்கள் நம்பவில்லையா? என்ற கேள்விகள் எழுகின்றன. அதுமட்டுமின்றி இந்த மாதிரியான ஜானர்களுக்கு பின்னணி இசை என்பது மிக மிக உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர்த்து உறுத்தலாக இருக்கக்கூடாது. தலைவெட்டியான் பாளையத்தில் பின்னணி இசையும் சரியில்லை; இடையில் வரும் பாடலும் தேவையில்லை.
ஏற்கனவே பார்த்ததால் இதில் ஒன்ற முடியவில்லை என்று சாக்குகள் சொல்லலாம். ஆனால் அந்த ரிஸ்க்கை தெரிந்தே எடுத்த இயக்குநர் வெப் சீரிஸையும் நன்றாக எடுத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு தகுந்தவாறு கதைகளில் சில மாற்றங்களை செய்யலாம். அதில் பெரிய தவறு ஒன்றும் இல்லை. ஆனால் ஒரிஜினல் சீரிஸின் ஆன்மாவையே குலைப்பது போன்று நிலப்பரப்பை ஆடியன்ஸுடன் ஒன்றவிடாமல் செய்தது, கதாபாத்திரங்கள் அனைத்தும் அந்நியமாகிப்போனது, எதார்த்தம் என்பது எள்ளளவுகூட இல்லாமல்போனது என பஞ்சாயத் வெப் சீரிஸை பஞ்சராக்கியிருக்கிறது தலைவெட்டியான் பாளையம். இதுக்கு அந்த பருத்தி மூட்டை பேசாம குடோனிலேயே இருந்திருக்கலாம் என்ற எண்ணம்தான் கடைசியில் எழுகிறது. ஆகமொத்தம் ஒரிஜினல் பஞ்சாயத்தை பார்க்காதவர்கள் இந்த தலைவெட்டியான் பாளையத்துக்கு ஒரு முறை சென்றுவரலாம்.


Click it and Unblock the Notifications











