OTT: ஈரான் போர்களை உலக கவனத்திற்கு கொண்டுவந்த திரைப்படங்கள்.. எந்த OTT-யில் பார்க்கலாம்?
சென்னை: ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களால் ஈரானின் உச்ச தலைவர் கமேனி உயிரிழந்தார். இதை ஈரான் அரசு உறுதி செய்தது. இந்த தாக்குதல்களில் 165 பள்ளிக் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது. இப்படி இருக்கையில் சர்வதேச நாடுகள் பலவும் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறது. ஈரானும் தக்க பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ளது.
இப்படி இருக்கையில் ஈரான், ஈரான் நாட்டில் நடந்த தாக்குதல்கள், போர்கள் குறித்து சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த படங்கள் குறித்தும் அவை எந்த ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது என்பது குறித்தும் காணலாம்.
Under the Shadow - 2016: இது ஒரு போர்-ஹாரர் (War-Horror) திரைப்படம். 1980களில் ஈரான்-ஈராக் போரின் போது ஏவுகணைத் தாக்குதல்களுக்கு நடுவே ஒரு தாயும் மகளும் எதிர்கொள்ளும் மனரீதியான மற்றும் அமானுஷ்ய போராட்டத்தை திரைக்கதையாக கொண்டு இந்த படத்தை இயக்கி உள்ளார், இயக்குநர் பாபக் அன்வாரி. இந்த படத்திற்காக அவருக்கு 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த அறிமுக விருதை BAFTA திரைப்பட விழாவில் பெற்றார். 87ஆவது ஆஸ்காருக்கும் இந்த படம் நாமினேட் செய்யப்பட்டது. இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் உள்ளது.

Persepolis - 2007: இரானிய புரட்சி மற்றும் ஈரான்-ஈராக் போரின் போது ஒரு சிறுமி எவ்வாறு வளர்ந்து பெரியவள் ஆகிறாள் என்பதை மிகவும் உணர்ச்சிகரமாக காட்டிய ஒரு அனிமேஷன் படம். இது அனிமேஷன் படம் என்றாலும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்திற்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜூரி தரப்பில் இருந்து சிறப்பு விருது அளிக்கப்பட்டது. மர்ஜான் சத்ராபி மற்றும் வின்சென்ட் பரொனாட் என இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கி உள்ளனர். படம் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆகிக்கொண்டு உள்ளது.
The Lost Sentry: ஈரானிய ராணுவ வீரர்களின் தியாகத்தையும், எல்லையில் அவர்கள் சந்திக்கும் சவால்களையும் எதார்த்தமாக படம்பிடித்த படம். ஈரானிய சினிமா வரலாற்றில் போர் வகைப் படங்களில் இது ஒரு முக்கியமான படைப்பாகக் சினிமா ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. படத்தை முகமது மெஹ்தி அஸ்கர் பூர் என்ற இயக்குநர் இயக்கி உள்ளார். படத்தை யூடியூப் தளத்தில் பார்க்கலாம்.

Bashu, the Little Stranger - 1989: ஈரான்-ஈராக் போரில் தனது குடும்பத்தை இழந்த ஒரு சிறுவன், போரே இல்லாத வடக்கு ஈரான் பகுதிக்குத் தப்பிச் செல்கிறான். அங்கு ஒரு பெண்ணுக்கும் அவனுக்கும் ஏற்படும் உறவை இப்படம் அழகாகச் சொல்கிறது. போரின் நேரடி காட்சிகளை விட, அது ஏற்படுத்தும் இடப்பெயர்வை தத்ரூபமாக பேசிய படங்களில் இதுவும் ஒன்று. பஹ்ராம் பெய்ஸாய் என்ற இயக்குநர் இயக்கி உள்ள இந்த படத்தை, ஈரானின் மிகச்சிறந்த 10 படங்களில் ஒன்றாக தொடர்ந்து பலரும் வரிசைப்படுத்தி வருகிறார்கள். இந்த படமும் பிரைம் வீடியோ தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
From Karkheh to Rhein - 1993: இந்த படத்திலும் போரின் காட்சிகள் பெருமளவில் இல்லை என்றாலும், போருக்குப் பிந்தைய தாக்கங்கள் குறித்து மிகவும் தத்ரூபமாக விவரித்த படங்களில் இந்த படமும் ஒன்று. ஈரானிய சினிமா வரலாற்றில் போர் வகைப் படங்களில் இது ஒரு முக்கியமான படமாக உள்ளது. இப்ராகிம் ஹதாமிக்கியா இயக்கிய இந்த படம் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை அர்வலர்கள் மற்றும் செயல்பாட்டவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் யூடியூப் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.



Click it and Unblock the Notifications











