Raghu Thatha OTT: கீர்த்தி சுரேஷை கைவிடாத ரசிகர்கள்.. ஓடிடியில் ரகு தாத்தாவுக்கு ஏகோபித்த ஆதரவு
சென்னை: தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் கதையாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவிந்திர விஜய் மற்றும் ஆனந்தசாமி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்தப் படம் ரிலீஸ் ஆன காலகட்டத்தில் விக்ரமின் தங்கலான், அருள்நிதியின் டிமான்ட்டி காலனி 2 ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனதால், இந்தப் படத்திற்கு தியேட்டர்களின் எண்ணிக்கை குறைவாகவே கிடைத்தது. இதுமட்டும் இல்லாமல் படம் கொஞ்சம் ஸ்லோ ட்ராமாவாகச் சென்றதால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இப்படியான நிலையில் படம் ஒடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதைவிடவும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றுள்ளது எனலாம். அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே தமிழ்நாடு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படத்தில் ஹிந்தி திணிப்புக்கு எதிராக வைக்கப்பட்ட காட்சிகள் மற்றும் வசனங்கள் அதேபோல் பெண்களை ஒடுக்குவதற்கு எதிரான காட்சிகள் மற்றும் வசனங்கள் ரசிகர்களை படத்தைப் பார்க்கத் தூண்டியது எனக் கூறலாம். படம் பார்க்கச் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்காமல் படக்குழு திருப்தி படுத்தியுள்ளது.

படம் பார்த்த ரசிகை ஒருவர் பேசும்போது, "படம் கொஞ்சம் ஸ்லோவாக போகின்றது என்பது உண்மைதான். ஆனால் படத்தினைப் பார்க்கலாம். இந்தப் படத்தினைப் பார்த்த சிலர் பாதியிலேயே வெளியேறிவிட்டார்கள். அப்பாக்களையும் அண்ணாக்களையும் கூட்டிட்டு வந்து இந்த படத்தை பார்க்கச் சொல்லனும். கீர்த்தி சுரேஷ் மகாநடிகை படத்தினைப் போல் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தினை சிறப்பாக நடித்துள்ளார்" என கூறியது பலரது கவனத்தை ஈர்த்தது.

பெண்ணியம்: அதேபோல் மற்றொரு ரசிகை , இந்தப் படம் கட்டாயம் பெண்களுக்குப் பிடிக்கும். ஆண்களுக்கு இந்தப் படம் பிடிக்கும் என்பது சந்தேகம்தான். படத்தில் பெண்ணியம் பேசியுள்ளார்கள். இந்தி திணிப்பைத்தான் எதிர்க்கின்றார்கள். இந்தி மொழியை எதிர்க்கவில்லை என்பதை தெளிவாக காட்சிபடுத்தியுள்ளனர். எம்.எஸ். பாஸ்கரின் நடிப்பும் சிறப்பாக உள்ளது. படம் கொஞ்சம் ஸ்லோவாக சென்றாலும் படத்தின் க்ளைமேக்ஸ்க்காகவே பார்க்கலாம் என கூறியது படக்குழுவை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. மற்றொருவரோ, படத்தின் முதல் பாதியிலேயே தியேட்டரில் இருந்து வெளியே வந்து விடலாம் என்பதுபோல இருந்தது. ஆனால் கீர்த்தி சுரேஷ் தனது காதாபாத்திரத்தில் சிக்ஸர் அடித்துள்ளார்.

வசூல் விபரம்: தங்கலான், டிமான்ட்டி காலணி 2 போன்ற பெரிய படங்களுடன் ரகு தாத்தா படம் ரிலீஸ் ஆகியதால் படத்திற்கு ஒதுக்கப்பட்ட தியேட்டர்களும் காட்சிகளும் மிகக் குறைவுதான். இதற்கிடையில் வெளியான ரகு தாத்தா படம் தியேட்டரில் கிட்டத்தட்ட ரூபாய் 5 கோடிகளுக்கும் குறைவாகத்தான் வசூல் செய்ததாக கூறப்படுகின்றது.

ஓடிடி: தியேட்டரில் படத்தின் வசூல் குறைவாக இருந்தாலும் படத்திற்கு ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் ஜீ5 ஓடிடி தளத்தில் கடந்த 13ஆம் தேதியில் இருந்து ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது. படம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் 50 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமாக ஓடிடி தளத்தில் ஓடியுள்ளது. இந்தத் தகவலை படக்குழுவும் ஜீ5 நிர்வாகமும் அறிவித்தது. இப்படியான நிலையில் படம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு இதுவரை 100 மில்லியன் நிமிடங்களுக்கும் மேலாக ஸ்ட்ரீம் ஆனதாக கடந்த 21ஆம் தேது படக்குழுவும் ஜீ5 நிர்வாகமும் தெரிவித்தது. படத்திற்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு இருந்து வருவதால், இன்று அதாவது செப்டம்பர் 27ஆம் தேதியில் படத்தின் ஸ்ட்ரீமிங் நேரம் மட்டும் 150 மில்லியன் நிமிடங்களைக் கடந்துள்ளதாக படக்குழுவும் ஜீ5 நிர்வாகமும் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு பிற்பாதியில் ரிலீஸ் ஆன படங்களில் அதிக நேரம் ஸ்ட்ரீம் ஆன படமாக ரகு தாத்தா படம் உருவெடுத்துள்ளது. படத்திற்கு ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது படக்குழுவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











