ஜோஜூ ஜார்ஜ்ஜின் IRATTA ஓடிடி திரை விமர்சனம்... சேட்டன்மார்களின் அடிபொலி சினிமா... Don't Miss It
சென்னை: மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ள Iratta திரைப்படம் கடந்த மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், Iratta தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி ஓடிடி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள Iratta படத்தின் தமிழ் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

Iratta - இரட்டையர்களின் கதை
இரட்டையர்களான ப்ரோமோத்தும் வினோத்தும் சிறு வயதிலேயே குடும்ப சூழல் காரணமாக பிரிந்துவிடுகின்றனர். காலம் அவர்களை மீண்டும் இணைக்கிறது, அண்ணன் ப்ரோமோத் டிஎஸ்பி-யாகவும், தம்பி வினோத் ஏஎஸ்ஐ-யாகவும் ஒரே போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் சூழல் ஏற்படுகிறது. ஆனால், சிறுவயதில் இருந்த அந்த பிணைப்பு இப்போது இல்லை, ப்ரோமோத் மீது கொலை வெறியோடு அலைகிறான் வினோத். அதற்கான காரணம் என்னவென்பதை சில காட்சிகளில் அழுத்தமாக பார்க்க முடிகிறது.

வினோத்தின் மர்ம மரணம்
வினோத்தின் கேரக்டர் மதம் பிடித்த யானைக்கு சமமானது, அதுவும் மது அருந்திவிட்டால் கேட்கவே வேண்டாம். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, போலீஸ் ஸ்டேஷன் முன்பு ஒரு நிகழ்ச்சிக்காக ஊரே கூடி நிற்கிறது. அந்நேரம் ஸ்டேஷன் உள்ளிருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம், மூன்று குண்டுகள் உடலை சிதைத்தவாறு வினோத் உயிரிழந்து கிடக்கிறான். வினோத் மரணத்தின் போது ஸ்டேஷன் உள்ளே இருந்த மூன்று போலீஸார் மீது சந்தேகம், கூடவே ப்ரோமோத் மீதும்.!

பரபரக்கும் க்ரைம் த்ரில்லர்
வினோத்தை கொலை செய்தது யார் என விசாரணை தொடங்குகிறது. மூன்று போலீஸாரும் ஒவ்வொரு கோணத்தில் சம்பவத்தை விவரிக்கின்றனர், கூடவே அவர்களுக்கும் வினோத்துக்கும் இருந்த முன்பகையையும் சொல்ல வேண்டிய நிர்பந்தம். அதில் வினோத்தின் சில அதிர்ச்சியான மறுபக்கங்கள் தெரிய வருகிறது. ஒருகட்டத்தில் ப்ரோமோத் இந்த விசாரணையை கையில் எடுக்கிறார், தொடங்கிய வேகத்தில் எல்லாம் முடிவுக்கு வருகிறது. வினோத் மரணம் எப்படி நடந்தது என்பதை அதற்கான சாட்சியங்களோடு விளக்கம் கொடுக்கிறார்.

கொடுந்துயரமான முடிவு
அதோடு முடியவில்லை கதை, பார்ப்பவர்களின் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டதைப் போல இறுதியாக வருகிறது அந்த ட்வீஸ்ட். வினோத் மரணத்தின் பின்னணி என்னவென்பது ப்ரோமோத்துக்கு மட்டுமே தெரிய வருகிறது. அந்த நிமிடத்தில் ரசிகர்களின் நெஞ்சமும் மொத்தமாக உறைந்துவிடும். க்ரைம் த்ரில்லர் என நினைத்து படம் பார்ப்பவர்கள் மண்டையில், இது சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என குட்டு வைக்கிறது Iratta.

மானுட உளவியல் பேசும் Iratta
பொதுவாக இரவு நேரங்களில் ட்ரைவ் செய்கிறவர்களுக்கு "எந்த இடத்தில் தங்களது வாகனத்தின் ஹெட் லைட்டை ப்ரைட்" மோடில் வைக்க வேண்டும் என்ற அடிப்படை புரிதல் கூட கிடையாது. எதிரில் வருவது நமது அண்ணனோ, தம்பியோ, நண்பனோ அல்லது எதேனும் ஒருவகையில் நமக்கு தெரிந்தவராக இருப்பார் என யோசித்தால், ஹெட் லைட் Bright மோடில் இருந்து Dim நிலைக்கு தன்னிச்சையாக மாறிவிடும். இதனால் எதிரில் வருபவர்கள் கண்கள் கூசுவதில் இருந்து தப்பிப்பார்கள், பல விபத்துகளும் சில உயிரிழப்புகளும் தவிர்க்கப்படும். இந்த உளவியல் உட்கூறுதான் இரட்டா படத்தின் மையப்புள்ளி.

