Ela Veezha Poonchira Malayalam Crime Thriller Movie Review: மலையாள படம்னா மலையாள படம்தான்யா!
சென்னை: Ela Veezha Poonchira - Crime thriller - ஜானரில் Malayalam மொழியில் வெளியாகி Latest OTT புயலாக வீசிக்கொண்டுள்ளது. சாஹி கபீர் இயக்கத்தில் சோபின் ஷாஹிர் (பிரேமம் படத்தில் பி.டி. வாத்தியாராக வாயில் விசிலோடு சுற்றி வருவாரே அவரேதான்) சுதி கொப்பா, ஜூட் அண்தானி ஜோசப், வின்சென்ட் வடக்கன், அர்ச்சனா பத்மினி, ஜித்து அஷ்ரப் உள்ளிட்ட வெகு சிலர் நடிப்பில் 2022, ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகி வெகு மக்களின் பாராட்டை பெற்ற இந்த படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

கதைன்னு ஒன்றுமே கிடையாதுப்பா.. ஒரு படத்தை எடுத்து கையில் கொடுங்க என்று சொன்னால் அதையும் மக்கள் பாராட்டத்தக்க வகையில் கொடுக்க முடியும் என்றால், அவர் பெயர் Manesh Madhavan என்பதாகத்தான் இருக்கும். ஆம் Ela Veezha Poonchira படத்தின் கேமரா மேன் இவர்தான். இன்னொரு ஹீரோ, படத்தின் முதுகெலும்பு, ஜீவன்.. இப்படி எந்த பெயரை சொல்லியும் இவரை அழைக்க அனைத்து தகுதியும் உண்டு.
மெல்லிய குளிர்.. அவ்வப்போது மழை.. மின்னல்.. தலையை தொட்டுச் செல்லும் மேக கூட்டங்களுடன், ஒரு மலையின் உச்சியில் நீங்கள் தனியாக வாழ்ந்தால் உங்கள் மனதில் எப்படி ஒரு ஈரம் தாலாட்டுமோ, அதை, உட்கார்ந்த இடத்திலேயே உங்களை உணரச் செய்கிறது மனேஷ் மாதவன் கேமரா. படம் முடிந்த உடன் அந்த கைகளை இறுகபற்றி.. "எங்கப்பா இருந்தீங்க, இவ்வளவு நாளா" என கேட்க தோன்றாவிட்டால் நமக்கு கண்ணிருந்து என்ன பயன் என கேட்கச் செய்யும் அளவுக்கான உழைப்பு இவருடையது. ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வித்தியாசமான த்ரில்லர் மூவியாக வந்த ஜோசப் படத்தின் கேமரா மேனாக பணியாற்றியவர் இவர் என்பது கொசுரு தகவல்.

இப்போ மேட்டருக்கு வருவோம்.. (Ela veezha poonchira review):
இயற்கை வளம் சூழ் மலையின் மீது ஒரு போலீஸ் அவுட் போஸ்ட். அதில் இரு போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு மட்டும் போஸ்டிங். கீழே அதிகாரியின் போலீஸ் ஜீப் வருவதை பார்த்த பிறகு, கண்ணாடியை பார்த்து சாவகாசமாக சவரம் செய்துவிட்டு.. "வாங்க சார்" என சல்யூட் அடிக்கும் அளவுக்கு பள்ளத்தாக்கிற்கும், உயரத்தில் செக்போஸ்ட்டில் இருக்கும் போலீஸ்காரர்களுக்கும் உள்ளது பயண தூரம் என்றால் அந்த காட்சி அமைப்பின், நிலவியலின் சுவாரசியத்தை நீங்களே புரிந்து கொள்ளலாம். இந்த தூரம்தான் கதையின் ஜீவ நாடியும் கூட. நம்மை இயற்கையோடு அல்லது படத்தோடு ஒன்ற வைப்பதற்கும் இந்த மலைமேட்டின் தூர தனிமைதான் உதவுகிறது.

கீழேயுள்ள ஊர்களில் வெட்டுபட்டு துண்டாக கிடக்கும் பெண் உடல் பாகங்களை சேகரித்தபடி விசாரணை செய்துவருகிறது இவர்களின் சக போலீஸ் டீம். ஆனால் ஹீரோவும், மற்றொரு கான்ஸ்டபிளும் மேலே தண்ணியடித்தபடி, லுங்கியுடன், சவரம் செய்யாத முகத்தோடு ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்கள். என்ன ஒன்று.. மழை பெய்தால் மட்டும் வீட்டுக்குள் சுருண்டு கொள்ள வேண்டும். அல்லது மின்னல் தாக்கி உயிரிழப்பு நிச்சயம் என்ற இயற்கை பேரிடருடனான ஒரு வாழ்க்கை அங்கே.
இறுதியில் அந்த பெண் உடல் யாருடையது, ஏன் இந்த மலை மேட்டிலுள்ள 2 போலீஸ்காரர்களின் தனிமை வாழ்க்கை படத்தை இழுத்துச் செல்கிறது என்பதற்கான விடை கிளைமாக்சை நெருங்கும்போது கிடைக்கிறது. ஆரம்பத்தின் 10 நிமிடங்கள் படம் பார்த்துவிட்டு 57வது நிமிடம் வரை படத்தை ஓட விட்டுவிட்டு அதற்கு மேலுள்ள பகுதிகளை பார்த்தாலும் புரிந்து கொள்ளக்கூடிய கதையமைப்பில் உள்ளது இந்த படம். அப்புறம் ஏன் இடைப்பட்ட நேரத்தை பார்க்க வேண்டும் என்கிறீர்களா.. அங்குதான் ஒளிந்துள்ளது படத்தின் அழகியல். காட்சிக்கு காட்சி, கேமராமேன் செதுக்கிய காட்சி சிற்பத்தை தரிசிக்கும் தருணங்கள் அங்கேதான் ஒளிந்துகிடக்கின்றன.

ஆரம்ப காட்சியில் சோபின் ஷாஹிர் பஸ் ஒன்றில் ஏறி பயணத்தை தொடங்குவதில் இருந்தே அந்த பயணத்தோடு நம்மை ஒன்ற வைத்து, வித்தை காட்ட ஆரம்பித்த மனேஷ் மாதவன் கேமரா, பெரும் சுனாமியாக சுழன்றடித்து கிளைமேக்சில், புயலுக்கு பிறகான அமைதியாக அடக்கம் காட்டுகிறது. சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், சோபின் ஷாஹிரின் அருமையான நடிப்பு, ஆர்ப்பரிக்கும் கேமரா ஒர்க் ஆகியவை இந்த கிரைம் த்ரில்லர் படத்தை கண்கொட்டாமல் பார்க்க வைக்கிறது.
வீக் என்டுக்கு நல்ல தீனி!


Click it and Unblock the Notifications











