JOB LESS: இங்கேயும் வந்துட்டீங்களா மகாராசா..? பிரபல ஓடிடி நிறுவன ஊழியர்கள் 7000 பேர் பணி நீக்கம்!
நியூயார்க்: கொரோனா ஊரடங்கு நேரத்தில் உலகம் முழுவதும் வீடுகளில் முடங்கிக் கிடந்த மக்களுக்கு பெரிய ஆறுதலாக அமைந்தது ஓடிடி தளங்கள்.
திரையரங்குகளுக்கு செல்ல முடியாமல் தவித்த மக்களுக்கு திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மூலம் எண்டர்டெயின் செய்ததில் ஓடிடி தளங்களுக்கு முக்கிய பங்குண்டு.
உலக அளவில் அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஓடிடி தளங்கள்தான் அதிக சப்ஸ்கிரைபர்களுடன் முன்னணியில் உள்ளன.
இந்நிலையில், தற்போது முன்னணி ஓடிடி நிறுவனமான டிஸ்னி ப்ளஸ் தனது ஊழியர்கள் 7000 பேரை பணி நீக்கம் செய்து அதிரடி காட்டியுள்ளது.

ஓடிடி ரசிகர்கள்
கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி அடைந்தன. திரையரங்குகளுக்கு செல்ல முடியாத ரசிகர்கள் ஓடிடி தளங்களில் சினிமா, வெப் சீரிஸ்கள் பார்த்து ரசித்தனர். குறிப்பாக இந்தியா போன்ற நாடுகளில் அதுவரை ஓடிடி தளங்களுக்கு இல்லாத வரவேற்பு கொரோனா காலத்தில் கிடைத்தது. அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் போன்ற ஓடிடி தளங்களுக்கு அதிக சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவைகளில் அமேசான், நெட்பிளிக்ஸ் தளங்களை விடவும் டிஸ்னி ப்ளஸ் குறைவான கட்டணத்தில் சர்வீஸ் வழங்குகிறது. அதனால் டிஸ்னி ப்ளஸ்க்கு ஓடிடி ரசிகர்களிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது.

திடீர் அறிவிப்பு
டிஸ்னி ப்ளஸ் ஓடிடி தளமாக மட்டும் இல்லாமல் ஹாலிவுட் படங்களை தயாரிப்பதிலும் முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில், டிஸ்னி ப்ளஸ் நிறுவனத்தில் இருந்து 7000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கூகுள், ஐபிஎம் போன்ற முன்னணி டெக் நிறுவனங்கள் தொடர்ந்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதனைத் தொடர்ந்து டிஸ்னி ப்ளஸும் 7000 பேரை வேலையில் இருந்து தூக்கியடித்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சிஇஓ விளக்கம்
கடந்த 2021ம் ஆண்டு டிஸ்னி ப்ளஸ் நிறுவனத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் முழுநேர ஊழியர்களாக பணியில் இருந்தனர். இவர்களில் 7000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்து விளக்கம் கொடுத்துள்ள அந்நிறுவனத்தின் சிஇஓ பாப் இகர், "உலகம் முழுவதும் உள்ள தங்கள் ஊழியர்கள் திறமையானவர்கள் தான், அதனால் நான் அதனடிப்படையில் இந்த முடிவை எடுக்கவில்லை" என்றுள்ளார். இவர்தான் டிஸ்னி நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சிஇஓ-வாக பொறுப்பில் உள்ளார். மேலும், இவரது திட்டமிடல் மூலம் மர்வெள், 21ஸ்ட் செஞ்சூரி, ஃபாக்ஸ் போன்ற சினிமா தயாரிப்பு நிறுவனங்களை டிஸ்னி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

மீண்டு வருமா டிஸ்னி?
கொரோனா காலங்களில் டிஸ்னி சப்ஸ்கிரைபர்கள் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ப்ரைமுக்கு மாறியதால் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தது. கடைசி காலாண்டில் டிஸ்னி சப்ஸ்கிரைபர்கள் இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் 2020ல் பாப் இகர் சிஇஓ பொறுப்பிலிருந்து விலகி பாப் சாப்பர் வசம் சென்றது. குறிப்பாக ஐபிஎல் ஏலத்தில் டிஸ்னி மிகப்பெரிய வருமானத்தை இழந்தது. எனவே அவருக்கு பதிலாக மீண்டும் பாப் இகரே மீண்டும் சிஇஓவாக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால் இவரும் 21st century Fox-ஐ வாங்க மிகப்பெரிய தொகையை செலவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஓடிடி தளங்களில் நிலை?
கொரோனா காலங்களில் சினிமா ரசிகர்கள் ஓடிடி தளங்களுக்கு படையெடுத்தனர். அதேபோல் நிலமை சரியானதும் தியேட்டர் டிக்கெட் கட்டணம், பார்க்கிங் கட்டணம், ஸ்நாக்ஸ் விலை உயர்வு போன்றவைகளால் மக்கள் திரையரங்குகளுக்கு அதிகம் செல்லமாட்டார்கள். இனி சினிமாவின் எதிர்காலம் ஓடிடி தளங்களிடம் தான் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் கடந்தாண்டு கேஜிஎஃப், ஆர்.ஆர்.ஆர், விக்ரம், பொன்னியின் செல்வன், காந்தாரா, கடந்த மாதம் வெளியான வாரிசு, துணிவு, ஷாருக்கானின் பதான் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் நிகழ்த்திய வசூல் சாதனை, ஓடிடி தளங்களுக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளன. நல்ல படங்களாக இருந்தால் மக்கள் தியேட்டர் செல்ல தயங்கமாட்டார்கள் என தெளிவாகியுள்ளது. மேலும் ஓடிடி நிறுவனங்களும் சப்ஸ்கிரைப் கட்டணங்களை அதிகரித்து வருவதால் தற்போது அவைகளின் நிலை தான் கேள்விக்குறியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் தான் டிஸ்னி நிறுவனமும் 7000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