சேட்டன்மார்களின் அடிபொலி சினிமா
இந்த மையக்கருவை படத்தின் ஆரம்பம் முதலே பேசியிருந்தால் அது டாக்குமெண்ட்ரி வகையில் வந்து நின்றிருக்கும். Iratta ஒரு பிரசார நெடி நிறைந்த படமாக ரசிகர்களுக்கு அலுப்பு தட்ட வைத்திருக்கும். ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல் நிகழ்காலத்தில் இருந்து காட்சிகளை பின்னோக்கி பின்னோக்கி நகர்த்திச் சென்று க்ளைமேக்ஸ்க்கு நியாயம் சேர்த்திருக்கிறது. சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படங்களில் Iratta ஒரு அடிபொலி சினிமா என்பதை மறுக்கவே முடியாது.

ஜோஜூ ஜார்ஜ் என்ற அசுரன்
இரட்டையர்கள் ப்ரோமோத் - வினோத் பாத்திரத்தில் ஜோஜூ ஜார்ஜ். இவரை ஸ்க்ரீனில் தனியாக பார்த்தாலே டபுள் ஆக்ஷன் மாதிரி தான் இருக்கும், அந்தளவிற்கு நடிப்பில் அசத்துவார். ஆனால், Iratta படத்தில் ரியலாகவே டபுள் ஆக்ஷன், பாடிலேங்குவேஜில் பெரிதாக வித்தியாசம் இல்லையென்றாலும், முக பாவனைகளில் அழுத்தமான உணர்ச்சிகளால் பின்னி எடுக்கிறார். குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் ஜோஜூ ஜார்ஜ் எடுக்கும் அந்த முடிவும், அப்போது அவரின் நடிப்பும் சபாஷ் போட வைக்கிறது.

ஜோஜூ ஜார்ஜ் என்ற அசுரன்
இரட்டையர்கள் ப்ரோமோத் - வினோத் பாத்திரத்தில் ஜோஜூ ஜார்ஜ். இவரை ஸ்க்ரீனில் தனியாக பார்த்தாலே டபுள் ஆக்ஷன் மாதிரி தான் இருக்கும், அந்தளவிற்கு நடிப்பில் அசத்துவார். ஆனால், Iratta படத்தில் ரியலாகவே டபுள் ஆக்ஷன், பாடிலேங்குவேஜில் பெரிதாக வித்தியாசம் இல்லையென்றாலும், முக பாவனைகளில் அழுத்தமான உணர்ச்சிகளால் பின்னி எடுக்கிறார். குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சியில் ஜோஜூ ஜார்ஜ் எடுக்கும் அந்த முடிவும், அப்போது அவரின் நடிப்பும் சபாஷ் போட வைக்கிறது.

ஒரேயொரு குறைதான், ஆனால்...
ஜோஜூ ஜார்ஜ்ஜுக்கும் அஞ்சலிக்கும் இடையேயான காதல் காட்சிகள் கொஞ்சம் நீளமானதாகவும் பொறுமையை சோதிக்கும் விதமாகவும் உள்ளன. ஆனால், அங்கிருந்து தான் ஜோஜூ ஜார்ஜ்ஜின் உண்மையான மனநிலையை பிரதி எடுக்கிறது Irattaவின் க்ளைமேக்ஸ். அஞ்சலி மீதான காமல் காதலாக மாறும் தருணம் படத்தில் முக்கியமான ஒன்று. க்ரைம் த்ரில்லருக்கான வேகம் திரைக்கதையில் இல்லையென்றாலும் பாத்திரங்களில் இருக்கும் அடர்த்தியான மனக்கூறுகள் மிக முக்கியமானவை. ஓடிடி ரசிகர்கள் கண்டிப்பாக தவறவிடக்கூடாத திரைப்படம் Iratta.

இயக்குநருக்கு சபாஷ்
ரோஹித் எம்ஜி கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜோஜூ ஜார்ஜுடன் அஞ்சலி, ஆர்யா சலீம், ஸ்ரீஜா அஜித், மனோஜ் கே.யூ, ஸ்ரீகாந்த் முரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எல்லோருமே அவர்களின் பாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் பின்னணி இசையும், விஜய்யின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. திரைக்கதையை அற்புதமாக நகர்த்திச் சென்றதில் மனு அண்டனியின் எடிட்டிங் கை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











