Laapataa Ladies Review: அமீர் கானின் மாஜி மனைவி இயக்கிய படம்.. ’லாபதா லேடீஸ்’ விமர்சனம் இதோ!
மும்பை: அமீர்கான் தயாரிப்பில் அவரது இரண்டாவது மனைவி கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி வெளியான 'லாபதா லேடீஸ்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நம்பர் ஒன் இடத்தில் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் தரமான படத்தை கொடுக்க நினைக்கும் பலரும் பார்க்க வேண்டிய படமாக இது உள்ளது.
பெண்களின் அடக்குமுறையை காமெடி கலந்த படமாக கொடுத்து இந்த சமூகத்துக்கு எதிரான சாட்டையை சுழற்றியிருக்கிறார் கிரண் ராவ். படத்தை பார்க்கும் யாருக்குமே போர் அடிக்காது மற்றும் அது சொல்ல வந்த கருத்துக்களை அப்படியே மூளைக்கு கொண்டு செல்லும் அளவுக்கு இந்த படத்தை இயக்கியிருக்கிறார் கிரண் ராவ்.

5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் 22 கோடி வரை வசூல் செய்தது. ஓடிடியிலும் நல்ல வரவேற்பை இந்த படம் பெற்றுள்ள நிலையில், இதன் விமர்சனத்தை இங்கே காணலாம் வாங்க..
லாபதா லேடீஸ் விமர்சனம்: குக்கிராமத்தில் இருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு நாயகன் தீபக் குமார் ரயிலில் பயணிக்கிறார். ஆனால், அந்த ரயிலில் அதே போல பல புதுமண தம்பதியினர் பயணித்து வருகின்றனர். மணப்பெண் முக்காடு போட்டிருந்த நிலையில், இரவு நேரத்தில் தனது ஊர் வந்து விட்டது என தனது மனைவியை விட்டு விட்டு இன்னொரு பெண்ணை கையை பிடித்து இழுக்க அவரும் இவருடன் வந்து விடுகிறார். தனது வீட்டிற்கு வந்தவுடன் ஆரத்தி எடுத்து பொட்டு வைக்கும் போது தான் பொண்ணு மாறிப்போன விஷயமே தெரிய வருகிறது. அதன் பின்னர் ரயிலில் தொலைத்த தனது மனைவியை தேடி கண்டுபிடித்தாரா? இவர் அழைத்ததும் இன்னொருவரின் மனைவி இவருடன் வந்தது ஏன் என்பதை ஏகப்பட்ட சோஷியல் மெசேஜ்களை அடுக்கி செம காமெடியாக கொடுத்துள்ளனர்.

பெண்களுக்கு முக்காடு ஏன்?: பெண்களுக்கு முக்காடு போட்டு வைக்கும் விஷயத்தை வைத்து இப்படியொரு காமெடி கலந்த சமூக அக்கறை கொண்ட படத்தை கொடுக்க முடியுமா? என்கிற கேள்வி படம் முழுக்கவே பார்ப்பவர்களுக்கு தோன்றும். இதில், நடிகைகளாக நடித்துள்ள நிதான்ஷி கோயல் மற்றும் பிரதீபா ராண்டா என இருவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். முக்காடு போட்டு முகம் மூடப்பட்ட திருமண புகைப்படத்தை வைத்துக் கொண்டு தனது மனைவியை ஹீரோ ஸ்ரீவஸ்தவா தேடும் போது ஒரு இஸ்லாமியர் முக்காடு போட்டு முகம் மறைந்திருந்தால் எப்படி கண்டுபிடிக்கிறது? என நக்கலாக கேட்டு சிரிக்க, உள்ளே இருந்து பர்தா அணிந்தவாறு அவரது மனைவி எட்டிப் பார்க்கும் காட்சிகளிலெல்லாம் குபீர் சிரிப்பு கன்ஃபார்ம்.
இதுதான்டா போலீஸ்: ஆரம்பத்திலேயே அந்த ஊரில் உள்ள போலீஸ்காரர் லஞ்சம் வாங்கும் நபராக காட்டியிருப்பார்கள். ஜெயா எனும் பெயரை மாற்றிக் கொண்டு ஹீரோ வீட்டில் வந்து அவர்கள் குடும்பத்தில் ஒரு நபராக தங்கியிருக்கும் பெண் தனது டாட்டூவை ஸ்ரேயா என மாற்றியதை நொடிப் பொழுதில் கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி ஜெயாவின் நோக்கம் என்ன என்பதை வேவு பார்க்கும் காட்சிகள் எல்லாமே வேறலெவல். கடைசியில் ஜெயாவை கைது செய்து அந்த போலீஸ் அவளுடைய கணவரிடம் ஒப்படைத்த பின்னர் வரும் காட்சியில் தான் அந்த போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ரவி கிஷன் நடிப்பு அனைவராலும் பாராட்டப்படும் அளவுக்கு உள்ளது.

வொர்த்தான படம்: நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இந்தி மொழியில் இருக்கும் இந்த படத்தை எப்படி பார்க்க என நினைத்து விட வேண்டாம். மஞ்சுமெல் பாய்ஸ் படம் தியேட்டரில் மலையாளத்தில் வந்த போதே ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். நல்ல சினிமாவுக்கு மொழி பிரச்சனையாக இருக்காது என்பார்கள். அந்த உணர்வை இந்த படம் அப்படியே காட்சிகளின் வாயிலாக கடத்துகிறது. இந்த உலகில் மோசமான மனிதர்கள் மட்டுமின்றி நல்ல மனிதர்களும் இருக்கின்றனர் என்றும் சில சமூக சீர்கேடுகள் காரணமாகத்தான் ஏகப்பட்ட சிக்கல்கள் உருவாகின்றன என்பதையும் பெண்கள் தங்கள் சிறகை விரித்து பறக்க முடிவு செய்து விட்டால் அவர்களை யாரும் எந்த சக்தியும் கட்டுப்படுத்த முடியாது என்பதை அழகாக காட்டியுள்ளனர். நிச்சயம் வொர்த்தான படம் தான்!


Click it and Unblock the Notifications











