அனிமல் படத்தை பின்னுக்கு தள்ளிய லாபடா லேடீஸ்.. நெட்ஃப்ளிக்ஸில் செய்த சாதனை தெரியுமா?
மும்பை: அமீர் கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கிய லாபடா லேடீஸ். நித்தன்ஷி கோயல், ஸ்பார்ஷ் ஸ்ரீவத்சவ், பிரதீபா ரந்தா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதனையடுத்து நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றது. இந்தச் சூழலில் நெட்ஃப்ளிக்ஸில் புதிய சாதனையை லாபடா லேடீஸ் படம் படைத்திருக்கிறது. முக்கியமாக அனிமல் படத்தை சாதனையை அது முறியடித்திருக்கிறது.
பாலிவுட்டின் ஸ்டார்களில் ஒருவர் அமீர் கான். இவர் கிரண் ராவை திருமணம் செய்துகொண்டார். பல வருடங்கள் சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்பு பிரிவில் முடிந்தது. இதற்கிடையே அமீர் கான் நடித்த லகான் படத்தில் கிரண் ராவ் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதேபோல் ஷாருக்கான் நடித்த ஸ்வேட்ஸ், மன்சூன் வெட்டிங் உள்ளிட்ட படங்களிலும் அவர் உதவி இயக்குநராக பணியாற்றினார்.

இயக்குநர்: சூழல் இப்படி இருக்க கடந்த 2011ஆம் ஆண்டு அவர் தோபி காட் என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அதில் அமீர் கான், மோனிகா தோக்ரா, கீர்த்தி மல்ஹோத்ரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அமீர் கானும், கிரண் ராவும் இணைந்து அந்தப் படத்தை தயாரித்திருந்தனர். படத்துக்கு சுமாரான வரவேற்பு கிடைத்தாலும் கிரண் ராவ்வின் இயக்கமும், மேக்கிங்கும் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.
லாபடா லேடீஸ்: 2011ஆம் ஆண்டுக்கு பிறகு கிரண் ராவ் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. அதேசமயம் டெல்லி பெல்லி, தலாஷ், தங்கல் உள்ளிட்ட படங்களை அமீர் கான் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்தார். சூழல் இப்படி இருக்க அவர் இப்போது லாபடா லேடீஸ் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் நித்தன்ஷி கோயல், ஸ்பார்ஷ் ஸ்ரீவத்சவ், பிரதீபா ரந்தா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதனையும் அமீர் கான், கிரண் ராவ் உள்ளிட்டோர் இணைந்துதான் தயாரித்திருக்கிறார்கள்.
பெரும் வரவேற்பு: படமானது கடந்த மார்ச் ஒன்றாம் தேதி ரிலீஸானது. திருமணம் என்னும் சடங்கினால் பெண்கள் அனுபவிக்கும் மன வலியையும், பெண் சுதந்திரம், கல்வியின் அவசியம் உள்ளிட்டவைகளை ஆழமாகவும், பொட்டில் அடித்தாற்போலவும் பேசியிருந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் லாபடா லேடீஸை ஏகத்துக்கும் கொண்டாடிவருகிறார்கள். இதனால் பாலிவுட்டில் இந்த வருடத்தின் மெகா ஹிட் படமாக லாபடா லேடீஸ் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அனிமலை ஆஃப் செய்த லாபடா லேடீஸ்: இந்தப் படம் ஓடிடியில் நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீமாகிறது. தற்போது லாபடா லேடீஸ் செம சாதனை ஒன்றை செய்திருக்கிறது. அதாவது இந்தப் படம் ஸ்ட்ரீமாகி ஒரே மாதத்தில் இதுவரை 13.8 மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது. முன்னதாக சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்திருந்த திரைப்படமான அனிமல் படம் அதிக பார்வைகளை பெற்ற படமாக நெட்ஃப்ளிக்ஸில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











