Siren - இறைவன் படத்தில் விழுந்த அடி.. ஓடிடியில் ரிலீஸாகிறதா ஜெயம் ரவியின் சைரன்?.. முழு விவரம் உள்ளே
சென்னை: கோலிவுட்டின் டீசண்ட்டான நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. சினிமா பின்புலம் உள்ள குடும்பம் என்றாலும் தனது கரியரின் ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டார் அவர். இந்த சூழலில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் சைரன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவான ஜெயம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தை ரவியின் அண்ணான் ராஜா இயக்கியிருந்தார். அதன் பிறகு அவர் நடித்த படங்களும் தொடர்ந்து ஹிட்டாகின. சினிமா பின்னணி உள்ள குடும்பம் என்றாலும் சினிமாவில் ஒவ்வொன்றாக முறையாகவே கற்றுக்கொண்டார் ரவி. ஆளவந்தான் படத்தில்கூட கடைசி அசிஸ்டெண்ட் டைரக்டராக அவர் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உச்சம் சென்ற ரவி: ஜெயம் ரவி தான் தேர்ந்தெடுக்கும் கதைகளில் தெளிவாக இருப்பவர். அதனால்தான் அவரது கேரியரில் பல வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவரது படங்களில் பல படங்கள் முக்கியமானதாக இருந்தாலும் பேராண்மை படம் அவைகளில் தனித்து தெரியும் ஒன்று. கம்யூனிஸ சித்தாந்தவாதியான ஜனநாதன் இயக்கத்தில் உருவான அந்தப் படம்தான் ரவியை முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக அடையாளப்படுத்தியது.
தனி ஒருவன்: அதேபோல் தனி ஒருவன் படம் ரவியின் கேரியரில் மிக மிக முக்கியமான படம். அதுவரை ஜெயம் ரவியை வைத்து ரீமேக் படங்களை மட்டுமே இயக்கிவந்த ராஜா முதல்முறையாக ரவிக்கென்று சொந்தமாக கதை எழுதினார். ஐபிஎஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்த அந்தப் படம் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஆனது. அதிலிருந்து ராஜாவின் கேரியரும் உச்சம் சென்றது எனலாம்.
பொன்னியின் செல்வனில் கலக்கிய ரவி: இந்தச் சூழலில் யாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைக்காத வாய்ப்பு ஒன்று ஜெயம் ரவிக்கு கிடைத்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வனில் ரவி, அருண்மொழி சோழனாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் இந்தக் கதாபாத்திரத்திற்கு ரவி செட் ஆவாரா என்று கேள்வி கேட்டவர்கள் அனைவரும் படத்தில் ரவியின் நடிப்பை பார்த்து வாயடைத்துப்போயினர்.
இறைவன்: அவரது நடிப்பில் கடைசியாக இறைவன் திரைப்படம் வெளியானது. என்றென்றும் புன்னகை படத்தை எடுத்த அகமதுவின் இயக்கம் என்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு பன்மடங்கு இருந்தது. ஆனால் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. மேலும் ரவியின் கரியரில் மோசமான தோல்வி படமாகவும் அது அமைந்துவிட்டதாக திரைத்துறையினர் ஓபனாகவே பேச ஆரம்பித்தனர். அதேபோல் இறைவன் படத்துக்கு முன்னதாக வந்த அகிலன் படமும் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
சைரன்: இந்நிலையில் அவர் சைரன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஆண்டனி பாக்யராஜ் என்ற புதுமுக இயக்குநர் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷ் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில்கூட படத்தின் டீசர் வெளியானது. சூழல் இப்படி இருக்க சைரன் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தை தியேட்டரில் வெளியிடாமல் நேரடியாக ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் வெளியான ஜெயம் ரவியின் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால் தியேட்டரில் ரெஸ்பான்ஸ் கிடைக்குமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இதற்கிடையே கமல் ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்திலும் ரவி கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











