தமிழில் ஒரு கல்ட் கிளாஸிக் சினிமா... தலைக்கூத்தல் படத்தின் ஓடிடி திரை விமர்சனம்!
சென்னை: லென்ஸ் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன்.
அவரது இயக்கத்தில் சமுத்திரகனி, கதிர், வசுந்தரா, முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் தலைக்கூத்தல்.
இந்தப் படம் கிராமப்புறங்களில் வழக்கமாக காணப்பட்ட 'தலைக்கூத்தல்' என்ற சடங்கினை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது.
திரையரங்குகளைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள தலைக்கூத்தல் படத்திற்கு ஓடிடி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனையடுத்து இந்தப் படத்தின் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

முதுமையின் துயரம்
துன்பத்திலும் துயரத்திலும் யாரேனும் ஒருவர் தோள் கொடுக்கமாட்டாரா என ஏங்குவது மனித இயல்பு. ஆனால், முதுமையே அந்த துன்பமும் துயரமுமாக ஒருவனை சூழ்ந்துவிட்டால் அதனை விவரிக்க வார்த்தைகள் ஏது. அப்படியான துயரங்களின் மெளன மொழியாக வெளியாகியுள்ளது தலைக்கூத்தல் திரைப்படம். இளம் வயதில் ஏற்பட்ட காதல் தோல்வியின் நினைவுகளோடு முதுமையின் பிடியில் சிக்கித் தவிக்கிறார் முத்து. அவரது மகனான பழனி (சமுத்திரகனி) அப்பா எப்படியும் எழுந்து நடந்துவிடுவார் என்ற நம்பிக்கையோடு அவருக்கு பணிவிடைகள் செய்து வருகிறார்.

கையறு நிலையில் பழனி
படுக்கையில் கிடக்கும் அப்பாவால், சரியாக வேலைக்கும் செல்ல முடியாமல், குடும்பத்தையும் கவனிக்க இயலாமல் கையறு நிலையில் திணறுகிறார் சமுத்திரகனி. ஆனாலும், அப்பாவின் மீதான பாசம் அவரை சொந்த குடும்பத்தினர் முன்னிலையிலேயே செல்லா காசாக மாற்றிவிடுகிறது. அப்பா கண் முழிக்க வாய்ப்பே இல்லை என்றாகும் போது, பழனி என்ன முடிவெடுக்கிறார் என்பதே 'தலைக்கூத்தல்' படத்தின் கதை. தந்தை - மகன் பாசப் பின்னணியில் மிகப் பெரிய மானுட உளவியல் பேசியுள்ளது இந்தப் படம்.

நினைவுகள் மட்டுமே நிரந்தரம்
முதுமையில் படுத்த படுக்கையாக கிடக்கும் ஒருவனுக்கு அவனது நிழல் கூட துணையிராது, அவனுள் புதைந்துகிடக்கும் நினைவுகள் மட்டுமே வரமும் சாபமும். வரம் என்பது காதலை தாண்டி வேறெதுவும் இருக்க முடியாது தான். சாபம் என்றால் அதுவும் காதல் தான், இது தோல்வியில் முடிந்த காதல். துவேஷம் கொண்ட தொன்மக் கதைகளாலும் சாதியாலும் சமூக அவலங்களாலும் கெளரவத்தின் ஆணவத்தின் கசடுகளாலும் உடன்கட்டை ஏற்றப்பட்ட காதல். நரை செழித்தாலும் மனிதர்களுக்குள் கருத்தரித்த காதல் அல்லது காதல்கள் என்றுமே இளமையாக தான் ஊஞ்சலாடுகிறது. அதுவே படுக்கையாக கிடக்கும் முத்துவிற்கு சுகராகமாக தன் நினைவுகளில் வந்து செல்கிறது.

