துரத்தும் துண்டு பேப்பர்கள்.. துடிக்கும் பத்திரிக்கையாளர்கள்! உறைய வைக்கும் "தூதா" பார்க்கவே பதறுதே!

சென்னை: லஞ்சம் வாங்கும் பத்திரிக்கையாளர்களை ஒரு பேய் கொலை செய்தால் எப்படி இருக்கும்? இப்படி ஒரு "அதிபயங்கர" கற்பனையுடன் வெளியாகி சீட்டின் நுனியில் உட்கார வைத்துள்ள வெப்சீரிஸ்தான் "தூதா". விக்ரம் குமார் இயக்கத்தில் நாக சைதன்யா, பிரியா பவானி சங்கர், பார்வதி திருவோத்து, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள தூதாவின் த்ரில் அனுபவத்தை ஒரு குட்டி விமர்சனமாக பார்க்கலாமா? (Dhootha web series review in Tamil).

மொத்த ஆந்திர, தெலுங்கானா மாநிலமே அறியும் அளவுக்கான பிரபல பத்திரிக்கையாளர் சாகர் (நாக சைதன்யா). பென்ஸ் காரில் வலம்வரும் அளவுக்கான பணக்கார ஜர்னலிஸ்ட் அவர். சில தேசிய டிவி சேனல்களில் பார்ப்போமே முன்னணி பத்திரிக்கையாளர்களை, அந்த அளவுக்கு மக்களிடம் முக பரிட்சையமும் இருக்கிறது. ஒரு பிரபல நாளிதழின் தலைமை எடிட்டர் இவர்தான். நன்றாக போய்க்கொண்டிருந்த இவரது வாழ்க்கையில், திடீரென திகில் திருப்பங்கள் ஏற்படுகின்றன.

How Naga Chaitanya, Priya Bhavani Shankars Dhootha web series is undoubtedly a best thriller in the recent time?

அடுத்த எடிட்டராக வர வேண்டிய மாத்யூஸ் என்ற தனது சக சீனியரின் முதுகில் குத்தி பதவியை நைசாக வளைத்துப் போட்ட சாகர் வாழ்க்கை, மாத்யூஸ் தற்கொலைக்கு பிறகு மாறத் தொடங்குகிறது. மாத்யூஸ் குடும்பம் பல இழப்புகளை சந்தித்ததால் வெறுத்துப் போய்தான் அவரே தற்கொலை செய்வார். ஆனால் போகும் முன்பாக அந்த புண்ணியவான்.. சாகரை பார்த்து, இப்போ எனக்கு நடந்தது இனி உனக்கும் நடக்கும் பார் என்று வாயிலிருந்து முத்தை உதிர்த்துவிட்டு வாயிலேயே துப்பாக்கியை வைத்து சுட்டுக் கொண்டு குட்-பை சொல்லிவிடுவார்.

மாத்யூஸ் வாய்முகூர்த்தமோ என்னவோ, சாகர் சிக்கி சின்னாபின்னமானதுதான் மீதிக் கதை. மாத்யூஸ் தற்கொலை செய்யும் முன்பாக சாலையில் பறக்கும் பேப்பரை கூட விடாமல் பொறுக்கி எடுத்து வாசிக்கும் பழக்கம் உண்டு. இது ஒரு Obsessive நிலைக்கே போய் பைத்தியம் என்று அழைக்கும் கட்டத்திற்கே தள்ளிவிடும். அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பேப்பரில் வரும் துண்டு செய்தி உணர்த்துவதால், அடுத்து என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில்தான் மாத்யூஸ் அப்படி பேப்பரை பொறுக்குவது வழக்கம். இப்படித்தான் சொல்லி சொல்லி அந்த பேப்பர் செய்திகள் மாத்யூஸ் குடும்ப உறுப்பினர்களின் உயிரை குடித்திருக்கும். அதே மாதிரி பேப்பர் சாகரை விரட்ட ஆரம்பிக்கும்போது பார்ப்பவர்களுக்கும் திகில் ஒட்டிக்கொள்கிறது. அடுத்த பேப்பரில் என்ன தகவல் வருமோ என்று நகம் கடிக்க வைத்துவிடுகிறது.

How Naga Chaitanya, Priya Bhavani Shankars Dhootha web series is undoubtedly a best thriller in the recent time?

