Atlas Review: ஏஐ இவ்ளோ ஆபத்தானதா?.. ஜெனிஃபர் லோபஸ் ’அட்லஸ்’ ஓடிடியில் பார்க்க வொர்த்தா? இல்லையா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: அனகோண்டா பட நாயகி 54 வயதில் நடித்துள்ள 'அட்லஸ்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சமீபத்தில் வெளியானது. டாம் க்ரூஸ் இயக்கத்தில் வெளியான மிஷன் இம்பாசிபிள் ரோக் நேஷன் திரைப்படத்தில் எப்படி ஏஐ தொழில்நுட்பத்தை வில்லனாக காட்டியிருந்தாரோ அதே போல இந்த படத்திலும் ஏஐ தான் வில்லனே.
ஆரம்பத்தில் டெர்மினேட்டர் படங்கள் ரோபோக்களை வில்லனாக காட்டி வந்தன. வேற்று கிரக வாசிகளான ஏலியன்களையும் வில்லனாக்கிய நிலையில், தற்போது அந்த வரிசையில் ஏஐ தான் பல ஹாலிவுட் படங்களுக்கு வில்லனாக தற்போது மாறியிருக்கிறது.

ஜெனிஃபர் லோபஸ் நடித்த 'தி மதர்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதே வேகத்தில் இன்னொரு படத்திலும் இந்த பேட்மேன் மனைவி நடித்த 'அட்லஸ்' திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பது குறித்த விமர்சனத்தை இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..
'அட்லஸ்' கதை: தனது அம்மா உருவாக்கிய ஏஐ ரோபோவான ஹர்லான் அம்மாவிடம் பாசமாக இருக்கிறார் என சிறு வயதில் பொறாமைப்படும் நாயகி செய்யும் செயலால் உலகத்துக்கே அந்த ஏஐ ரோபோ வில்லனாக மாறி விடுகிறான். அம்மாவின் இறப்புக்கே நாம் தான் காரணமாக ஆகிவிட்டோம் என்கிற குற்ற உணர்ச்சியில் இருக்கும் அட்லஸ் உலகத்தை அழிக்கத் துடிக்கும் ஹர்லானிடம் இருந்து எப்படி பூமியை காப்பாற்றுகிறார் என்பது தான் இந்த படத்தின் கதை.

படம் எப்படி இருக்கு?: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பிடிக்காதவர்களுக்கு இந்த படம் ரொம்பவே பிடிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. 28 ஆண்டுகளுக்கு முன்னதாக பூமியில் இருந்து ஏஐ தீவிரவாதியான ஹர்லான் வேற்று கிரகத்துக்கு தப்பிச் செல்வதும், 28 ஆண்டுகள் கழித்து அவரை ஒரு பெரிய படையுடன் ஜெனிபர் லோபஸ் பிடிக்க வேற்று கிரகத்துக்கு செல்வதும், அங்கே அவர் சந்திக்கும் சிக்கல்களும் என படம் பரபரப்பாகவே செல்கிறது. ஆனால், ஜெனிபர் லோபஸை மட்டுமே மையப்படுத்தி சுமாரான கற்பனையுடன் பழைய படங்களின் கதையையே வைத்து உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படம் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.
அவதார் பாதிப்பு: அவதார் படத்தில் வரும் பிரம்மாண்ட மெஷின் ஷூட் மற்றும் வேற்று கிரக கலர் கலர் பூக்கள் வடிவமைப்பு என ஏகப்பட்ட இடங்களில் அவதார் படத்தின் பாதிப்பு அதிகமாகவே தென்படுகிறது. ஏஐ தொழில்நுட்பத்தை அழிக்க இன்னொரு ஏஐ தொழில்நுட்பமான ஸ்மித் உதவி செய்வது போன்ற கதையை வைத்துக் கொண்டு இயக்குநர் பிராட் பீட்டன் வடை சுட்டு இருக்கிறார்.

பார்க்கலாமா? வேண்டாமா?: 800 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த அட்லஸ் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கிறது. சயின்ஸ் ஃபிக்ஷன், ஏஐ படங்களை பார்க்க அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தால் ஒரு முறை முயற்சி செய்யலாம். மேக்கிங் ரீதியாக படம் நல்லாவே இருந்தாலும், கதை ரீதியாக ரொம்பவே டல் அடிக்கிறது. அந்த ஏஐ ஏன் உலகத்தை விட்டு வேற்றுக் கிரகம் செல்கிறான். 28 ஆண்டுகள் ஹீரோயின் வளர்ந்து வரும் வரை எதற்காக காத்திருக்கிறான். ஒட்டுமொத்த படையும் அழிந்த பின்னர் ஹீரோயின் தனி ஒருத்தியாக சென்று ஏஐ படையையே அழிப்பது எல்லாம் பிரில்லியண்டான இயக்கம் இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது.


Click it and Unblock the Notifications











