Indian 2 OTT: கமலுக்கே இப்படி ஒரு நிலைமையா? முன்கூட்டியே ஓடிடியில் வெளியாகும் இந்தியன் 2!
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஜூலை 12ந் தேதி வெளியானது. படத்திற்கு வந்த மோசமான விமர்சனத்தால், திட்டமிட்ட தேதிக்கு முன்பாகவே இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
1996ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2, 28 ஆண்டுகளுக்கு வந்தது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு மேலாக பலவிதமான பிரச்சனைகளை சந்தித்த இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், படம் 12ந் தேதி வெளியானது. படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் வெளியாகி படு மோசமான விமர்சனத்தை பெற்றது.

மோசமான விமர்சனம்: இத்திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. மேலும், முதல் மூன்று நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ.140 கோடி வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. முதல் பாடகத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசை அமைத்து இருந்த நிலையில், இரண்டாம் பாகத்திற்கு அனிருத் இசை அமைத்து இருந்தார். இதில் தாத்தா வராரு பாடல் படம் வெளியாவதற்கு முன்பே டிரெண்டான போதும், படத்தின் வசூல் எதிர்பார்த்தபடி இல்ல.
இந்தியன் 2: இந்தியன் 2 திரையிடப்பட்ட இடமெல்லாம் வெறிச்சோடி காணப்பட்டதால், படம் தியேட்டரில் இருந்து எடுக்கப்பட்டதை அடுத்து இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்தியன் 2 படம் ஆகஸ்ட் 15ந் தேதி நெட்பிட்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால், தனுஷின் ராயன் திரைப்படம் வெளியான பின், இந்தியன் 2 ஓடிக்கொண்டிருந்த ஒன்றிரண்டு தியேட்டரில் இருந்தும் படத்தை தூக்கிவிட்டதால், சொன்ன தேதிக்கு ஒரு வாரம் முன்கூட்டியே அதாவது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்தியன் 2 திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய நெட்பிட்ளிக்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