பேப்பர் சாகரை விரட்ட.., பேப்பர்களை சாகர் விரட்ட.., இதிலிருந்து தப்பிக்க இடை இடையே செய்யும் தவறுகளால், போலீஸ் டிசிபி பார்வதியும் சாகரை சேர்ந்து விரட்ட.., அவரிடமிருந்து தப்பிக்க சாகர், திரிஷ்யம் திரைப்பட பாணியில் ட்ரிக்ஸ் செய்ய.. என விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் அடுத்தடுத்து நகர்கிறது வெப்சீரிஸ். பேப்பரில் வேலை பார்ப்பவர்களின் குடும்பத்தில் நடக்கும் அசம்பாவிதங்களை, துண்டு பேப்பர் ஏன் முன்கூட்டியே சொல்லி அவர்களின் நிம்மதியை கெடுத்து ஓட ஓட விரட்டியடிக்கிறது என்பதற்கான பிளாஷ் பேக் அருமை.

ஊடகத்துறை ஜனநாயகத்தின் 4வது தூண் என்கிறோம். எனவே லஞ்சம் வாங்கும் பத்திரிக்கையாளர்கள் ஜனநாயகத்திற்கு கேடு. அவர்களை ஒரு ஆவி கொடூரமாக பழி வாங்கத் தொடங்கினால் சமூகம் எப்படி மாறும் என்று தனது மனதில் ரொம்ப நாட்களாக உறுத்திய விஷயத்தை காட்சிகளாக விரிவுபடுத்தியிருப்பார் போலும் இயக்குநர் விக்ரம் குமார். நல்ல பத்திரிக்கையாளர்களின் பங்களிப்பை, காட்சிகளில் தூவிச் செல்லவும் அவர் மறக்கவில்லை.

How Naga Chaitanya, Priya Bhavani Shankars Dhootha web series is undoubtedly a best thriller in the recent time?

மேலோட்டமாக பார்க்க, ஒரு பேயின் பழி வாங்கும் கதை மாதிரி இருந்தாலும், அதை காட்சிப்படுத்திய விதமும், ஸ்க்ரீன் ப்ளேயும், சாகர்-அவருக்கு உதவிய கெட்ட போலீஸ்காரர்- டிசிபி.. ஆகியோருக்கு இடையே, அவர்களுக்கு தெரியாமல் இருந்த கனெக்ஷனை கடைசியில் அவிழ்த்த விதமும் அருமை. காட்சி முழுக்க வரும் மழை மற்றும் அந்த கறுப்பு தீம் வெப்சீரிசோடு ஒன்ற வைத்தாலும், எப்போ பார்த்தாலும் மழை பெய்கிறதே.. இந்த ஊர் இந்நேரத்திற்கு வெள்ளத்தில் மிதந்திருக்காதா.. என்ற கேள்வி நம்முள் எழும் அளவுக்கு தண்ணீரை தாரை தாரையாக, கொட்டி தீர்த்திருக்க வேண்டாம், விக்ரம் குமார் குழு.

டிசிபியாக வரும் பார்வதியின் இன்ஸ்வெஸ்டிகேஷன்கள் வேறு ரகம். "இதாண்டா போலீஸ்" என்று விசில் பறக்க வைக்கிறது. குற்றவாளியை நெருங்கும் இடங்கள், குற்றம் நடந்த இடத்தை பார்த்தே, என்ன நடந்திருக்கும் என விவரிக்கும் பாங்கு போன்றவை "போர்த்தொழில்" படத்தில் சரத்குமார் கதாப்பாத்திரம், அசோக் செல்வன் கதாப்பாத்திரத்திடம் விவரிக்கும் காட்சிக்கு சற்றும் குறைவில்லாதது. ஆனால் கதை போக்கிற்காக, இடையே ஒரு இடத்தில் டிசிபி விசாரணையை திசை திருப்பிவிட்டனர். அவரது புத்திசாலித்தனத்திற்கு அந்த காட்சி பொருந்தவில்லை. இருப்பினும் க்ளைமேக்சில் அவர் புலனாய்வு செய்து பழைய எம்எல்ஏ குடும்பம் கொலை வழக்கை வெளிக்கொண்டு வந்தது, கைதட்ட வைக்கும் ரகம்.

How Naga Chaitanya, Priya Bhavani Shankars Dhootha web series is undoubtedly a best thriller in the recent time?

ஒரு சில ரிப்பீட் டைப் காட்சிகள் இருந்தாலும், மொத்தத்தில் சிறப்பான ஸ்க்ரீன் ப்ளே, நாக சைதன்யாவின் ஸ்டைலிஷ் நடிப்பு போன்றவை வெப்சீரிசை வேறு லெவலுக்கு தூக்கி நிறுத்திவிட்டது. பேப்பர் துண்டுகளை வைத்தே கதையை நகர்த்திய விதம் சிறப்பான டச். கிறுஸ்துமஸ் வீக் என்ட்டுக்கு சரியான தீனி இந்த வெப்சீரிஸ். கொசுறு தகவல் என்னவென்றால், "ஒரு துளி ஆபாசம் கூட இந்த வெப் சீரிசில் இல்லை."

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X