கல்ட் கிளாசிக் சினிமா
தலைக்கூத்தல் படத்தில் முதுமையின் பிடியில் அசைவுற்றுக் கிடக்கும் முத்துவிற்கு, முதல் பிடிமானம் பேச்சியின் காதலும் அந்தச் சுவடுகளும். இரண்டாவதாக மகன் பழனியும் முத்துவின் பேத்தியும். தந்தைக்கும் மகனுக்குமான ஆத்மார்த்த அன்பு ஒவ்வொரு காட்சியிலும் வண்ணங்கள் தீர்ந்துபோன வானவில்லாக ஜொலிக்கின்றன. ஏனென்றால் அவர்கள் பரிமாறிக்கொள்ளும் அதிகபட்ச உரையாடல்கள் 'ஐயா' என்றழைப்பதிலும் 'ஒற்றை கண் சிமிட்டலும்' மட்டுமே. இந்த வகையில் தலைக்கூத்தல் தமிழில் ஒரு கல்ட் கிளாசிக் சினிமாவாக அடையாளம் பெறுகிறது.

உயிர் கொடுத்த கலைஞர்கள்
நாம் கடந்து வந்த எல்லாவற்றையும் முதுமையின் போது கழுதையைப் போல பொதியாக தான் சுமந்து செல்கிறோம். ஆனால், அந்த பொதி கடைசி வரை காலாவதியாகாது. அதனால் அதனை எதிர்பார்க்காமல் அந்த கழுதை தனது இறுதி இலக்கை அடைந்துவிட வேண்டும். இல்லையென்றால் பலரது இறுதி மூச்சும் 'தலைக்கூத்தல்' கடந்தே முற்றுப் பெறும். இப்படி மரணத்தை முன்னிலைப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சமுத்திரகனி, கதிர், கலைச்செல்வன், வசுந்தரா, முருகதாஸ், வையாபுரி உட்பட அனைவரும் உயிர் கொடுத்துள்ளனர்.

மிஸ் பண்ண கூடாத சினிமா
குறிப்பாக முத்து - பேச்சியின் காதல், பழனி - கலைச்செல்வி தம்பதியின் முரண்களும் பிடிவாதமும் இருவேறுவிதமான மனக் கூறுகளை ரசிகர்களுக்கு கடத்துகிறது. இளம் வயது முத்துவாக கதிரும், முதுமையில் இருக்கும் முத்துவாக கலைச்செல்வனும் அட்டகாசமான தேர்வு. அதேபோல், பழனி கேரக்டரில் தந்தையின் மீது பரிவு காட்டும் இடங்களிலும், மனைவியிடம் அவமானப்பட்டு கூனிக் குறுகி நிற்கும் போதும் கலங்கடிக்கிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் மாஸ்டர் கிளாஸ். பேச்சியாக வரும் கதா நந்தி, பழனியின் மகள் ராஜியாக வரும் விஸ்ருதா, உட்பட துணை பாத்திரங்களும் நிறைவாக நடித்துள்ளனர்.

ஓடிடி ரசிகர்களுக்கு திரைவிருந்து
அதேபோல், ஆடுகளம் முருகதாஸ் பாத்திர வார்ப்பும் அதன் பின்னணியும் அருமையாக வந்துள்ளது. காலை இழந்து நடக்க முடியாமல் சிரமப்படும் ஒருவன், சிறகடித்து பறக்க வேண்டும் என ஆசை கொள்வதில் இருக்கும் நுட்பமான உளவியல் பல செய்திகளை முன் வைக்கிறது. சிதிலமடைந்து கிடக்கும் சமுத்திரக்கனியின் வீட்டையும் மார்ட்டின் டொன்ராஜ் தனது கேமராவால் அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். டேனி சார்லஸின் எடிட்டிங், கண்ணன் நாராயணனின் பின்னணி இசை என அனைத்தும் தலைக்கூத்தல் படத்தின் பெரும் பலமாக அமைந்துள்ளது. படத்தின் நீளம் மட்டும் குறையாக தெரிந்தாலும், நிச்சயம் இது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications











