Vaa Vaathiyaar OTT - தியேட்டரில் அடி வாங்கிய வா வாத்தியார்.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
சென்னை: கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான வா வாத்தியார் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸானது. நலனின் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பை படம் சம்பாதித்திருந்தது. ஆனால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய அடியை வாங்கியது. இந்நிலையில் அப்படம் ஓடிடியில் ரிலீஸாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது.
கார்த்தியும், நலன் குமாரசாமியும் இணைந்த படம் வா வாத்தியார். முதன்முறையாக அவர்கள் கூட்டணி வைத்திருந்ததால் ரசிகர்கள் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். எப்படியும் புது வகையான படத்தையோ அல்லது ஃபீல் குட் படத்தையோ ரசிகர்களுக்காக இயக்குநர் படைத்திருப்பார் என்றே நம்பினார்கள். படத்தின் ஷூட்டிங் எல்லாம் மும்முரமாக திட்டமிட்டபடி நடந்து முடிந்தது. க்ரித்தி ஷெட்டி தமிழில் இதன் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து படத்துக்கு சிக்கல்: படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்துவிட்டாலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சில நெருக்கடிகள் ஏற்பட்டன. அந்த நெருக்கடிகள் பொருளாதார ரீதியானது என்றும் பேச்சுக்கள் கிளம்பின. அந்த சிக்கல்கள் காரணமாக பல முறை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. ஒருவழியாக அத்தனை பிரச்னைகளும் முடிந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி ரிலீஸானது.

பெரிய வரவேற்பு இல்லை: படம் தாமதமாக ரிலீஸ் ஆனாலும் ஏமாற்றாது என்றே ரசிகர்கள் நம்பினார்கள். நலனும் தன்னுடைய ஜானரிலிருந்து வெளியே வந்து வேறு மாதிரி ஒரு படம் செய்திருப்பதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இப்படி ஏகப்பட்ட ஹைப்புகளோடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. கதை, திரைக்கதை, இசை என எதிலுமே ரசிகர்களை படம் திருப்திப்படுத்த தவறிவிட்டதால் படம் பார்த்தவர்கள் கொந்தளிப்பின் உச்சத்துக்கு சென்றார்கள்.
கார்த்தியின் நடிப்பும் இரிடேட்டிங்: போதாக்குறைக்கு கார்த்தியின் எம்ஜிஆரின் மேனரிஸ நடிப்பும் ரொம்பவே சோதித்திருந்தது. சில காட்சிகளில் மட்டும்தான் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருந்தது. பெரும்பாலான காட்சிகளில் அதனை பார்க்கவே முடியவில்லை. விமர்சன ரீதியாக அடி வாங்கிய படம் வசூலிலாவது தப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படத்துடன் வெளியான தலைவர் தம்பி தலைமையில் சூப்பராக இருந்ததால் இதைவிட அது அதிகம் வசூலித்தது.
ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு: இந்நிலையில் தியேட்டரில் வெளியான வா வாத்தியார் ஓடிடியில் ரிலீஸாகும் தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது. அதன்படி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை முதல் இப்படம் ஸ்ட்ரீமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டரில் மொரட்டு அடி வாங்கிய வா வாத்தியார் ஓடிடியிலாவது சொல்லிக்கொள்ளும்படியான ரெஸ்பான்ஸை பெறுமா? அல்லது இங்கும் தியேட்டரில் பெற்ற ரிசல்ட்டையே பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications