Koose Munisamy Review: பெண்களின் மர்ம உறுப்புகளில் கரண்ட் ஷாக்.. பகீர் கிளப்பும் வொர்க்ஷாப்!
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு எல்லாம் இன்ஸ்பிரேஷனே இந்த வீரப்பன் டாக்குமென்ட்ரி சீரிஸ் தான் என்றே எண்ணத் தோன்றும் அளவுக்கு ஒவ்வொரு காட்சிகளும் பதை பதைக்க வைக்கின்றன.
நடிப்பாகவோ சினிமாவாகவோ இல்லாமல் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கரண்ட் ஷாக் சித்ரவதைகள் குறித்து பேசும் போது "காவல் துறை உங்கள் நண்பன்" என்கிற வாசகம் நகைமுரணாகவே மாறுகிறது.
ஜெயலலிதா ஆட்சியில் வீரப்பனை பிடிக்க மக்கள் மீது இவ்வளவு வன்முறை செலுத்தியது மன்னிக்கவே முடியாது என அந்த வெப்சீரிஸில் நடிகை ரோகிணி உள்ளிட்டோர் கொந்தளித்துப் பேசியதையும் காட்டி உள்ளனர்.

வொர்க்ஷாப் வேட்டை: வீரப்பனை பற்றிய பல படங்களும் ஆவணப்படங்களும் வெளியாகி உள்ளன. ஆனால், வீரப்பன் பேசி அவருடைய ஒரிஜினல் காட்சிகள் மற்றும் வீரப்பனை தேடும் வேட்டையில் அரசும் அதிகாரிகளும் மக்களுக்கு செய்த கொடுமைகளை Hunt For எனும் 4வது எபிசோடில் அப்பட்டமாக காட்டி திடுக்கிட வைத்து விடுகின்றனர். அந்த காட்சிகளை பலவீனமானவர்களால் பார்க்கக் கூட முடியாது. விடுதலை படத்தில் சேத்தன் பெண்களை நிர்வாணப்படுத்தி எப்படி டார்ச்சர் செய்வாரோ அதை விட மோசமாக உண்மையிலேயே இப்படியொரு கொடூரத்தை காவல்துறை அதிகாரிகள் செய்ததை பரிவர்த்தனமாக உலகளவிற்கு அம்பலப்படுத்தி உள்ளது இந்த வெப்சீரிஸ்.
நிர்வாணமாக்கி கரண்ட் ஷாக்: அந்த 4வது எபிசோடின் தொடக்கத்திலேயே போலீஸ் அதிகாரி ஒருவர் ஒரு பெண்ணை கட்டி வைத்து ஆடைகளை உருவி நிர்வாணமாக்கி அந்த பெண்ணின் மார்பு காம்புகளில் கரண்ட் ஷாக் கொடுக்கும் கொடுமையான காட்சிகள் காட்டப்பட்டு கண்ணீரை வரவழைத்து விடுகிறது. இப்படி அந்த ஊரில் சுமார் 8 பெண்களுக்கு மார்பு காம்பே இல்லாமல் போயிடுச்சு என சொல்லப்படும் இடங்கள் எல்லாம் நரக வேதனையை கண்முன்னே காட்டுகிறது. ஆண்களையும் அம்மணமாக்கி பிறப்புறுப்புகளில் கரண்ட் ஷாக் கொடுப்பது, பெண்களை வன்புணர்வு செய்வது என பல மோசமான செயல்களை வீரப்பனை பிடிக்க சென்ற அதிரடிபடையினர் செய்து கடைசியில் மெடல் வாங்கிக் குத்திக் கொண்டு பெரிய பதவிகளில் தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருவது சரியா என நக்கீரன் கோபால் கேட்டுள்ளார்.
அதிகார வெறி: கருணாநிதிக்கு ஓட்டுப் போடுங்க, ராமதாஸுக்கு ஓட்டுப் போடுங்க, எம்ஜிஆருக்கு பிறகு ரஜினி அந்த அளவுக்கு நல்லாட்சியை மக்களுக்கு கொடுப்பார் என்றெல்லாம் சொல்லும் வீரப்பன், யாருக்கு வேண்டுமானால் ஓட்டுப் போடுங்க ஜெயலலிதாவுக்கு மட்டும் போடாதீங்க என சொல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. வீரப்பனை பிடிக்க தமிழ்நாட்டில் இருந்து 2000 பேரும் கர்நாடகாவில் இருந்து 6000 போலீஸாரும் சென்ற நிலையில், அவர்கள் காட்டுக்குள் இறங்கி தேடுதல் வேட்டை நடத்தாமல் ஆங்காங்கே வொர்க்ஷாப் எனும் பெயரில் சித்ரவதை செய்யும் காட்சிகள் அதிகார வெறியையே காட்டுகின்றது என்கின்றனர்.
மக்கள் தான் பாவம்: இந்த ஆவணப்படத்தின் சிறப்பே வீரப்பனை ஹீரோவாக காட்டவில்லை. அவனும் 10 வயது சிறுவன் என்றும் பார்க்காமல் கொடூர கொலை செய்தது, பெண்ணை வீட்டுக்குள் பூட்டி தீயிட்டு எரித்தது போன்ற காட்சிகளும் காட்டப்படுகின்றன. வீரப்பனுக்கு உதவி செய்தாய் என அதிரடிப்படையினர் ஒரு பக்கம் சித்ரவதை செய்கின்றனர். என்னை ஏன் காட்டிக் கொடுத்தாய் என வீரப்பனும் அவனது ஆட்களும் மக்களை கொல்கின்றனர். மத்தளம் போல இரண்டு பக்கத்திலிருந்தும் அடிபட்ட மக்களை அரசு காப்பாற்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் காட்டுமிராண்டித்தனத்தையும் மனித உரிமை மீறலையும் எப்படி கட்டவிழ்த்து விட்டது என்பதை காட்டி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











