கால்பந்து ரசிகர்களுக்கு குட் நியூஸ்; ஓடிடி-யில் அஜய் தேவகனின் மைதான் ரிலீஸ்!
மும்பை: இந்திய சினிமாவில் ஸ்போர்ட்ஸ் படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக கிரிக்கெட் தொடர்பான படங்கள் என்றால் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே அமோக வரவேற்பு தான். அதே நேரத்தில் ஹாக்கி, கால்பந்து, கபடி, மல்யுத்தம் உள்ளிட்ட விளையாட்டுகள் தொடர்பான படங்களும் இந்திய சினிமாவில் வெற்றிகளை குவித்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி அஜய் தேவகன் பிரியாமணி நடிப்பில் அமித் சர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளியான படம் மைதான். இந்தப் படத்தின் டிரைலர் வெளியானதுமே ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் மீது நல்ல அபிப்பிராயம் ஏற்பட்டது என்றே சொல்லலாம்.

தமிழில் ஏற்கனவே வெளியான கால்பந்து திரைப்படமான பிகில் போன்ற படங்களும் ஹிட் அடித்த நிலையில் இந்தப் படத்தில் என்ன மாதிரியான கால்பந்து விளையாட்டை சொல்லப் போகிறார்கள் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. குறிப்பாக கால்பந்து விளையாட்டு மீது அதிக ஆர்வம் கொண்ட ரசிகர்களை கொண்டிருக்கக்கூடிய மேற்கு வங்காளம் கேரளா போன்ற மாநிலங்களில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரொம்பவே அதிகமாக இருந்தது.
மைதான் திரைப்படம் முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். 1951 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரை இந்திய விளையாட்டு துறையில் கால்பந்தாட்டத்தின் தலைமை பயிற்சியாளராக இருந்த எஸ் ஏ ரஹீமின் வாழ்க்கை வரலாற்றையும், அவரது தலைமையின் கீழ் இந்திய கால்பந்தாட்ட அணி ஏசியன் கேம்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றதையும் படமாக்கி இருந்தார் இயக்குநர் அமித் சர்மா.

குறிப்பாக 1960 கால கட்டங்களில் இந்திய கால்பந்தாட்ட அணி சந்தித்த நெருக்கடிகள், அதிலிருந்து இந்திய அணி மீண்டு, எப்படி ஏசியன் கேம்ஸ் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றது என்பதையும் காட்சிப்படுத்த இயக்குனர் அமித் சர்மா ரொம்பவே மெனக்கட்டுள்ளார். இவரது மெனக்கடல்கள் கொஞ்சமும் வீணாகாமல் காட்சிக்கு காட்சி ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

குறிப்பாக 1951 முதல் 1962 ஆம் ஆண்டு வரை இந்திய கால்பந்தாட்ட அணிக்காக விளையாடிய சுனி கோஸ்வாமி, பி.கே. பானர்ஜி, பீட்டர் தங்கராஜ், துல்சிதாஸ் பலராம், ஜர்னைல் சிங், பிரத்யுத் பர்மன் உள்ளிட்ட வீரர்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது போல் இருந்தது. இயக்குனரின் மெனக்கடலுக்கு நடிகர்களும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் மைதான் படம் ஒரு வெற்றி படமாகவே மாறியது. இதற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் இசையும், ஃபியோடர் லியாஸின் ஒளிப்பதிவும் பக்கபலமாக இருந்தது.

மொத்தம் மூன்று மணி நேரங்களுக்கு மேல் இந்த படம் இருந்தாலும் படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்கள் படத்தை சமூக வலைதளங்களிலும் பாராட்டித் தள்ளினர். இந்தப் இந்த படம் எப்போது ஓ.டி.டி.,யில் வெளியாகும் என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தனர். இந்நிலையில் இன்று அதாவது ஜூன் மாதம் ஐந்தாம் தேதி மைதான் திரைப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பட குழுவும் படத்தின் கதாநாயகன் அஜய் தேவகனும் தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











