ஹார்ட் பீட் நாயகியின் ‘கொலைச்சேவல்‘ எப்படி இருக்கு தெரியுமா? ஓடிடியில் மிஸ் பண்ணாம பாருங்க!
சென்னை: வி ஆர் துதிவாணன் எழுதி இயக்கிய கொலைச்சேவல் திரைப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. கலையரசன் மற்றும் ஹார்ட் பீட் இணையத் தொடரின் மூலம் கவனம் பெற்ற தீபா பாலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம், தற்போது ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆர்.பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.வி பாலா தயாரித்துள்ள இந்த படம், சாதாரண கிராமத்து கதையாக ஆரம்பித்து மனதை உலுக்கும் ஆணவக் கொலையின் கொடூர முகத்தை கண்முன் காட்டுகிறது.
கொலைச்சேவல் என்ற படத்திற்கு ஏற்ப முதல் காட்சியே சேவலை மையமாக கொண்டு தொடங்குகிறது. கோவிலிலில் பலியிடுவதற்காக கலையரசன் வீட்டில் சேவல் வளர்க்கப்படுகிறது. கலையரசன் காளி என்கிற கதாபாத்திரத்திலும், நிறைமாத கர்ப்பிணியாக அனுசுயா கதாபாத்திரத்தில் தீபா பாலுவும் இயல்பான நடிப்பால் பார்வையாளர்களை எளிதில் கதைக்குள் இழுத்துச் செல்கிறார்கள்.
கொலைச்சேவல்: காதலித்து குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்துக் கொண்ட இருவரும், குழந்தை பிறப்பதற்கு முன் குலதெய்வ கோவிலில் வழிபாடு நடத்துவதற்காக சொந்த ஊருக்கு வருகிறார்கள். காட்டின் நடுவே அமைந்துள்ள குலதெய்வ கோவிலில் சேவலை பலியிட்டு, பொங்கல் வைக்க வருகிறார்கள். அடர்ந்த அமைதியான காட்டுக்குள் மறைந்து கிடப்பது இரத்தம் சிந்தும் கொடூரம் என்பதை இயக்குநர் மெதுவாக வெளிப்படுத்துகிறார். பொங்கல் வைத்து வழிபாடு முடிந்த பிறகு குடும்பத்தினர் அனைவரும் கிளம்பிச் செல்ல, காளி மற்றும் அனுசுயா மட்டும் சற்று நேரம் அங்கே ஓய்வெடுத்து பேசிக்கொண்டிருக்கும் போது, கதையின் அதிர்ச்சி முகம் வெளிப்படுகிறது.

ஆவணக்கொலை: அனுசுயாவின் அப்பா இருவரையும் சுற்றிவளைத்து கொல்ல முயற்சி செய்கிறார். அதற்கு காரணம். இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பது தான். குடும்பத்தின் "கௌரவம்" காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவும், நம் குடும்பத்தின் வாரிசு வேறு ஜாதியில் பிறக்கக் கூடாது என்ற கொடூர மனநிலையுடன் அனுசுயாவின் பெற்றோரே இந்த கொலைக்கு துணை நிற்பது படம் முழுக்க மனதை நெருட வைக்கிறது. குறிப்பாக குலதெய்வ முன்பே நடக்கும் அந்த ஆணவக் கொலை காட்சிகள் பார்ப்பவர்களை பதறவைக்கின்றன. அப்பா எங்களை விட்டுவிடுங்க என்று கதறி அழும் அனுசுயாவின் காட்சி மனதை கனக்கச் செய்கிறது.
பதபதைக்கும் கிளாமாக்ஸ்: கடைசியில் கர்ப்பிணியான அனுசுயாவை வெட்டி கொன்றும் ஆத்திரம் அடங்காமல், வயிற்றிலிருந்த சிசுவையும் வயிற்றை கிழித்து வெளியில் எடுத்து கொடூரமாக கொல்லும் காட்சி பார்ப்பார்களை கண்கலங்க வைத்துவிட்டது, கிளைமாக்ஸ் முடிந்த பிறகும் அந்த காட்சியின் தாக்கம் நீண்ட நேரம் மனதில் இருந்து அகலவில்லை, திரையரங்குகளில் வெளியாகிய போது பெரிய வரவேற்பைப் பெறாத கொலைச்சேவல் திரைப்படம் ஓடிடியில் வெளியாகிய பிறகு பலராலும் பேசப்படும் படமாக மாறியுள்ளது.
சாதியின் கொடூரம்: குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. சாதி ஆணவத்தின் பெயரில் இன்னும் நடந்து கொண்டிருக்கும் கொடூரங்களை மிகக் கச்சிதமாகவும் கொந்தளிப்பாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். கலையரசன் தனது மனைவியை காப்பாற்ற போராடும் தருணங்களில் காளியாக வாழ்த்து இருக்கிறார். அதே போல தீபா பாலு நிறைமாத கர்ப்பிணியாக நடித்து பாராட்டை பெற்றுள்ளார். இந்த படம் வெறும் சினிமா அனுபவமாக இல்லாமல் மனசாட்சியையே கேள்வி கேட்கும் படைப்பாக மாறுகிறது. அந்த கடவுளே இறங்கி வந்து சாதி இல்லை என்று சொன்னாலும், சாதியை மனிதன்விட மாட்டார் என்ற கருதிதை இயக்குநர் அழுத்தமாக மனதில் பதியவைத்துள்ளார். வலி, கோபம், காதல், மனிதத்தன்மை இவை அனைத்தையும் கலந்த உணர்ச்சி புயலாக இருக்கும் கொலைச்சேவல் திரைப்படத்தை, வலுவான கதைகளைக் விரும்பும் ரசிகர்கள் தவறாமல் ஒருமுறை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications