130 கோடி வசூல் செய்த தனுஷின் குபேரா.. எந்த ஓடிடியில் எப்போ ரிலீஸ் ஆகுது தெரியுமா?

வெற்றிநடை போட்ட குபேரா திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த அதிரடி திரைப்படம், 16 நாட்களில் உலகளவில் ₹132 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் குபேரா திரைப்படமானது பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஜிம் சர்ப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். குபேரா திரைப்படம் ஜூலை 18, 2025 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது.
குபேரா திரைப்படம் குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்ட பிரைம் வீடியோ, "ஒரு எளிய மனிதன், அவனது மீட்புப் பயணத்தின் எளியதல்லாத கதை ✨ #குபேராஆன்பிரைம், ஜூலை 18" என்று குறிப்பிட்டிருந்தது. குபேரா திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டுமல்லாமல், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளிலும் பிரைம் வீடியோவில் கிடைக்கும். இந்த படத்தை சேகர் கம்முலா இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தின் திரைக்கதையை சைதன்யா பிங்கலியுடன் இணைந்து சேகர் கம்முலா எழுதியுள்ளார். சுனில் நாரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் மற்றும் அஜய் கைலா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
குபேரா கதை: மும்பையின் நிழலுலக பின்னணியில் நடக்கும் கதையாக குபேரா திரைப்படம் அமைந்துள்ளது. இப்படமானது பேராசை, லட்சியம் மற்றும் நேர்மையான ஒருவர் ஊழல் நிறைந்த அமைப்பில் ஈடுபடும்போது ஏற்படும் அறநெறி சிக்கல்களை ஆராய்கிறது. மேலும், வறுமையிலிருந்து செல்வாக்கு மிக்க ஒருவராக மாறும் ஒரு பிச்சைக்காரனின் கதையை இப்படம் விளக்குகிறது. தேவா என்ற ஆதரவற்ற மனிதன், ஒரு தொழிலதிபரான நீரஜ் மற்றும் CBI அதிகாரி தீபக் ஆகியோரால் ஒரு சிக்கலான சதிக்குள் திட்டமிட்டு ஈடுபடுத்தப்படுகிறான். இதன் பின்னணியை மையமாக வைத்து கதை நகர்கிறது.
ஓடிடி ரிலீஸ்: குபேரா திரைப்படத்தில் தனுஷ் தேவா என்ற கதாபாத்திரத்திலும், நாகார்ஜுனா தீபக் தேஜ் என்ற கதாபாத்திரத்திலும், ராஷ்மிகா மந்தனா சமீரா என்ற கதாபாத்திரத்திலும், ஜிம் சர்ப் நீரஜ் மித்ரா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து டெல்லிப் தாஹில் நீரஜின் தந்தையாகவும், கே. பாக்யராஜ் ஒரு சாதுவாகவும், சாயாஜி ஷிண்டே அசோக் கட்கோலே SI ஆகவும், ஹரீஷ் பெராடி சித்தப்பாவாகவும், நாசர் அனாதை இல்ல காப்பாளராகவும், சுனைனா தீபக்கின் மனைவியாகவும், பகவதி பெருமாள் போன்றோரும் நடித்துள்ளனர். குபேரா திரைப்படம் வரும் ஜூலை 18ம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது. தனுஷ் ரசிகர்கள் வீட்டில் இருந்தபடியே ஓடிடியில் தனுஷின் அட்டகாசமான நடிப்பை கண்டு ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications











