உங்களுக்கு காதல் சினிமா பிடிக்குமா.. அப்போ மிஸ் பண்ணிறாதீங்க.. ஓடிடியில் "ஜோ" படம்!
சென்னை: ஹரிஹரன் ராம் இயக்கத்தில், ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பாவ்யா, கனாக்கானும் காலங்கள் புகழ் ஏகன், அன்புதாசன் உட்பட பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் ஜோ (Joe movie) தற்போது ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் (Joe movie OTT release) காணக்கிடைக்கிறது.
1990கள் காதல் திரைப்படங்களின் பொற்காலம். காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை, கண்ணெதிரே தோன்றினாள், காதலர் தினம் என காதலை மையப் பொருளாக வைத்து ஃபீல் குட் மூவிகள் நிறைய வெளியாகின. காதல் என்பதுதான் பெரும்பாலான படங்களின் மையக் கருப்பொருளாக இருந்தது. காதலுக்காக ஹீரோ கதாப்பாத்திரம் தனது நாக்கையே வெட்டிக்கொண்ட "சொல்லாமலே" போன்ற படங்கள் மெகா ஹிட் அடித்தன. 21வது நூற்றாண்டு பிறந்த பிறகு தமிழ் சினிமா காதலை கைவிட்டு ஆக்ஷன் மூவிகளை நோக்கி நகர ஆரம்பித்தது.

"பூவே உனக்காக", மாதிரி படங்களில் இருந்து திருமலை, பகவதி என விஜய் அவதாரம் எடுத்தார். தீனா, சிட்டிசன், பில்லா என அஜித் ரூட் எடுத்தார். காதலை மட்டுமே நம்பியிருந்த பிரசாந்த், மாதவன் கைவிடப்பட்டனர். இதையெல்லாம் கவனித்த தமிழ் திரையுலகம், அதுவரை செய்ததை போல, காதலை விருந்தாக படைக்காமல், ஊறுகாயாக தொட்டுக் கொள்ள ஆரம்பித்தது. காதலை சுற்றி கதை நகராமல், கதைக்கு நடுவே, அப்பப்போ காதல் வந்து சென்றது. இதனால் காதல் காட்சிகளின் அழுத்தம் குறைந்து செயற்கைத் தனம் மிகுந்தது.
காதல் படங்கள்: இப்படி வறண்டு போன திரையுலக வானிலையில், அப்பப்போ, கோடை மழை மாதிரி குளிர்விக்க, "விண்ணைத்தாண்டி வருவாயா," "96" "முதல் நீ முடிவும் நீ" போன்ற திரைப்படங்கள் வந்தன. ஏன்.. மலையாளத்து பிரேமம் கூட அப்படியானதுதானே. அந்த வரிசையில், வந்த, ஒரு கோடை காலத்து குளிர் மழைதான் ஜோ (Joe).
ஜோ படம் கதை: கோயம்புத்தூரில் உள்ள கல்லூரியில் படிக்கும் ஜோ (ரியோ ராஜ்) என்ற இளைஞன், தன்னுடன் படிக்கும் சுஜித்ரா (மாளவிகா மனோஜ் ) மீது காதல் கொள்கிறான். ஆனால், பல கல்லூரி காதல் கதைகளைப் போல் அல்லாமல், இவர்களது கதை "அலைபாயுதே" பாணியில் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், இருவரும் வரும் காதல் காட்சிகள் பார்ப்பவர்கள் நெஞ்சில் ஆணியடிக்கிறது. இந்த காதல் வெற்றி பெற்றதா இல்லையா என்பதை, கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் சோகம், பாசம் என பல வகை உணர்வுகளை கடத்தி படையலாக்கியுள்ளது படக்குழு.
காதல் டயலாக்குகள்: காதலை மையப்படுத்தியே கதை நகருவதால் பக்கத்து வீட்டு பசங்க மாதிரி தோற்றமுள்ள மாளவிகா - ரியோ தேர்வு திகட்டாமல், பிரமாதமாக உள்ளது. "எந்த பொண்ணு பக்கத்திலும் இப்படி நெருக்கமா உட்கார்ந்தது இல்லை.. உன் மூச்சுக் காற்று என் மேல பட்டுகிட்டே இருக்கனும்.." என்பது போன்ற டயலாக்குகள், நாடி நரம்பெல்லாம் காதல் வெறி ஏறிப்போன ஒருவரால் எழுதப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். படம் முழுக்க காதல், காதல் மட்டுமே.
பல படங்களின் காக்டெய்ல்: காதலர்களிடையேயான சின்ன சின்ன சண்டைகள், கோவில் தாலி போன்றவை அலைபாயுதே படத்தையும், மலையாள பெண்.. பெண் கேட்டு கேரளா போவது, அப்பா பேச்சை கேட்கும் ஹீரோயின் போன்ற காட்சிகள் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தையும் நினைவூட்டுவதை மறுக்க முடியாது. பட்டாம் பூச்சி பூவின் மீது அமர்ந்து பறந்து செல்வது.. மழை ரிவர்சில் பெய்வது போன்றவை உள்ளிட்ட மேலும் பல காட்சிகள், பிரேமம் படத்தை நினைவூட்டுகின்றன. இருப்பினும் அத்தனை காதலுக்கு மகுடம் வைத்த படங்களையும் ஒரே படத்தில் பார்ப்பது போன்ற உணர்வும் ஒரு வகையில் புதிதாகத்தான் இருக்கிறது.

பலம்: கல்லூரி காதல், காதல் தோல்வி, திருமண வாழ்க்கை என ஒரு ஆணின் வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை படம் யதார்த்தமாக காட்டுகிறது. சித்து குமார் இசை, ராகுல் கேஜி விக்னேஷ் ஒளிப்பதிவு போன்றவை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. ரியோ ராஜ் ஜோவாக நடிப்பில் மிரட்டியுள்ளார். மாளவிகா கண்கள் வழியாக நடிப்பை கடத்தியுள்ளார்.
பலவீனம்: படத்தின் கதைக்களம் சுவாரஸ்யமாக இருந்தாலும், திரைக்கதை சற்று மெதுவாக செல்கிறது. சில இடங்களில் காட்சிகள் தேவையில்லாமல் நீளமாக உள்ளன. மது போதை, காட்சிகளின் வழியே, சகஜமாக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் திரும்ப திரும்ப ஒரே மாதிரி காட்சிகள் வருவதை போல தோன்றுகிறது.
படம் எப்படி: வாழ்க்கையின் யதார்த்தத்தை காதல் கண்ணோட்டத்தில் காட்ட முயற்சிக்கும் ஜோ படம், உங்கள் கடந்த கால காதல் நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு அனுபவமாக இருக்கும். ஒரு ஃபீல் குட் மூவி பார்க்க விரும்புவோர் கண்டிப்பாக தவற விடக்கூடாத படம்தான் ஜோ.


Click it and Unblock the Notifications











